பதிவு: புதன்கிழமை, மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 05:25 AM
சென்னை,
சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக அதிமுக, காங்கிரஸுடன் தவெக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்கவில்லை.
தவிர, பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், தவெக பலம் 107 ஆக குறையும். இந்த சூழலில், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதால், அதிமுகவுடன் தவெக தரப்பு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு கோரி முதலில் காங்கிரஸ் கட்சியுடன்தான் தவெக பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களிடம் 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயன்றது. ஆனால், திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுக்கு ஆதரவு அளிக்க இக்கட்சிகளில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்று எஸ்.பி.வேலுமணியிடமும், பின்னர் சி.வி.சண்முகத்திடமும் செங்கோட்டையன் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்ததாககூறப்படுகிறது. அமைச்சர் பதவி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.
இதை அறிந்த பொதுச் செயலாளர் பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக சார்பாகவே நேரடியாக தவெகவுக்கு ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பிரச்சாரத்தின்போது பாஜகவை தங்கள் கொள்கை எதிரி என்று விஜய் கூறிவந்தார்.
அப்படி இருக்க, பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே தவெகவை ஆதரிப்பது சரியாக இருக்காது என்பதால், கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தை பழனிசாமி இன்று கூட்டியுள்ளார். தவெகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
காங்கிரஸுடன் பேச்சு
இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சியமைக்க விஜய் தங்களிடம் ஆதரவு கோரியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி இந்திய தேசிய காங்கிரஸிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசியலமைப்பை அதன் உணர்வின்படி பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்துக்கே மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர். இதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.
எந்த வகையிலும் பாஜகவும், அதன் கைப்பாவைகளும் தமிழக அரசை நடத்துவதை காங்கிரஸ் அனுமதிக்காது என்பதிலும் உறுதியாக உள்ளது. அதன்படி, தேர்தல் தீர்ப்பில் பிரதிபலித்துள்ள மாநிலத்தின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்குமாறு தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவுடன் பேச்சு
இந்த சூழலில், திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின் சென்னையில் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் லீமா ரோஸ் கூறியதாவது...
லால்குடியில் நான் (அதிமுக), வில்லிவாக்கத்தில் எனது மருமகன் ஆதவ் அர்ஜுனா (தவெக), புதுச்சேரி காமராஜ் நகரில் எனது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (லஜக) என்று ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியிருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இது இறைவன் கொடுத்த பரிசு ஆகும். எங்கள் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக - தவெக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என்று நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக ஆதரவு இல்லை?
இந்த நிலையில், பழனிசாமியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. இந்த சூழலில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது’’ என்றார்.
பிரதமர், ராகுலுக்கு நன்றி
இதற்கிடையே, தேர்தல் வெற்றிக்காக வாழ்த்திய தலைவர்களுக்கு விஜய் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி. மக்களின் நலனே எங்களது ஒரே இலக்கு.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழக மக்களின் நலனில் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் மத்திய அரசின் ஆதரவை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் சிறந்து விளங்குவதிலும், கூட்டு ஒத்துழைப்பு அவசியமான நமது மாநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் உறுதியுடன் இருப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில், தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது. அதற்கு தேவையான ஆதரவை பெற, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், விஜய் தரப்பில் பேச்சு துவங்கியுள்ளது.
இதற்கிடையில், சென்னையில் நேற்று நடந்த த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக விஜய், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள், சென்னை பனையூர் கட்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை சந்திக்க, விஜய் தன் நீலாங்கரை வீட்டில் இருந்து, முதல்வருக்கான போலீஸ் பாதுகாப்பு அணிவகுப்போடு பனையூர் அலுவலகம் வந்தார்.
தேர்தல் வெற்றிக்கு பின், முதல்முறையாக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜய்க்கு, அங்கு கூடியிருந்த த.வெ.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்களை பெற்றுக் கொண்டார். அதன் அடிப்படையில், த.வெ.க.,வின் சட்டசபை குழு தலைவராக விஜய் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
நாம் சந்தித்த முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து, நமக்கு ஓட்டு போட்டுள்ளனர். நான் ஏற்கனவே சொன்னது போல, தமிழக மக்கள் பணபலத்தையும், அதிகார பலத்தையும் துாக்கி வீசி உள்ளனர். சத்தமில்லாமல் 'விசில்' புரட்சி நடந்திருக்கிறது. வெற்றி பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில், இனி தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற மமதை நமக்கு ஒரு துளிகூட இருக்கக் கூடாது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை நமக்கு இருக்கிறது. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்.
நான் ஏற்கனவே சொன்னது போல, நம்மோடு வருவோருக்கு நாம் தான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல, 'ஆட்சி அமைக்கும் வரை, சென்னையை விட்டு எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வெளியூர் செல்லக்கூடாது' என, தவெக தலைவர் விஜய் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு - முதல்வர் விஜய் அறிவிப்பு
பதிவு: சனிக்கிழமை, ஜூன் 13, 2026, வைகாசி, 30, பாரபவ வருடம் 02:20 AM சென்னை, நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்டூர் அணை திறக்கப்படாத நில...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக