வியாழன், 30 ஏப்ரல், 2026

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர் - பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் எதிர்சேவை

பதிவு: வியாழக்கிழமை,  ஏப்ரல் 30, 2026, சித்திரை, 17, பாரபவ வருடம் 08:00 AM

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா என்பது சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத விழா ஆகும். 

மீனாட்சி அம்மன் கோவிலில் இத்திருவிழா முதலில் தொடங்கும். பின்னர் மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள வைணவ தலமான கள்ளழகர் கோவிலில் இந்த விழா தொடங்கும்.

அதன்படி, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், தேரோட்டம் நேற்றும் நடைபெற்றது. 

இதற்கிடையே, அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. 

நேற்று மாலையில் அழகர் மதுரை புறப்பாடு நடந்தது. இதைக்காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். 

கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். கோவிலில் 18-ம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. 

அப்போது கள்ளழகரின் பல்லக்கு உத்தரவு பெற்று நகர்ந்தது. உடனே அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா...' என பக்தி கோஷங்கள் எழுப்பினர். சகல பரிவாரங்கள் முன்செல்ல பக்தர்க ளுக்கு காட்சி அளித்தபடி வந்தார்.

பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இன்று காலையில் மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. 

அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர். அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். 

அழகர், கருப்பணசாமி, அனுமார் வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், தீப்பந்தம் ஏந்தியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றனர். 

அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு வழிபாடுகளுக்கு பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைகிறார்.சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். 

இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகிறார்கள்.அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை 494 மண்டகப்படி களில் இந்தாண்டு கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நாளை மறுநாள் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார திருக்கோலங்களில் காட்சி தருகிறார். 

3-ந்தேதி இரவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெறும். 

4-ந் தேதி மதுரையில் இருந்து அழகர்மலை நோக்கி புறப்படுகிறார். 

5-ந் தேதி காலையில் இருப்பிடம் செல்கிறார். 

6-ந்தேதி உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு: வியாழக்கிழமை,  ஏப்ரல் 30, 2026, சித்திரை, 17, பாரபவ வருடம் 04:30 AM

சென்னை,

மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கடந்த 2021-23 கால கட்டத்தில் தமிழகத்தில் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ முன்னாள் தலைவர் ராஜேஷ் லக்கானி, கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரி அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசனும், சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி சேலம் இ.சரவணன், உசிலம்பட்டி ராஜ்குமார் ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நடந்து வந்தது. அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ், இ.சரவணன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ராஜ்குமார் தரப்பில் வழக்கறிஞர் வேதவிகாஸ் ஆகியோரும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டான்ஜெட்கோ தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பி.குமரேசன் ஆகியோரும் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பு விவரம்: 

புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறையும், ஊழல் தடுப்பு ஆணையமும் முறையாக விசாரிக்கவில்லை. செந்தில் பாலாஜி, ராஜேஷ் லக்கானி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், காசிக்கு எதிராக மட்டும் விசாரணை நடத்தியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணையை 20 மாதங்களாக நடத்தியுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட யார் மீதும் வழக்கு பதியவில்லை.

சுதந்திரமான விசாரணை தேவை என்பதால் சிபிஐக்கு மாற்றுகிறோம். விசாரணைக்கு தமிழக அரசு, டான்ஜெட்கோ, லஞ்ச ஒழிப்புத் துறை ஒத்துழைப்பு தரவேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறை அனைத்து ஆவணங்களையும் 2 வாரங்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ‘‘மின்மாற்றிகள் கொள்முதலில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை’’ என கோவையில் செந்தில் பாலாஜி நேற்று கூறினார்.

திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு - தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்பு

பதிவு: வியாழக்கிழமை,  ஏப்ரல் 30, 2026, சித்திரை, 17, பாரபவ வருடம் 01:10 AM

சென்னை,

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும், மூன்றாம் இடத்தில் தவெகவும் இடம்பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

என்டிடிவி ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ (NDTV's Peoples Pulse) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி திமுக 125 தொகுதிகள் முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தவெக 18-24 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-6 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அக்னி’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணி 169 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 64 தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்’ (chanakya strategies) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி திமுக 145-160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 50-65 தொகுதிகளிலும், தவெக 13-18 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5-8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மேட்ரிஸ்’ (Matrize) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக 122 -132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87-100 தொகுதிகளிலும், தவெக 10-12 தொகுதிகளிலும், மற்றவர்கள் 0-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரிபப்ளிக்-பி மார்க்’ (Republic-P Mark) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி 125-145 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 65-85 தொகுதிகளிலும், தவெக 16-26 தொகுதிகளிலும், மற்றவர்கள் 1-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆக்ஸிஸ் மை இண்டியா’ (Axis My India) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 22 முதல் 32 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டைம்ஸ் நவ் - ஜேவிசி’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 128 முதல் 147 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், தவெக 8 முதல் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன.

அசாம், கேரளா, புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்​டப்​பேர​வை​களுக்​கான தேர்​தல் ஒரே கட்​ட​மாக ஏப்​ரல் 9-ம் தேதி நடந்து முடிந்​தது. தமிழக சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி தேர்​தல் முடிந்​தது.

மேற்​கு​வங்​கத்​தில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்றது. முதல்​கட்ட தேர்​தல் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்த நிலையில், 2-ம் கட்ட தேர்​தல் இன்று நடைபெற்றது. இன்று மாலை 6 மணி​யுடன் தேர்​தல் முடிவுக்கு வந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்​நாட்​டில் 85.1% வாக்​கு​கள் பதி​வாகின. வாக்கு எண்​ணிக்​கை மே 4-ம்​ தேதி நடை​பெற உள்​ளது.

புதன், 29 ஏப்ரல், 2026

தவெக தலைவர் விஜய் ஷீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் - விமான நிலையத்தில் ரசிகர்கள் வரவேற்பு

 
பதிவு: புதன்கிழமை,  ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 04:50 PM

கோபர்கான்,

தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பிரசாரம்  மேற்கொண்டார். 

வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்ட விஜய், தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். 

நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜய், இன்று மராட்டிய மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். 

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மராட்டிய மாநிலம் சென்ற விஜய் அங்கு இருந்து கோவிலுக்கு கார் மூலமாக சென்றார். விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் போலீசார் பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்றனர்.

கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வழியனுப்பிய மக்கள்

பதிவு: புதன்கிழமை,  ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 10:50 AM

திண்டுக்கல்,

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி கொடைக்கானலுக்கு சென்றார்.

அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். 

கடந்த 2 நாட்களாக நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். 

அப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவருடன் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

நேற்றும் அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். 

அப்போது அவருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வைகள் மற்றும் புத்தகங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர். 

அதில் ஒரு சிறுமி, தி.மு.க. வெல்லட்டும் என்ற பாடலை பாடி காட்டினார்.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பின்னர் திடீரென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் சவாரி மேற்கொண்டார். 

பின்பு ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் தேநீர் அருந்தினார். 

அங்கு இருந்த தனியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 4 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டார். 

தனியார் ஓட்டலில் இருந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு வணக்கம் தெரிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். 

மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு வருகிறார்.

இதனிடையே நேற்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்று பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் - மாசி வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்

பதிவு: புதன்கிழமை,  ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 07:15 AM

மதுரை,

மதுரை சித்திரை திருவிழாசைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரையை அடுத்த அழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை விழாக்கள் இணைந்த விழாவாக இந்த பெருவிழா நடந்து வருகிறது. 

மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26-ந் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. 

தொடர்ந்து, சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. 

சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா சிவசிவா முழக்கத்துடனும் தேரை பக்தர்கள் இழுத்து வருகின்றனர்.

பெரிய தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னால் செல்கிறது. தொடர்ந்து, முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கின்றனர். 

அசைந்து வரும் தேரை காண்பதற்காக மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் இன்று மாலையில் அதிர்வெட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்படுகிறார். 

வழிநெடுக சுமார் 500 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகருக்கு நாளை (30-ந் தேதி) மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் வெள்ளமென திரண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. 

விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (1-ந் தேதி) அதிகாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். 

இந்த பக்தி பரவசக்காட்சியை காண, தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆந்திராவில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு - கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கு அடிக்கல் - 1.88 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

 

பதிவு: புதன்கிழமை,  ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 01:45 AM

விசாகப்பட்டினம்,

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 3 இடங்​களில் ரூ.1.35 லட்​சம் கோடி முதலீட்​டில் கூகுள் ஏஐ டேட்டா மையம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவுடன் இணைந்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார். இதன் மூலம் 1.88 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும்.

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினம் தர்​ல​வாடா பகு​தி​யில் நேற்று கூகுள் ஏஐ டேட்டா மையத்​துக்​கான அடிக்​கல் நாட்டு விழா விமரிசை​யாக நடந்​தது. விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்ட மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் மற்​றும் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் அடிக்​கல் நாட்​டினர்.

ரூ.1.35 லட்​சம் கோடி முதலீட்​டில் அமைய உள்ள கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் 1.88 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்​ளது. ஒரு கிகா​வாட்​டுக்கு மேல் திறன் கொண்ட இந்த ஏஐ மையம், விசாகப்​பட்​டினத்​தில் 2028-ம் ஆண்​டுக்​குள் அமைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முதலில், தர்​ல​வா​டா​வில் 266.6 ஏக்​கரிலும், பின்​னர் அடவிவரம் பகு​தி​யில் 160 ஏக்​கரிலும், அனகாபல்லி மாவட்​டம் ராம்​பில்லி அருகே 174.80 ஏக்​கரிலும் இந்த டேட்டா மையங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. இந்த மையம் கட்​டப்​படும்​போதே சிவில், எலக்ட்​ரி​க்கல் மற்​றும் மெக்​கானிக்கல் பிரிவு​களில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்​ளது.

கேம் சேஞ்​சர்

விசாகப்​பட்​டினத்​துக்​குக் கூகுள் ஏஐ டேட்டா மையம் வரவு என்​பது ஒரு கேம் சேஞ்​சர் என ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார். அவர் மேலும் பேசி​ய​தாவது: விசாகப்​பட்​டினத்​துக்கு மட்​டுமல்ல, ஆந்​தி​ரா​வுக்கே இந்த நிகழ்வு ஒரு கேம் சேஞ்​சர்தான்.

ஆந்​திர வரலாற்​றில் இந்த நாள் மறக்க முடி​யாத நாளாகும். இதனால் நான் மத்​திய அரசுக்​கும், கூகுள் நிறு​வனத்​துக்​கும் மனதார நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் நம் நாட்​டின் தகவல் தொழில்​நுட்​பத்​தில் ஒரு புதிய அத்​தி​யா​யம் தொடங்கி உள்​ளது.

தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் ஆந்​தி​ரா​வின் பங்கு மிக முக்​கிய​மாக மாற உள்​ளது. சர்​வ​தேச டேட்டா நுழைவு வாயி​லாக ஆந்​திரா இருக்​கும். மேலும் பல்​வேறு பிரபல நிறு​வனங்​கள் ஆந்​தி​ரா​வுக்கு வர உள்​ளன. இந்த மையம் 2028 நவம்​பர் மாத இறு​திக்​குள் அமைக்​கப்​படும். வரும் ஜூலை மாதத்​தில் போகாபுரம் விமான நிலை​யத் திறப்பு விழா நடை​பெற உள்​ளது. நாங்​கள் நிறு​வனங்​களு​டன் வெறும் ஒப்​பந்​தங்​கள் மட்​டுமே செய்​வ​தில்​லை. அதை முனைப்​புடன் அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்​வ​தில் குறி​யாக உள்​ளோம். இதனால்​தான் பல நிறு​வனங்​கள் ஆந்​தி​ரா​வில் முதலீடு செய்ய முன்​வரு​கின்​றன. இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு பேசி​னார்.

ஏஐ பட்​டினம்

மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது.... 

நாடே பெரு​மிதம் அடை​யும் விதத்​தில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலை​வர் சந்​திர​பாபு நாயுடு. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலத்​தில் ஹைத​ரா​பாத்​தில் ஒரு சைப​ரா​பாத் நகரை உரு​வாக்கி அதை தகவல் தொழில்​நுட்பத் தலைநகர​மாக மாற்றி சாதனை படைத்​தவர் சந்​திர​பாபு நாயுடு.

தற்​போது விசாகப்​பட்​டினம் வருங்​காலத்​தில் ஏஐ பட்​டின​மாக மாறும் வித​மாக கூகுள் ஏஐ டேட்டா மையத்தை இங்கு கொண்டு வந்​துள்​ளார். பிரதமர் மோடி, முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகிய இரு​வரும் தொலைநோக்குப் பார்​வை​யுடன் நாட்டை முன்​னோக்கி கொண்டு செல்​பவர்​கள்.

இளைய சமூகத்​துக்கு எடுத்​துக்​காட்​டாக விளங்கி வருபவர் அமைச்​சர் லோகேஷ். இவருடைய தீவிர முயற்​சிகளால் பணி​கள் விரை​வாக நடை​பெறுகின்​றன.

எலக்ட்​ரானிக்ஸ் தயாரிப்​பில் இந்​தியா சிறந்து விளங்​கு​கிறது. செமி கண்​டக்​டர் தயாரிப்​பில் நம் நாடு முக்​கிய இடம் வகிக்​கிறது. ஒரு டாலர் மதிப்​புள்ள ‘சிப்’ கிடைக்​கா​விடில், மில்​லியன் டாலர் பொருட்​களின் உற்​பத்தி நின்று போய் விடும். ரயில்வே துறை மூலம் ஆந்​தி​ரா​வுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. 

ஒரு லட்​சம் கோடி மதிப்​புள்ள ரயில்வே பணி​கள் ஆந்​தி​ரா​வில் நடை​பெற்று வரு​கின்​றன. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஆந்​தி​ரா​வில் ‘தென் கடலோர ரயில்வே வட்​டம்’ தொடங்​கப்பட உள்​ளது. விரை​வில் புல்​லட் ரயில்​கள் தென் இந்​திய மாநிலங்​களில் பறக்க உள்​ளன.

இதனால், சென்​னை, அமராவ​தி, ஹைத​ரா​பாத், பெங்​களூரு நகரங்​கள் பயனடைய உள்​ளன. அமராவ​தி​யில் இருந்து ஹைத​ரா​பாத்​துக்கு வெறும் 70 நிமிடங்​களில்​ சென்​றடைந்​து விடலாம்​. இவ்​​வாறு அஸ்​வினி வைஷ்ணவ்​ கூறி​னார்​. ​

நிகழ்​ச்​சி​யில்​ மத்​திய அமைச்​சர்​ ​ராம்​மோகன்​ ​நா​யுடு, ​மாநில அமைச்​சர்​ லோகேஷ், கூகுள்​ நிறு​வன பிர​தி​நி​தி​கள்​ உட்​பட மேலும்​ பல உயர்​ அ​தி​காரிகள்​ பங்​கேற்​றனர்​.

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

சித்திரை திருவிழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஏப்ரல் 28, 2026, சித்திரை, 15, பாரபவ வருடம் 09:15 AM

மதுரை,

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. 

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. 

அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன். போரில் தேவர்களை வென்று இறுதியில் சிவபெருமானுடன் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அப்போது வில், அம்புடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் காட்சி தந்தனர். 

இதில், மீனாட்சி அம்மனாக சிவாதித்யன், சுந்தரேசுவரராக சட்டநாத ராஜசேகரன் ஆகியோர் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் கூட்டம் அலைமோதியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது. அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். 

பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக சென்று ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.

தொடர்ந்து 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. 

வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிடத் திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டதைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணைச் சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கத் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. 

பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர். 

10 டன் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்திலிருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியுள்ளனர்.

திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் மணக் கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி இன்று பகல் முழுவதும் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். 

இரவு 7.30 மணிக்கு சுந்த ரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.

திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் காண்பதற்காக வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் தகர பந்தல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. 

இங்கு வெப்பத்தை தணிக்க 300 டன் வரை குளு குளு ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தண் ணீர் பாட்டில், பிரசாத பை வழங்கப்படுகிறது. 

கோவிலின் பகுதிகளில் பெரிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.

திருக்கல்யாண விழாவுக்காக போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீக்சித் தலைமையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் மாசி விதிகளில் போலீசார் உதவி மையம் அமைத்தும், காண்காணிப்பு கோபுரம் மூலமும், டிரோன்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர். மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்துள்ள பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது.

திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் நாளை காலை மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வலம் வரும் திருத்தேரோட்டமும், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா மே 1- தேதியும் நடைபெறுகிறது. 

இதன்மூலம் மதுரை மாநகரம் முழுவதும் விழாக் கோலமாகக் காட்சி அளிக்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஏப்ரல் 28, 2026, சித்திரை, 15, பாரபவ வருடம் 07:00 AM

திருச்செந்தூர், 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார். 

அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். 

பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். 

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், 'வெற்றி வேல்' வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் கடற்கரைக்கும் சென்று விஜய் வழிபாடு செய்தார்.

விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அவரைக் காண மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும் திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - திருமலையில் பக்தர்கள் பாதிப்பு - விற்பனையாளர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஏப்ரல் 28, 2026, சித்திரை, 15, பாரபவ வருடம் 02:30 AM

திருமலை, 

ஆந்​திர மாநிலத்​தில் திடீரென பெட்​ரோல், டீசலுக்கு ஏற்​பட்​டுள்ள தட்​டுப்​பாட்​டால் பொது​மக்​கள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். அதி​லும் குறிப்​பாக பல்​வேறு வெளி​மாநிலங்​களில் இருந்து திரு​மலைக்கு வந்த பக்​தர்​கள் தங்​களின் கார், வேன்​களுக்கு போதிய டீசல், பெட்​ரோல் கிடைக்​காமல் பெரும் அவதிப்​படு​கின்​றனர். இதையடுத்​து, டீலர்​களுக்கு முதல்வர் சந்​திர​பாபு நாயுடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ஆந்​திர மாநிலம் முழு​வதும் திடீரென பெட்​ரோல், டீசலுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதற்கு பல காரணங்​கள் கூறப்​படு​கின்​றன. கடப்​பா, விஜய​வாடா ஆகிய இடங்​களில் உள்ள ஆயில் நிறு​வனங்​களில் ஏற்​பட்​டுள்ள தட்​டுப்​பா​ட்டால், மாநிலம் முழு​வதும் பெட்​ரோல், டீசல் கிடைக்க வில்லை என கூறப்​படு​கிறது. ‘இதெல்​லாம் உண்மை இல்லை. பெட்​ரோல், டீசல் பதுக்​கப்​படு​கிறது.

இதன் மூலம் கள்ள சந்​தை​யில் அதிக விலைக்கு விற்​கலாமென டீலர்​கள் முடி​வெடுத்து வேண்​டுமென்றே மாநிலம் முழு​வதும் பற்​றாக்​குறையை ஏற்​படுத்தி உள்​ளனர்’ என்ற தகவலும் வெளி​யாகி உள்​ளது.

ஆந்​திர மாநிலம் முழு​வதும் சுமார் 4,150 பெட்​ரோல் பங்​க்கு​கள் உள்​ளன. இதில் தற்​போது 70 சதவீதத்​துக்​கும் மேலான பங்​க்கு​களில் ‘நோ ஸ்டாக்’ அறி​விப்பு பலகைகள்தான் காணப்​படு​கின்​றன. அண்டை மாநிலங்​களான தெலங்​கா​னா, தமிழகம், கர்​நாடகா உள்​ளிட்ட மாநிலங்​களில் இந்த பிரச்​சினை இல்​லை. ஆனால் திடீரென ஆந்​தி​ரா​வில் மட்​டும் இப்​பிரச்​சினை தலை​தூக்க காரணம் என்ன என்​பது குறித்து மாவட்ட ஆட்​சி​யர்​கள், டீலர்​களு​டன் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்​தி​னார்.

பொது​மக்​கள், வியா​பாரி​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள், அரசு மற்​றும் தனி​யார் ஊழியர்​கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்​கப்​படு​வர் என்​பதுடன் சுற்​றுலா துறை​யும் பாதிப்​படை​யும் என்​ப​தால் 24 மணி நேரத்​துக்​குள் பெட்​ரோல், டீசல் பிரச்​சினை தீர்க்​கப்பட வேண்​டும் என ஆட்​சி​யர்​களுக்கு அவர் உத்​தர​விட்​டுள்​ளார்.

ஒவ்​வொரு 3 மணி நேரத்​துக்கு ஒரு​முறை இதுதொடர்​பாக மாநிலம் தழு​விய அறிக்​கையை கொடுக்க வேண்​டும் என்​றும் அறிவுறுத்தியுள்​ளார். நேற்று மாலை வரை​யிலும்கூட திருப்​ப​தி, சித்​தூர், நெல்​லூர், குண்​டூர், கடப்​பா, விஜய​வா​டா, விசாகப்​பட்​டினம், கோதாவரி மாவட்​டங்​கள் என ஆந்​திரா முழு​வதும் எரிபொருள் பிரச்​சினை தீர்ந்​த​பாடில்​லை.

பெட்​ரோல், டீசல் வந்​ததும் குறிப்​பிட்ட பெட்​ரோல் பங்​க்கு​கள் முன்பு வாக​னங்​களுடன் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருக்க தொடங்கி விடு​கின்​றனர். இதனால் சில மணி நேரங்​களி​லேயே பெட்​ரோல், டீசல் விற்றுத் தீர்ந்து விடு​கிறது. திரு​மலை​யிலும் இதே நிலைமை உள்​ள​தால், வெளியூர்​களில் இருந்து கார், வேன்​களில் வரும் பக்​தர்​கள் மிக​வும் அவதிக்கு ஆளாகி உள்​ளனர்.

திரு​மலை​யில் உள்ள 2 பெட்​ரோல் பங்​க்கு​களி​லும் நேற்று மதி​யம் முதல் பெட்​ரோல், டீசல் இல்லை எனும் அறி​விப்பு பலகைகள் வைக்​கப்​பட்​ட​தால் வெகு தூரம் செல்​லும் வாகன ஓட்​டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. ​திரு​மலை​யில் தொடர்ந்து தங்​கு​வதற்கு அறை​களும் கிடைக்​காமல், பெட்​ரோல், டீசலுக்​கும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால் கீழே இறங்கி செல்​ல​வும் முடி​யாமல் வாகன ஓட்​டிகள் தவித்து வரு​கின்​றனர். எனவே, உடனடி​யாக இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண வேண்​டும் என பக்​தர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் மூடிய​தால், உலகின் பல்​வேறு நாடு​களி​லும் பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு உள்​ளிட்​ட​வற்​றுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. எனினும், பின்​னர் படிப்​படி​யாக நிலைமை சீரடைந்து வரு​கிறது.

