சனி, 9 மே, 2026
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல் நீடிப்பு
சென்னை,
தற்போதைய நிலவரப்படி த.வெ.க. பெரும்பான்மையை காட்டுவதற்கு 2 இடங்கள் தேவைப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது.
த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் ஆட்சி அமைப்பதற்கு த.வெ.க.வுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது.
தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.
இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் வி.சி.க. ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சியும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து விஜய் இன்று மாலை கவர்னரை சென்று சந்தித்தார்.
அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து நாளை தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது விஜய்க்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதுவரை த.வெ.க. ஆதரவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
த.வெ.க. தலைவர் விஜய் கவர்னரை சந்தித்தபோது, வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவ்வாறு இருக்கும்பட்சத்தில், கவர்னர் ஏற்கனவே கேட்டபடி ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மை இடங்கள் த.வெ.க.வுக்கு இல்லை என்றே தெரிகிறது.
இதனால் த.வெ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி த.வெ.க. பெரும்பான்மையை காட்டுவதற்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகின்றன.
இந்த சூழலில், த.வெ.க.வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமையப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20% மாணவர்கள் தேர்ச்சி - 2,639 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் பெற்று சாதனை
சென்னை,
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 7.92 லட்சம் மாணவ, மாணவிகளில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல, மாணவிகளே முன்னிலையில் உள்ளனர்.
489 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 2,639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை 3,412 தேர்வு மையங்களில் நடைபெற்றது. பதிவு செய்த 7 லட்சத்து 99,528 மாணவ, மாணவிகளில் 7 லட்சத்து 91,654 பேர் தேர்வு எழுதினர். 7,874 பேர் (0.98%) பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, சென்னை டிபிஐ வளாகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, தேர்வுத் துறை இணையதளத்திலும் முடிவுகள் வெளியிடப்பட்டன.
மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் (எஸ்எம்எஸ்), பள்ளிகளுக்கு மின்னஞ்சலிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவு விவரங்கள் அனுப்பப்பட்டன. முதல்முறையாக வாட்ஸ்அப் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 53,694 பேர் (95.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட (95.03%) இது 0.17 சதவீதம் அதிகம். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 3.81 சதவீதம் அதிகம். கடந்த 2013 முதல் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் 1,695 பேர் உட்பட மொத்தம் 16,024 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் (‘சென்டம்’) பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான தேர்ச்சியில் 98.87 சதவீதத்துடன் ஈரோடு முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை (98.05%), கன்னியாகுமரி (97.63%) மாவட்டங்கள் அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் விழுப்புரம் (85.92%) உள்ளது.
தலைநகர் சென்னையில் தேர்ச்சி சதவீதம் 95.43 ஆக உள்ளது. அரசுப் பள்ளிகள் பிரிவிலும் ஈரோடு (98.24%) மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை (96.97%), திருச்சி (96.55%) அதற்கடுத்த 2 இடங்களைப் பிடித்துள்ளன. விழுப்புரம் (82.10%) மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இத்தேர்வில் 7,536 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 489 அரசுப் பள்ளிகள் உட்பட 2,639 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.தனியார் பள்ளிகளின் தேர்ச்சி கடந்த 2023-ல் 99.08%, கடந்த 2024-ல் 98.70%, கடந்த 2025-ல் 98.88% என்று இருந்த நிலையில் தற்போது 98.72% ஆக குறைந்துள்ளது. அதேநேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட சற்று உயர்ந்துள்ளது.
25,521 தனித் தேர்வர்களில் 6,171 பேர் (24%) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 8,855 மாற்றுத்திறன் மாணவர்களில் 6,811 பேர் (76.92%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட (93.20%) இது 16.28% குறைவு. 250 சிறைக் கைதிகளில் 238 பேர் (95.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 வகுப்பில் தனித் தேர்வர்களாக 20,444 பேர் தேர்வு எழுதியதில் 8,491 பேர் (41.53%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13-ம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் மாதம் வழங்கப்படும். விடைத்தாள் நகல் கோரி மே 12 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜூனில் துணைத் தேர்வு
பொதுத் தேர்வு எழுத முடியாதவர்கள், தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியைத் தொடர ஏதுவாக, ஜூன் 29 முதல் ஜூலை 7-ம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு மே 18 முதல் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
கட்ஆஃப் குறையும்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பிரதானமான கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட சற்று குறைந்துள்ளது. தவிர, முழு மதிப்பெண் (‘சென்டம்’) பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 2025-ல் வேதியியல் 3,181, கணிதம் 3,022, இயற்பியல் 1,125 பேர் என ‘சென்டம்’ பெற்ற நிலையில், தற்போது வேதியியல் 632, கணிதம் 732, இயற்பியல் 105 பேர் என குறைந்துள்ளது.
இதனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கட்ஆஃப் 180-200 பிரிவில் 2 முதல் 4 வரையும், 160-179 பிரிவில் 6 முதல் 8 வரையும் மதிப்பெண் குறையும். இதுதவிர, நீட் தேர்வு தேவைப்படாத கால்நடை மருத்துவம் போன்ற இதர மருத்துவப் படிப்புகளுக்கும் கட்ஆஃப் மதிப்பெண் கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மன உறுதி, மனநலனைக் காக்கும் வகையில் தமிழக அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ‘டெலி கவுன்சலிங்’ தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் தயங்காமல் ‘14416’ அல்லது ‘104’ ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் ‘14417’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
கணிதத்தில் 732 மாணவர்கள் 100-க்கு 100
பாடவாரியாக 100-க்கு 100 பெற்றவர்களின் எண்ணிக்கை:
தமிழ் - 83
ஆங்கிலம் - 21
இயற்பியல் - 105
வேதியியல் - 632
உயிரியல் - 784
கணிதம் - 732
தாவரவியல் -31
விலங்கியல் - 18
கணினி அறிவியல் - 6,945
வணிகவியல் - 683
கணக்குப் பதிவியல் - 1,946
பொருளாதாரம் - 440
வரலாறு - 282
புவியியல் - 42
கணினி பயன்பாடுகள் - 2,099
வணிக கணிதம் மற்றும்
புள்ளியியல் - 463
புள்ளியியல் - 17
மனையியல் - 6
கணினி அறிவியலில் தேர்ச்சி வீதம் அதிகம்
பிளஸ் 2 தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி வீதம் அதிகமாகவும், பொருளாதார பாடத்தில் குறைவாகவும் காணப்படுகிறது. தேர்ச்சி வீதம் வருமாறு:
மொழிப்பாடம் - 98.96%
ஆங்கிலம் - 98.74%
இயற்பியல் - 98.87%
வேதியியல் - 98.82%
உயிரியல் - 99.49%
கணிதம் - 99.12%
தாவரவியல் - 98.62%
விலங்கியல் - 98.69%
கணினி அறிவியல் - 99.84%
வணிகவியல் - 97.55%
கணக்குப் பதிவியல் - 98.94%
வரலாறு - 97.90%
புவியியல் - 99.32%
புள்ளியியல் - 99.58
பொருளாதாரம் - 97.54%
மனையியல் - 96.89%
பாடப் பிரிவுகள் (குரூப்) வாரியாக தேர்ச்சி வீதம்:
அறிவியல் பிரிவு - 96.90%
வணிகவியல் - 92.67%
கலை - 85.19%
தொழிற்பாடம் - 85.97%
மாவட்ட வாரியாக ஒட்டுமொத்த தேர்ச்சி (%)
ஈரோடு 98.87
சிவகங்கை 98.05
கன்னியாகுமரி 97.63
திருநெல்வேலி 97.54
திருச்சி 97.50
தூத்துக்குடி 97.24
தஞ்சாவூர் 97.19
தென்காசி 97.18
விருதுநகர் 97.17
நாமக்கல் 97.04
திருப்பூர் 97.03
ராமநாதபுரம் 96.70
கோவை 96.66
சேலம் 96.61
கரூர் 96.20
மதுரை 96.13
திண்டுக்கல் 95.92
புதுக்கோட்டை 95.88
கடலூர் 95.57
சென்னை 95.43
காஞ்சிபுரம் 95.31
தேனி 95.27
பெரம்பலூர் 94.53
நாகப்பட்டினம் 94.38
கள்ளக்குறிச்சி 94.26
நீலகிரி 94.13
திருவள்ளூர் 94.11
திருப்பத்தூர் 93.68
மயிலாடுதுறை 93.51
தருமபுரி 93.49
செங்கல்பட்டு 93.25
தி.மலை 92.87
அரியலூர் 91.70
கிருஷ்ணகிரி 91.31
திருவாரூர் 91.00
வேலூர் 90.73
ராணிப்பேட்டை 88.20
விழுப்புரம் 85.92
வெள்ளி, 8 மே, 2026
தமிழகத்தில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை,
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டது.
இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இதன்படி, பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.
பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று, பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனி தேர்வர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆதரவுடன் அடுத்த முதல்வர்? - ஆளுநரை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்?
சென்னை,
தனித்தே நின்று 108 இடங்களை வென்றும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் விஜய். எனினும் அறுதிப் பெரும்பான்மைக்கு மிக அருகில் நிற்பதால் எப்படியும் விஜய் தமிழக முதல்வராவார் என தவெக-வினர் நம்புகிறார்கள். இதற்கு நடுவே, அதிமுக ஆட்சியமைக்க திமுக நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்திருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்றும் தகவல்கள் தடதடக்கின்றன.
திமுக-வை எதிர்த்தும் விமர்சித்தும் மட்டுமே ஆட்சியைப் பிடித்த இயக்கம் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாக நிற்பதுதான் இரண்டு கட்சிகளுக்குமே நல்லது. அப்படி இருப்பதால் மட்டுமே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. இதனால் இவர்களிடம் ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸால் அதற்குப் பிறகு எழவே முடியவில்லை.
இந்த நிலையில்தான், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் தலைதூக்கியது. ஆனால், அந்தக் கட்சியாலும் இப்போது வரைக்கும் திராவிடக் கட்சிகள் தயவில்லாமல் முன்னுக்கு வரமுடியவில்லை. என்றபோதும், விஜய்யின் வரவால் இம்முறை திராவிடக் கட்சிகளின் தலைமை இல்லாத ஓர் அரசாங்கம் தமிழகத்தில் அமையும் சூழல் உருவாகி இருக்கிறது. காங்கிரஸ், பாஜ கட்சிகளால் சாதிக்க முடியாத இந்த அதிசயத்தை சாதித்துக் காட்டி இருக்கிறார் விஜய்.
இருந்த போதும் அறுதிப் பெரும்பான்மைக்காக, இப்போது திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் தயவை நாடி நிற்கிறார் விஜய். இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பேசி வருகிறார்கள். அதேபோல் பழைய பாசத்தில் விசிக தலைவர் திருமாவளவனிடம் நேற்று முன்தினம் மாலை ஆதவ் அர்ஜுனா நேரடியாகவே பேசி இருக்கிறார்.
முதலில் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக சொன்ன திருமாவளவன், இரவு 8 மணிக்குமேல் ஆதவ் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டபோது வேறுவிதமாக பதில் சொல்லி இருக்கிறார். கம்யூனிஸ்ட்களும் தவெக தரப்புக்கு பிடிகொடுக்கவில்லை. என்றாலும் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கருத்தை இந்த மூன்று கட்சிகளுமே வலியுறுத்தி வருகின்றன. அதேநேரத்தில், இந்தக் கட்சிகளை திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
விசிக, கம்யூனிஸ்ட்களின் ஆதரவுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பாமக தரப்புடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை தவெக. இருப்பினும் இரண்டு தரப்பிலும் சிலர் நட்பு ரீதியில் பேசியபோது, தங்களுக்கு துணை முதல்வர் பதவியை தருவதுடன் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் பாமக தரப்பில் கோரிக்கை வைத்ததாகச் சொல்கிறார்கள். இதற்கு சாத்தியமில்லை என்பதால் மேற்கொண்டு இதுபற்றி தவெக தரப்பில் பேச்சுவார்த்தையை தொடரவில்லை என்கிறார்கள்.
இப்படியான சூழலில்தான், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க ஆலோசனை நடப்பதாக நேற்று முன்தினம் ஒரு செய்தி காட்டுத் தீயாய் கசிந்தது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் கான்வாய் விலக்கப்பட்டதும் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக உள்வட்ட நிர்வாகிகள் சிலர், “இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்றதைவிட தனது தந்தை ஸ்டாலின் தோற்றதை உதயநிதி ஸ்டாலினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. என்ன விலை கொடுத்தாவது இதை சரிசெய்ய வேண்டும் என்
பதில் தீவிரமாய் இருக்கிறார் உதயநிதி. அதிமுக உடன் திமுக கைகோர்க்கிறது என்ற செய்தியும் உதயநிதி தரப்பில் இருந்தே கசிந்திருக்கிறது. இது தொடர்பாக பழனிசாமியின் மகன் மிதுனுடன் நேற்று முன்தினம் உதயநிதி பேசியதாகவும் சொல்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக காலூன்றி இருக்கும் விஜய், ஆட்சியில் அமர்ந்தால் திராவிடக் கட்சிகளில் ஒன்று நிச்சயம் காணாமல் போய்விடும். ஏற்கெனவே கரைந்து கொண்டிருக்கும் அதிமுக அந்த இடத்துக்கு தள்ளப்பட நிறையவே வாய்ப்பிருக்கிறது.
இதையெல்லாம் உணர்ந்தே, அதிமுக தரப்பிலும் ‘திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி’ என்ற செய்திகளை யாரும் மறுக்கவில்லை. மாறாக, “118 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திப்பார் பழனிசாமி” என திடமாகச் சொல்லி இருக்கிறார் புதுச்சேரி மாநில அதிமுக அமைப்பாளர் அன்பழகன்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதில் சொன்ன அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலைகூட, “திமுக ஆதரவு குறித்து பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என்றுதான் சொல்லி இருக்கிறார்.
திமுக - அதிமுக ஆட்சி குறித்த செய்திகளை டெல்லி பாஜக தலைமையும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம், விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவுக் ‘கரம்’ நீட்டி இருப்பது. விஜய் செல்வாக்கில் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது பாஜக. அதன் காரணமாகவே, அறுதிப் பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் பட்டியலைக் கேட்டு விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இழுத்திருக்கிறார் ஆளுநர்.
விஜய் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக பழனிசாமியை வெளியில் இருந்து ஆதரிக்கும் முடிவுக்கு திமுக வந்திருப்பதாக சொல்பவர்கள், “இது தொடர்பாக டெல்லியின் அனுமதியோடு அதிமுக சில மூவ்களை எடுத்து வருகிறது. அதன்படி நேற்றே பழனிசாமி ஆளுநரை சந்திப்பதாக இருந்தது.
ஆனால், விஜய்க்கு சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருந்ததால் நேற்று ஆளுநர் - பழனிசாமி சந்திப்பு நடக்கவில்லை.
புதுச்சேரி சென்ற பழனிசாமி அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தினார். திமுக ஆதரவு குறித்து அப்போது பேசப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, இன்று திமுக ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை பழனிசாமி சந்திக்கக் கூடும் என தெரிகிறது.
விஜய்க்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அமையாத காரணத்தால் நாங்கள் பழனிசாமிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் என திமுக தரப்பில் விளக்கம் கொடுக்கப்படலாம். தங்களின் இந்த முடிவால் விஜய்யை ஆட்சியமைக்க முடியாமல் தடுத்துவிட முடியும் என நம்புகிறார் உதயநிதி.
அதேபோல், பழனிசாமியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதால் அதிமுக-வை பிளவில் இருந்து காப்பாற்ற முடியும் என நினைக்கிறார்” என்கிறார்கள்.
யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிமுக ஆட்சி திமுக ஆதரவில் அமையுமா... திமுக எதிர்ப்பிலேயே வளர்ந்த அதிமுக-வின் எம்எல்ஏ-க்கள் அத்தனை பேரும் ஒரேமுகமாய் இதை ஏற்பார்களா... அல்லது திமுக உறவை காரணம் காட்டி அதிமுக-வில் பிளவு ஏற்படுமா என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
தவெக தலைவர் விஜய் பதவியேற்பதில் சிக்கல் நீடிப்பு - 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயம் என ஆளுநர் மீண்டும் உறுதி
சென்னை,
திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சி தீவிரம்
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர்.
இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’’ என்று உறுதிபட தெரிவித்தார்.
இதன்பிறகு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு திரும்பிய விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தேவைப்படும் 5 இடங்களுக்கு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரும் நடவடிக்கையில் தவெக முக்கிய நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கினர்.
சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் சந்தித்து, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம். ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிப்பார்கள். விஜய் ஏற்கெனவே கூறியபடி, எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் கட்டாயம் பங்கு வழங்கப்படும்’’ என்றார்.
சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கட்சித் தலைவர் காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.
அவரிடம் காதர் மொகிதீன், ‘‘நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக எடுக்கும் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு. ஸ்டாலின் சொன்னால் ஆதரவு அளிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிப்பதாகவும் கூறியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவனிடம் தவெக முக்கிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அழைக்காதது ஏன்? ஆளுநர் விளக்கம்
ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் 2-வது நாளாக நேற்றும் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் என்றும், அழைக்கவில்லை என்றும் மாறி மாறி தகவல்கள் வெளியாகின. இதனால், விஜய் முதல்வராக பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைத்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு என்பது, ஆட்சி அமைப்பதற்கு இன்றியமையாதது. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை இந்த சந்திப்பின்போது ஆளுநர் விளக்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வியாழன், 7 மே, 2026
திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா இல்லை - தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமையுமா?
சென்னை,
தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்' (தவெக), தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது.
அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் தவெக கோரியிருந்தது. இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய், நேற்று பிற்பகல் 1 மணியளவில் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் நிபந்தனைகளை எப்படிக் கையாள்வது, அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்களிப்பு வழங்குவது மற்றும் பதவியேற்பு விழா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் குழுவினர் நேரில் வந்து தமது ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.
ஆலோசனை முடிந்து பிற்பகல் 3 மணியளவில் பனையூர் அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். சரியாக 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை அவர் அடைந்தார். அங்கு ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் பூங்கொத்து கொடுத்து விஜய்யை வரவேற்றார். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்த விஜய்க்கு, ஆளுநர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், 108 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் விஜய் முறைப்படி சமர்ப்பித்தார்.
புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளுநருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு முக்கிய சட்ட நடைமுறையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அதாவது, தவெக.வுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்எல்ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தப் பட்டியலை ஆய்வு செய்த பிறகே, முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தவெகவை பொறுத்த வரை பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு, அதன்பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், ஆளுநர் முழு பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்ததால், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று 7-ம் தேதி விஜய் முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறாமல் தள்ளிப்போகிறது.
எனினும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆளுநர் எம்எல்ஏ.க்களின் முழு பட்டியலைக் கேட்டுள்ளதால், அதை தயாரித்து வழங்கும் பணிகளில் தவெக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து திரும்பிய விஜய், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து ஆதரவு கடிதங்களைப் பெற்று, ஓரிரு தினங்களில் முழு பட்டியலையும் ஆளுநரிடம் வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆளுநரின் அழைப்பு எப்போது வரும்? அடுத்தகட்டமாகப் பதவியேற்பு விழா எந்தத் தேதியில் அமையும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விஜய் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட ஆலோசனைக் குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் நேற்று இரவு தவெக சட்ட ஆலோசனைக் குழுவினர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை 2-வது முறையாகச் சந்தித்துப் பேசினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஆட்சி அமைப்பதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க அ.தி.மு.க. தீவிரம் - தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை
பதிவு: வியாழக்கிழமை, மே 07, 2026, சித்திரை, 24, பாரபவ வருடம் 03:15 AM
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல் த.வெ.க. உள்ளது. இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த சூழலில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க.வில் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என தகவல் வெளியானது.
இதனையொட்டி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது.
ஆனால் திடீரென இந்த கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. . இந்த நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் நேற்று காலை தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பிறகு கே.பி. முனுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, அ.தி.மு.க. பெரிய இயக்கம் என்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சூழலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே உயர்மட்ட அளவில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
காலை முதலே கட்சியின் மூத்த தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது என கூறப்படுகிறது.
த.வெ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அ.தி.மு.க.வுக்கு வெளியில் இருந்து தி.மு.க. ஆதரவு அளிக்க முடிவு என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனினும் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இதனால், அக்கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. பக்கம் சென்று விடுவர்.
அந்த வகையில், தி.மு.க.வுக்கு 68 இடங்கள் இருக்கும். எனினும், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்போது, மொத்த எண்ணிக்கை 121 ஆக இருக்கும். பெரும்பான்மையாக ஆட்சியமைக்க 118 இடங்கள் வேண்டும்.
அந்த வகையில், போதிய அளவிலான இடங்களை இந்த கூட்டணி கொண்டிருக்கும். இதனால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது.
தி.மு.க. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுவதால், அரசு அமைப்பதற்கு ஆதரவு கோரி அதிமுக தரப்பு திமுகவிடம் மறைமுகமான தூதுகளை அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.
எனினும், அதிமுகவின் இந்த முன்மொழிவை திமுக தலைமை நிராகரித்துவிட்டதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் திமுக உறுதியாக உள்ளது என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
திமுக - அதிமுக கூட்டணி எனும் திகில் கிளப்பும் செய்தி றெக்கை கட்டி பறக்கும் நிலையில், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காங்கிரஸ் கட்சி (மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள்) இழைத்த துரோகத்தையும் மீறி, ஒரு வலிமையான எதிர்க்கட்சியாகச் செயல்படவே திமுக முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்குமாறு அதிமுக தரப்பு பாஜகவை வற்புறுத்தி வருகிறது. இது மக்களின் தேர்தல் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம்’ எனத் தெரிவித்து இப்போது பந்தினை அதிமுக பக்கம் தள்ளிவிட்டுள்ளார்.
ஒரு பக்கம் திமுக - அதிமுக கூட்டணி பற்றிய தகவல்கள் தடதடக்கும் நிலையில், மறுபக்கம் திமுக இந்த செய்திகளை புறந்தள்ளியுள்ளது. ஆனாலும், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து என்னவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், எதிர்பார்ப்புகள் இப்போதே எகிறத் தொடங்கிவிட்டது.
தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்
பதிவு: புதன்கிழமை, ஜூன் 17, 2026, ஆனி 03, பாரபவ வருடம் 07:00 சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...