பெட்​ரோல், டீசல் மற்​றும் எல்​பிஜி ஆகிய​வற்​றின் இருப்பை உறுதி செய்ய மத்​திய அரசு அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்டு வரு​வ​தாக மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் விளக்​கம் அளித்​துள்​ளது. அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் சட்​டம், 1955 மற்​றும் எல்​பிஜி கட்​டுப்​பாட்டு ஆணை, 2000 ஆகிய​வற்​றின் கீழ், விநி​யோகத்​தைக் கண்​காணிக்​க​வும், பதுக்​கல் மற்​றும் கள்​ளச் சந்​தைக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்​க​வும் மாநில அரசுகளுக்கு அதி​காரம் அளிக்​கப்​பட்​டுள்​ளது என்​றும் பெட்​ரோலிய அமைச்​சகம் தெரி​வித்​திருப்​ப​து குறிப்​பிடத்​தக்​கது.

திங்கள், 27 ஏப்ரல், 2026

மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - அர்ச்சனா பட்நாயக்

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 04:50 PM

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.

வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்

வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் துவங்கும்.

முதலில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

தபால் வாக்குகள்

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 லட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80 சதவீதம்) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sector-ல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.

85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர்.

இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8 வரை பெறப்படும்.

வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 06:40 AM

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெப்பம் அதிகளவில் இருப் பதை உணர முடிகிறது. 

வெப்பத்தை அதிகளவில் உணரச் செய்யக் கூடிய 'சூப்பர் எல்நினோ' அக்டோபர் மாதத்தில் உருவாக இருப்பதால், நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் (2027) வெப்பத்தின் கொடுமை சற்று அதிகமாகவே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கோடை மழைக்கு சாதகமான சூழல் எதுவும் இல்லாத காரணத்தாலும் வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், வடக்கு உள்மாவட்டங்களிலும் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதில் அதிகபட்சமாக வேலூரில் வெயில் அதிகமாக சுட்டெரிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு அதாவது இன்று (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (வியாழக்கிழமை) வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சி யஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.


இதேபோல், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும், 30-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் எனவும், அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் கடுமையாக இருக்கும் என்றும், சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந் திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலான காலகட்டங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு அவசியம் இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதாவது குடை எடுத்து செல்வது, தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத் தப்பட்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் 28-ந்தேதிக்கு பிறகு கோடை மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள் என ஆங்காங்கே கோடை மழை தீவிரம் அடையக் கூடும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறினார்.

மே 1 அல்லது 2-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என மற்றொரு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவானால் அது வெப்ப அலை என்று கூறப்படுகிறது.

மே 1-ந்தேதிக்கு பிறகு கோடை மழை ஆங்காங்கே பெய்ய வாய்ப்பு இருப்பதால் வெப்ப அலை வீசுமா? என்பதை அப்போதுள்ள சூழலை பொறுத்தே கணிக்க முடியும் என சொல்லப்படுகிறது.


தேர்தல் முடிவுகள் வெளியானதும் செல்வப்பெருந்தகை மாற்றம் - தமிழக காங்கிரஸுக்கு அடுத்த தலைவர் யார்?

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 03:40 AM

சென்னை,

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான ஓரிரு தினங்​களில் தமிழக காங்​கிரஸுக்கு புதிய தலை​வர் அறிவிக்​கப்​படு​வார் என்​கிற தகவல் வெளி​யாகி​யிருப்​ப​தால் சத்​தி​யமூர்த்தி பவன் அனல் தகிக்​கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தமிழக காங்​கிரஸ் தலை​வ​ராக கே.எஸ்​.அழகிரி நியமனம் செய்​யப்​பட்​டார். காங்​கிரஸ் கட்​சி​யின் விதி​முறை​களின்​படி அவரது பதவிக்​காலம் 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி​யிலேயே நிறைவடைந்​து​விட்​டது. அழகிரி மீது ஏராள​மான புகார்​கள் தலை​மைக்கு சென்​ற​போதும், அகில இந்​திய தலை​மை​யில் நில​விய குழப்​பத்​தால் தமிழக காங்​கிரஸுக்கு புதிய தலை​வர் நியமிப்​ப​தில் தாமதம் ஏற்​பட்​டது. இதற்​கிடை​யில் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் கார்கே சிபாரிசில் கடந்த 2024-ல் தலை​வர் பதவியை தனதாக்​கிக் ​கொண்​டார், செல்​வப்​பெருந்​தகை.

தொண்​டர்​களின் விருப்​பத்​துக்கு மாறாக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக மிகக்​குறுகிய காலத்​திலேயே சத்​தி​யமூர்த்தி பவனில் இருந்து டெல்​லிக்கு புகார்​கள் பறக்க தொடங்​கின. ஆனாலும் கார்​கே​வின் ஆதரவு இருந்​த​தால் அவரது பதவிக்கு எந்த சிக்​கலும் இல்​லை. இந்​நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யானதும் செல்​வப்​பெருந்​தகையை மாற்ற அகில இந்​திய தலைமை முடிவு செய்​திருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கிறது.

இதுகுறித்து சத்​தி​ய மூர்த்தி பவன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் குறைந்​த​பட்​சம் 35 தொகு​தி​களிலா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார்.

ராகுல் காந்தி வருத்தம்

ஆனால் ப.சிதம்​பரத்தை கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்​டு​வந்​து, வெறும் 28 இடங்​களுக்கு அகில இந்​திய தலை​மையை ஒப்​புக்​கொள்ள வைத்​தார் செல்​வப்​பெருந்​தகை. இதில் ராகுல் காந்​திக்​குத் தனிப்​பட்ட முறை​யில் பெரிய வருத்​தம் உண்​டு. தொடர்ந்து வேட்​பாளர் தேர்​விலும் தனது ஆதர​வாளர்​களுக்கே செல்​வப்​பெருந்​தகை முக்​கி​யத்​து​வம் கொடுத்​தது பெரும் சர்ச்​சை​யானது. இதன் உச்​ச​மாக, வேட்​பாளர்​கள் தேர்​வில் ‘பணம் விளை​யாடிய​தாக’ முன்​னாள் தமிழக மகளிர் காங்​கிரஸ் தலை​வர் ஹசீனா சையத் கொடுத்த அதிரடி பேட்டி டெல்லி மேலிடத்தை முகம் சுளிக்க வைத்​தது.

மேலும், பிரச்​சா​ரக் கூட்​டம் ஒன்​றில் ராகுல் காந்​தி​யின் பேச்​சைத் தவறாக மொழிபெயர்த்​தது என செல்​வப்​பெருந்​தகை தொடர்ந்து சர்ச்​சைகளில் சிக்​கி​னார். இதையெல்​லாம் கவனத்​தில் கொண்​டு​தான் புதிய தலை​வரை நியமிக்க டெல்லி முடிவுக்கு வந்​திருக்​கிறது. இதைப் புரிந்​து​கொண்​டே, சமீபத்​தில் ‘தலை​வர் பதவி​யில் இருந்து வில​கத் தயார்’ என செல்​வப்​பெருந்​தகை பேட்​டியளித்​திருந்​தார்.

தற்​போது தலை​வர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, மாணிக்​கம் தாகூர், செல்​ல​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோர் தீவிர​மாக முயன்று வரு​கிறார்​கள். முன்​னாள் தலை​வர்​கள் திரு​நாவுக்​கரசர், கே.எஸ் அழகிரி, தங்​க​பாலு போன்​றவர்​களும் வாய்ப்பை எதிர்​பார்த்து காய் நகர்த்தி வரு​கிறார்​கள்.

காங்கிரஸ் தலைமை உறுதி

ஆனால். ஏற்​கெனவே மாநிலத் தலை​வர் பதவி​யில் இல்​லாத புதி​ய​வர்​களை நியமிக்​கவே டெல்லி தலைமை விரும்​பு​கிறது. போட்டியில் யாருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு புதிய தலை​வரை நியமிக்க வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மிக​வும் உறு​தி​யாக இருக்​கிறது.

இவ்​வாறு அந்த வட்டாரங்கள் தெரி​வித்​தன​.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஏப்ரல் 26, 2026, சித்திரை, 13, பாரபவ வருடம் 04:10 AM

சென்னை,

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான முடிவு​கள் வெளி​யாகும் மே 4-ம் தேதி அன்​று, தவெக தலை​வர் விஜய் ஆஸ்​திரேலியா செல்​ல​வுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​ உள்ளது.

தமிழ்​நாட்​டில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. இதையொட்​டி, கடந்த ஒரு மாத​கால​மாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வந்​தனர். தேர்​தல் முடிந்​துள்ள நிலை​யில், தற்​போது அவர்​கள் தங்​களை ஆசு​வாசப்​படுத்​திக் கொள்​வதற்​காக சுற்​றுலாத் தலங்​களுக்​கு சென்று வரு​கிறார்​கள்.

அந்த வகையில், தவெக தலை​வர் விஜய்​யும் வரும் மே 4-ம் தேதி ஆஸ்​திரேலியா செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகிப் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அன்​றைய தினம்​தான் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யாக இருப்​பது​தான் இதற்கு காரணம்.

இதுகுறித்​து, தவெக வட்​டாரங்​கள் கூறிய​தாவது..

பொது​வாக விஜய் தனது படங்​களின் படப்​பிடிப்பு முடிந்த பிறகு, வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொள்​வதை வழக்​க​மாக வைத்​திருந்​தார்.

தற்​போது, தேர்​தல் பணி​கள் முடிவடைந்​துள்ள நிலை​யில், அவர் வெளி​நாடு செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ளார். அதன்​படி, தேர்​தல் முடிவு​கள் வெளி​யாக​வுள்ள 4-ம் தேதி அவர் ஆஸ்​திரேலியா செல்​லக் கூடும் என்று கூறப்​படு​கிறது. இதற்​காக அவர் டிக்​கெட் முன்​ப​திவு செய்​திருப்​ப​தாக​வும் சொல்​லப்​படு​கிறது.

இருப்​பினும், தேர்​தலில் வெற்றி பெற்று நாங்​கள்​தான் ஆட்சி அமைப்​போம் என்​கிற அசைக்க முடி​யாத நம்​பிக்கை இருக்​கிறது. எனவே, அன்​றைய தினம் முடிவு​கள் எங்​களுக்​குச் சாதக​மாக இருந்​தால், தலை​வர் வெளி​நாடு செல்​லும் முடிவைக் கைவிட்​டு​விடு​வார். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப 5,276 பேருந்துகள் இன்று இயக்கம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஏப்ரல் 26, 2026, சித்திரை, 13, பாரபவ வருடம் 03:30 AM

சென்னை,

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று வழக்கமான 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 3,184 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 5,276 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் சென்னை போன்றபெருநகரங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

கல்லூரிகளிலும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏப்ரல் 21-ம் தேதி முதல் இயக்கம்

சென்னையில் இருந்து கடந்த 21-ம் தேதி வழக்கமான 2,092 பேருந்துகள், கூடுதலாக 1,339 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.89 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். 22-ம் தேதி முதல் 23-ம் தேதி நண்பகல் 12 மணி வரை, வழக்கமான 3 ஆயிரம் பேருந்துகள், கூடுதலாக 4,206 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 7,206 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4.38 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.

அந்த வகையில், தேர்தலை கருத்தில் கொண்டு 21-ம் தேதி முதல் 23-ம் தேதி மதியம் 12 மணி வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் 6.26 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையே, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 22-ம் தேதி இரவு லட்சக்கணக்கான மக்கள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். அன்று மதியம் முதல் மாலை வரை பேருந்துகள் இயக்கம் சீராக இருந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.

பேருந்து நிலையத்துக்குள் நுழையும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறினர். நீண்ட நேரம் காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தவர்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

வாகன நெரிசலால் தாமதம்

சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் திட்டமிட்டபடி பேருந்துகளை இயக்க முடியவில்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருந்தபயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்து, சில மணி நேரத்தில் பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

23-ம் தேதி காலை வரை சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல, பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கும் போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பகல் 12 மணி அளவில் நிலைமை சீரடைந்தது.

இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு திரும்ப வசதியாக 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும், மற்ற பகுதிகளில் 2,500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

அதேபோல, இன்று சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளுக்கு இடையே 3,345 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வாக்களிப்பதற்காக சென்றவர்கள் மட்டுமின்றி, வாரக் கடைசி நாட்களில் மற்றவர்களும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பு

வாக்குப்பதிவுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் இல்லாதபேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.2,700 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3,200 வரையும், மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2,400 முதல் ரூ.3ஆயிரம் வரையும், கோவையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2,800 முதல் ரூ.3,200 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குடும்பத்துடன் பயணம் செய்யும் நடுத்தர மக்கள் இதனால் அதிக சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து துறையும், ஆம்னி பேருந்து சங்கமும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிவரும் நிலையில், சூழ்நிலையைப் பயன்படுத்தி சில தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ப கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சனி, 25 ஏப்ரல், 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - வரலாற்று வாக்குப் பதிவு சதவீதத்தின் பின்னணி....

பதிவு: சனிக்கிழமை,  ஏப்ரல் 25, 2026, சித்திரை, 12, பாரபவ வருடம் 01:15 AM

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்புகள் வாக்குப் பதிவோடு ஓய்ந்துவிட்டவில்லை. தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் அந்த பரபரப்பை சற்றும் குறைந்துவிடாமல் மே 4 வரை நீட்டிக்கும் போல் தெரிகிறது.

இந்த வரலாற்று வாக்குப் பதிவு சதவீதத்தின் பின்னணியில் எஸ்ஆர்ஐ பணிகள், ஜனநாயகக் கடமையாற்றுவதில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஆர்வம், மகளிர் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளால் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தது என்று 3 காரணங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.

எஸ்ஐஆர் தாக்கம்

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85.15% பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.36 சதவீதம் பதிவானது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீதமும் சென்னை மாவட்டத்தில் 83.74 சதவீதமும் பதிவானது.

இந்த வாக்கு சதவீதங்களே மிகத் தெளிவாக இது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) எதிரொலி என்பதை உறுதி செய்கிறது. இந்தப் பணிகள் நடந்தபோதே வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எஸ்ஐஆர் என்பது வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றே மத்திய அரசு ஆரம்பத்தில் கூறிவருகிறது. போலி வாக்காளர்கள் நீக்கம், டூப்ளிகேஷன் களையப்பட்டதன் காரணமாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வாக்குப் பதிவு சதவீதம் விகிதாச்சாரப்படி அதிகரித்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்லாது இதற்கு முன்னர் தேர்தலை எதிர்கொண்ட பிஹார் மற்றும் இப்போது தமிழகத்தோடு தேர்தலை சந்தித்த மேற்கு வங்கத்திலும் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதை சான்றாகக் கூறலாம்.

இளைஞர்களின் எழுச்சி

இரண்டாவதாக ஜனநாயகக் கடமையாற்றுவதில் இளைஞர்களின் எழுச்சி காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் 5.73 கோடி. இதில், சுமார் 1 கோடியே 18 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவீதம். இளம் வாக்காளர்களில் 14.6 லட்சம் முதன்முறை வாக்காளர்கள்.

இந்த முறை களத்தில் தவெக என்ற புதிய கட்சி களம் கண்டது, இளம் தலைமுறை வாக்காளர்களை அதுவும் குறிப்பாக அரசியல் அறிவே அற்ற வாக்காளர்களைக் கூட வாக்களிக்க வைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

விஜய்க்கு வாக்களித்த பலரும் அவரது படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ செல்வது போன்ற கொண்டாட்ட மனநிலையிலும், ’எனக்கு வாக்குரிமை இருக்கிறது, அதைச் செலுத்த முழுக்க அரசியல்வாதியாக இல்லாத சினிமா கம் அரசியல் அந்தஸ்தை தரித்துக் கொண்ட விஜய் இருக்கிறார், எனக்குப் பிடித்த உச்ச நடிகர் அரசியலில் களம் இறங்கியிருக்கிறார், அவரை ஆதரிப்பேன், எனக்குப் பிடித்த நடிகர் அவரது கரியர் உச்சத்தை உதறிவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார், அவரை அரசியலில் வெற்றி பெற வைப்பது எனது கடமை’ போன்ற உணர்வுகளாலேயே அந்தக் கட்சிக்காக வாக்களித்துள்ளனர் என்று தேர்ந்த அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

மேலும், விஜய் தன்னை எம்ஜிஆருக்கு நிகராக நிலைநிறுத்தி, நான் அதேபோன்ற கவர்ச்சியை கொண்டிருக்கிறேன், 1977 புரட்சியை ரீரைட் செய்வேன் என்று வசனம் பேசியதால், அதிமுக அதிருப்தி இளம் வாக்காளர்களின் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்திருக்கலாம் என்றும், திமுகவை அவர் தொடர்ச்சியாக வலுவாக தீவிரமாகத் தாக்கிவந்ததால் திமுக மீதான அபிமானத்தை இழந்த இளைஞர்களையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிலாம் எனக் கூறப்படுகிறது.

நாதக வாக்குகள் கணிசமாக விஜய்க்கு போகும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நிலவிய 4 முனைப் போட்டியில் விஜய் ஒருவராக மூன்று கட்சிகளின் மீதும் வாளைச் சுழற்றி வாக்குகளை சின்னாபின்னமாக சிதறிடித்திருப்பார் என்பதே இப்போதைய கணிப்பாக இருக்கிறது.

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் இருந்தாலும்கூட உதயநிதியை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே திமுக வளர்த்தெடுத்துவிட்டது. அவரும் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். துணை முதல்வராக அவர் இந்தமுறை பிரச்சாரம் செய்தது திமுக பக்கம் கணிசமாக இளைஞர்களை ஈர்த்திருக்கலாம். இன்னொரு புறம் வாரிசு அடையாளமே அதிருப்தி இளைஞர்களை தவெக பக்கம் தள்ளியிருக்கலாம் என்று கணிக்கின்றனர்.

ஆனால், அதிமுக இதுவரை இரண்டாம் கட்ட இளம் முகங்களை வளர்த்தெடுக்கவில்லை. ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் பலரே இந்த முறையும் வேட்பாளர்களாக இருந்துள்ளனர். விஜய்க்கு வேண்டாம் இங்கேயும் ஒரு துடிப்பான இளைஞர் இருக்கிறார் என்று கொள்ளும் அளவுக்கு தமிழகம் முழுவதும் அறிந்த ‘ப்ராமிஸிங் யூத் கேண்டிடேட்’ அதிமுகவில் இல்லை. அதனால் அதிமுக அதிருப்தி இளைஞர்கள், தவெக பக்கம் சென்றிருக்கலாம் என்றும் கணிக்கின்றனர்.

சினிமா மோகமாக இருந்தாலும், அரசியல் அறிவற்றவர்களாக இருந்தாலும் ஒரு குடிமகனின் அடிப்படைக் கடமையான வாக்குரிமையை செயல்படுத்தும் உந்துதலை விஜய்யின் வருகை தந்துள்ளது. அதுவே, இளைஞர்களின் வாக்களிப்பு அதிகமாக இருந்ததற்கும் காரணம் என்பதை முற்றிலுமாக புறந்தள்ளிவிடமுடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார். இதை இத்தோடு விட்டுவிடாமல் திராவிடக் கட்சிகள் இளைஞர்களை, இளம் முகங்கள் மூலம் அரசியல்மயமாக்குவதை ஒரு பயிற்சி போல் செயல்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இல்லையேல், கல்வியில் முன்னேறிய மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் மாநிலத்தில்தான் இளைஞர்கள் கண்மூடித்தனமாக ஹீரோ ஒர்ஷிப் செய்கிறார்கள் என்பது இழுக்கு. அப்படியொரு ‘கல்ட்’ உருவாவது ஆபத்து. அவர்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று வாக்குகளை சிதறடிப்பர் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தேர்தல் முடிவை எழுதும் பெண் சக்தி

தேர்தல் முடிவை எழுதும் அதிகாரம் பெண் சக்தி வசம் வந்துவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலுமே ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் என்ற போக்கு மாறியதில் இருந்தே இந்த அதிகாரம் அவர்களிடம் சென்ற வரலாறு தொடங்கியதாகக் கொள்ளலாம்.

அதனாலேயே மாநிலங்கள் தோறும், தேசிய அளவிலும் பெண்களை முன்வைத்து பல்வேறு திட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வாக்களித்த பெண் வாக்காளர்கள் சதவீதம் 85.76. ஆண் வாக்காளர்கள் 83.57%.

இந்தத் தேர்தலுக்கு ஆளும் திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் பெண்களுக்கான வாக்குறுதிகளை வாரி வழங்கின. மகளிர் உரிமைத் தொகையை செல்லுமிடமெல்லாம் விமர்சித்த அதிமுக, இந்தத் தேர்தலில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என்று அறிவித்தது. குல விளக்கு திட்டத்தின்கீழ் அனைத்து குடும்பப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்று அறிவித்தது.

தவெக ஒருபடி மேலே சென்று 60 வயது வரையிலான அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 என்று அறிவித்தது.

எங்கள் தேர்தல் அறிக்கையே ‘சூப்பர் ஸ்டார்’ என்று திமுக முன்னிலைப்படுத்தி, மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 வழங்கப்படும், பெண்கள் தங்களுக்கு விரும்பிய வீட்டு உபயோகப் பொருளை வாங்கிக் கொள்ள ரூ.8000-க்கான டோக்கன் வழங்கப்படும் என்று கூறியது. இந்த டோக்கன் அறிவிப்பு பெண் வாக்காளர்களை ஈர்க்கும் என்பதே திமுகவின் கணிப்பு.

அது களத்தில் வேலை செய்ததால் பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தனரா அல்லது விரும்பிய பொருள் என்ற ஆப்ஷன் மீது ஈடுபாடின்றி ’அதிமுக அறிவிப்புகள்’ ஓகே என்று அதற்கு வாக்களித்தார்களா அல்லது இரண்டுமே வேண்டாம் மாற்றம் தான் வேண்டும், அதை நாம் பல காலமாக திரையில் பார்த்து ரசித்த பிரபல சினிமா முகம் தரலாம் அல்லவா? வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா என்று வாக்களித்தார்களா என்பது மே 4 தேர்தல் முடிவு சொல்லும்.

எதுவாக இருந்தாலும் பெண் வாக்காளர்களை கவர்வது, அவர்கள் வாக்குகளை பெறுவது என்பது பிரதானக் கட்சிகள், புதிய கட்சிகளின் வியூகமாக இருந்த நிலையில், அதற்கான பலனாக பெண் வாக்கு சதவீதத்தை கொள்ளலாம்.

பிஹார் தேர்தலுக்கு முன்னர், 'முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்' அம்மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 செலுத்தப்பட்டது. மொத்தமாக ரூ.7,500 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்படும் என பிஹார் அரசு தெரிவித்தது. இது தேர்தலில் சிறப்பாக எதிரொலித்தது. பிஹாரில் ஜேடியு - பாஜக வெற்றிக்கு அதுவே வித்திட்டது என ஒட்டுமொத்த ஊடக உலகமும் குறிப்பிட்டது.

இந்நிலையில், பெண் சக்தி தமிழகத்தின் எதிர்காலத்துக்காக எதை தேர்ந்தெடுத்துள்ளது என்பது மே 4 தெரியவரும். அதற்கான முன்னோட்டத்தை மேற்கு வங்க தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடியும் ஏப்.29-ம் தேதி மாலை வெளியாகும் எக்ஸிட் போல்ஸ் ஓரளவுக்கு கட்டியங்கூறும் என எதிர்பார்க்காலம்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

தமிழகத்தில் 84.41% சதவீத வாக்குப்பதிவு - வாக்காளர்கள்... ஆர்வத்துடன் திரண்டனர் - அசம்பாவிதம் எதுவும் இல்லை - மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பதிவு: வெள்ளிக்கிழமை,  ஏப்ரல் 24, 2026, சித்திரை, 11, பாரபவ வருடம் 03:30 AM

சென்னை,

தமிழகத்​தில் இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்​களித்​த​தால், வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்​டி​யுள்​ளது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​த​படி, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் நேற்று ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 14.59 லட்​சம் முதல் தலை​முறை வாக்​காளர்​கள் உட்பட மொத்​தம் 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றிருந்​தனர். இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டிருந்த 75,064 வாக்​குச்​சாவடிகளில் வாக்​குப்​ப​திவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்​கியது.

பாது​காப்பு பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர், 83,875 காவல் துறை​யினர், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

வாக்​குச்​சாவடி பணி​யில் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​பட்​டனர். 1.06 லட்​சம் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இயந்​திரங்​கள் பழுது, வாக்​குப்​ப​திவு தாமதம் போன்ற சிக்​கல்​கள் குறை​வாகவே இருந்​தன.

வாக்​குச்​சாவடிகளின் உள்ளே மற்​றும் வெளியே தலா ஒரு கண்​காணிப்பு கேமரா என மொத்​தம் 1.50 லட்​சம் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டு, சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்து நேரடி​யாக கண்​காணிக்​கப்​பட்​டது.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், திரு​வள்​ளூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் பசுமை வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டு, வாக்​காளர்​களை உற்​சாக​மாக வரவேற்​று, மகிழ்ச்​சி​யுடன் வாக்​களிக்க வைத்​தனர்.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை​யாக அடையாளம் காணப்​பட்டு, நுண்​பார்வை​யாளர்​கள் மேற்​பார்​வை​யில், துப்​பாக்​கி ஏந்​திய துணை ராணுவப் படை​யினரின் பாது​காப்​புடன் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. காலை 7 மணிக்கு வாக்​குப்​ப​திவு தொடங்​கு​வதற்கு முன்​பு, அரசி​யல் கட்சி முகவர்​கள் முன்​னிலை​யில் மாதிரி வாக்​குப்​ப​திவு நடத்​தப்​பட்​டது. பின்​னர் மாதிரி வாக்​கு​களை அழித்​து​ விட்​டு, வாக்​குப்​ப​திவு தொடங்​கியது.

காலை முதலே வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். வெயிலை தவிர்க்​கும் வித​மாக, காலை 7 மணிக்கே முதி​யோர்​கள் அதிக அளவில் வாக்​குச்​சாவடிகளுக்கு வந்து வாக்​கு​களை செலுத்​தினர். சக்கர நாற்​காலி மூலம் முதி​யோர், மாற்​றுத் திற​னாளி​களை அழைத்​துவர தன்​னார்​வலர்​கள் உதவினர். நேற்று முகூர்த்த நாள் என்​ப​தால் பல்​வேறு பகு​தி​களி​லும் புது​மணத் தம்​ப​தி​கள் மணக்​கோலத்​தில் வந்து வாக்​களித்​தனர்.

காலை முதலே வாக்​குப்​ப​திவு

விறு​விறுப்​பாக நடை​பெற்​றது. காலை 9 மணிக்​குள்​ளாக 17.69 சதவீத வாக்​கு​களும், பிற்​பகல் ஒரு மணிக்​குள் 56.81 சதவீத வாக்​கு​களும் பதி​வாகின. குறிப்​பாக, இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து அதிக அளவில் வாக்​களித்​தனர். இதனால், தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டி பதி​வாகி​யுள்​ளது.

சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி மற்​றும் அவரது குடும்​பத்​தினர், தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக், பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், இளை​ய​ராஜா, ரஜினி​காந்த், கமல்​ஹாசன், அஜித் உள்​ளிட்ட திரை​யுல​கினர் பலரும் வாக்​களித்​தனர்.

சில வாக்​குச்​சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேலும் வாக்​குப்​ப​திவு நீடித்​தது. அசம்​பா​விதங்​கள் எது​வுமின்றி தமிழகம் முழு​வதும் அமை​தி​யாக வாக்​குப்​ப​திவு நடந்து முடிந்​தது. பின்​னர், அரசி​யல் கட்சி முகவர்​கள் முன்​னிலை​யில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சீல் வைக்​கப்​பட்​டு, அந்​தந்த தொகு​தி​க்​கான வாக்கு எண்​ணும் மையத்துக்கு கொண்டு செல்​லப்​பட்​டன.

தமிழகம் முழு​வதும் 63 வாக்கு எண்​ணும் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு பாது​காப்பு அறை​யில் (‘ஸ்​டி​ராங் ரூம்’) வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன. இவை சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் 24 மணி நேர​மும் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன. 5 அடுக்கு பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு மையத்​தி​லும் தலா 500 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடைபெறு​கிறது.

எஸ்ஐஆர் பணியால் கிடைத்த பலன்

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.86 சதவீதம் பதிவானது. சென்னை மாவட்டத்தில் 83.09 சதவீதம் பதிவானது.

முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.63 சதவீதம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.94 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.15 சதவீதம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகின.

வியாழன், 23 ஏப்ரல், 2026

இன்று வாக்குப்பதிவு - 4 முனை போட்டி- களத்தில் 4,023 வேட்பாளர்கள்

பதிவு: வியாழக்கிழமை,  ஏப்ரல் 23, 2026, சித்திரை, 10, பாரபவ வருடம் 02:00 AM

சென்னை,

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் இன்று நடை​பெறுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று (வியாழன்) நடை​பெறுகிறது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் தமிழக போலீசாரும், தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

தற்போது கோடையின் வெப்பம் அதிகமாக இருந்தாலும், தலைவர்கள்-வேட்பாளர்களின் பிரசாரங்கள் அதனை விட அனல் கக்கியது.

தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள்நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 4,023 தகுதியுள்ள வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும். 

தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சுதந்திரமாக நடத்த தமிழகத்திற்கு 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. அவர்களில் 136 பேர் பொதுப்பார்வையாளர்கள், 40 பேர் போலீஸ் பார்வையாளர்கள், 150 பேர் செலவினப்பார்வையாளர்கள். 

இந்த தேர்தல் காலகட்டத்தில் பறக்கும் படையினரால் ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20 லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 75 ஆயிரத்து 64 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கை உறுதி செய்யும் 'விவிபாட்' எந்திரங்கள், கட் டுப்பாட்டு எந்திரம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்க 1 மணி நேரத்திற்கு முன்பதாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மற்ற 3 அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பார்கள். 

சிசிடிவி கண்காணிப்பு

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கும். அங்கு நடக்கும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க 3 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டில் வரும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன. 

தலைமை தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வரும் அறை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

புதன், 22 ஏப்ரல், 2026

தமிழக தேர்தல் களத்தில் அனல் பறந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் நிறைவு - ‘48 மணி நேர அமைதி கால’ கட்டுப்பாடுகள் என்னென்ன?

பதிவு: புதன்கிழமை,  ஏப்ரல் 22, 2026, சித்திரை, 09, பாரபவ வருடம் 12:15 AM

சென்னை,

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று மாலையுடன் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து, வாக்​குப்​ப​திவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நேற்று காலை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின், ஆட்டோ ஓட்டியும், இளைஞர்களிடம் செல்ஃபி எடுத்தும் உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தான் போட்டியிடும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தான் போட்டியிடும் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனப்பேரணி சென்று வாக்கு சேகரித்தார். நேற்று மாலையில் காரைக்குடி பாண்டியன் திரையரங்கம் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

தவெக தலைவர் விஜய் நேற்று சென்னையில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். நந்தனத்தில் நடந்த பிரச்சாரத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே கட்​ட​மாக 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யிட்​டது. அன்றைய தினமே நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​தன. தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர், நிலைக் கண்காணிப்​புக் குழு​வினர் தீவிர சோதனை நடத்தி வருகின்​றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

234 தொகுதிகளிலும் மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் களத்தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதற்​காக 75,064 வாக்​குச்​சாவடிகள் தயார் நிலை​யில் உள்​ளன. தேர்​தல் பணி​யில் 83,875 போலீ​ஸார், 40,427 அரசுஊழியர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். பாதுகாப்பு பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவப் படையினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்குப்பதிவு இயந்​திரங்​கள், 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன. வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் வேட்​பாளர்​களின் பெயர், வண்ணப் புகைப்​படம், கட்​சி​யின் சின்​னம் ஆகியவை பொருத்​தப்​பட்​டு, தேர்​தல் நடத்​தும் அதி​காரி​களின் கட்​டுப்பாட்​டில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன. இவை பலத்த பாது​காப்​புடன் நாளை (ஏப்​.22) வாக்​குச்​சாவடி வாரியாக அனுப்பி வைக்​கப்படுகின்றன.

‘அமைதி கால’ வழிகாட்டுதல்கள்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்​தலுக்கான பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் முடிவடைந்தது. நேற்று மாலை 6 மணி முதல் வாக்​குப்​ப​திவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேர அமைதி காலத்​தில் அரசியல் கட்​சிகள் கடைபிடிக்​கவேண்​டிய வழிகாட்டுதல்களை இந்​திய தேர்​தல் ஆணை​யம் வெளியிட்​டுள்​ளது.

ஏப்​.21-ம் தேதி மாலை 6 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை தேர்​தல் தொடர்​பான எந்​தவொரு பொதுக் கூட்டத்​தையோ, ஊர்​வலத்​தையோ யாரும் ஒருங்​கிணைக்கவோ, நடத்​தவோ, அதில் பங்​கேற்​கவோ கூடாது.

தேர்​தல் தொடர்​பான விவ​காரங்​களை திரைப்​படம், தொலைக்​காட்​சி, வானொலி, குறுஞ்​செய்​தி, இணை​யம், வாட்​ஸ்​அப், ஃபேஸ்புக் போன்ற வலை​தளங்​கள் என எந்த வடிவி​லான தகவல் தொடர்பு மூல​மாக​வும் மக்​களின் பார்வைக்கு கொண்​டு​செல்​லக் கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை அல்​லது அபராதம் அல்​லது இரண்​டும் விதிக்​கப்​படும்.

தொகு​திக்கு வெளியே இருந்து அழைத்து வரப்​பட்ட அனைத்து அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், கட்​சிப் பணியாளர்​கள் என தொகுதி வாக்​காளர்​கள் அல்​லாத அனை​வரும் நேற்று மாலை 6 மணிக்கு தொகு​தி​யை​விட்டு வெளி​யேற வேண்​டும்.

நேற்று ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்​மாக் கடைகள், பார்​களை மூடு​மாறும் தேர்​தல் ஆணை​யம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

தமிழக வாக்காள பெரு மக்களே.. நாளை ஓட்டு போட தயாரா? - தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. 

தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

முதல்வர் ஸ்டாலின் கொளத்துார் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இடைப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள், கொளுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களை, 'கவனிக்கும்' பணி, அனைத்து தொகுதிகளிலும் நடந்து வருகிறது. ரொக்கமாக 500 முதல், 5,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இது தவிர, தங்க நாணயம், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள், வேட்டி, சேலை என இலவச பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஐந்து மாநில தேர்தல்களில் பதிவான ஓட்டுகளும், மே 4ல் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

திங்கள், 20 ஏப்ரல், 2026

தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு - உடனடியாக அமலுக்கு வரும் விதிகள்..!

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 20, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 06:30 AM

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. 

தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

நாளை (21.4.2026) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:-

(1). தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

(2). யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

(3). பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.

இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126(2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

4). தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் நாளை மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

(5). கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

(6). வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், நாளை மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

(7). சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு:-

i. அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.

ii. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும்

III. தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.

iv. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

(8). வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

(9). இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக உளவுத்துறை ஐ.ஜி. மாற்றம் - செந்தில்வேலனுக்கு பதில் அவினாஷ் குமார் நியமனம்


 பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 20, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 01:40 AM

சென்னை,

தமிழக காவல் துறையில் உளவுத் துறை ஐ.ஜி.யாக உள்ள செந்தில்வேலன் மாற்றப்பட்டு, புதிய ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நியாயமாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில், முக்கிய நிர்வாக மாற்றங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டம் - ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அது மட்டுமின்றி, பல்வேறு காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோரும் மாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த செந்தில் வேலன் நேற்று மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக, காவல் துறை தொழில்நுட்ப சேவைப் பிரிவு ஐ.ஜி.யாக உள்ள அவினாஷ் குமார் புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறைச் செயலர் உத்தரவு

தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் உளவுத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது.

தேர்தல் விதிமுறைகளை அனைவரும் முறையாக கடைபிடிக்கின்றனரா, வாக்காளர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதா, சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்றுகண்காணிக்கும் முக்கிய பொறுப்புகள் உளவுத்துறைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 23 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணியின்போது இன்னொரு அறை வெடித்தது - போலீஸார் உட்பட 19 பேர் படுகாயம்

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 20, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 01:20 AM

விருதுநகர்,

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மீட்புப் பணி நடந்தபோது ஆலையின் இன்னொரு அறை வெடித்துச் சிதறியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான ‘வனஜா’ என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அறையில் சோல்சா வெடி தயாரிக்கும் பணியின்போது உராய்வு காரணமாக திடீரென பட்டாசு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.

இந்த விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள்யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. உடல்கள் முழுவதுமாக எரிந்ததால் ஆணா, பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த வச்சக் காரப்பட்டி போலீஸார் மற்றும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்தனர்.

ஆனால், பட்டாசுகளை இருப்பு வைத்திருந்த குடோனும் வெடித்துச் சிதறியதால், ஆலைக்குள் மீட்புப் பணிக்காக யாரும் செல்ல முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே, மீட்புப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து வெடி மருந்துகள் வெடித்துச் சிதறியதால் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு அதிர்வு உணரப்பட்டது.

இந்த விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), வீரபத்திரன் (45), இவரது மனைவி சங்கிலித் தங்கம் (40), திருத்தங்கல்லைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), கோவிந்தநல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (23), ஆதிப்பட்டியைச் சேர்ந்த வாழவந்தான் மகன் கதிஷ் (14) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், உடல் கருகிய நிலையிலும் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்து, போலீஸார், தீயணைப்பு வீரர்கள், ஜேசிபிவாகனங்களின் உதவியோடு இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இரவு சுமார் 7.45 மணி அளவில் பட்டாசு ஆலையின் இன்னொரு அறை திடீரென வெடித்துச் சிதறியது. இதில், விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன், 3 போலீஸார், 2 பெண்போலீஸார், ஜேசிபி இயந்திரத்துடன் வந்தவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரிமையாளர் தலைமறைவு: சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோர் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கும் சென்று பார்வையிட்டனர். தமிழக பாஜக தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியபோது, ‘‘விதிமீறலால் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வருகிறது. தேர்தல் நேரம் என்பதால், நிவாரணம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்’’ என்றனர்.

வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இங்கு மத்தாப்பு மற்றும் சோல்சா வெடிகள் தயாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேன்சி ரகபட்டாசுகள் தயாரிக்க அனுமதி இல்லை. இந்த நிலையில், தடையை மீறி மணி மருந்துகளைப் பயன்படுத்தி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விதிமுறைகளை மீறி, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆலை இயங்கியது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...