பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 20, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 01:20 AM
விருதுநகர்,
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மீட்புப் பணி நடந்தபோது ஆலையின் இன்னொரு அறை வெடித்துச் சிதறியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான ‘வனஜா’ என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அறையில் சோல்சா வெடி தயாரிக்கும் பணியின்போது உராய்வு காரணமாக திடீரென பட்டாசு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
இந்த விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள்யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. உடல்கள் முழுவதுமாக எரிந்ததால் ஆணா, பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த வச்சக் காரப்பட்டி போலீஸார் மற்றும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்தனர்.
ஆனால், பட்டாசுகளை இருப்பு வைத்திருந்த குடோனும் வெடித்துச் சிதறியதால், ஆலைக்குள் மீட்புப் பணிக்காக யாரும் செல்ல முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே, மீட்புப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து வெடி மருந்துகள் வெடித்துச் சிதறியதால் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு அதிர்வு உணரப்பட்டது.
இந்த விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), வீரபத்திரன் (45), இவரது மனைவி சங்கிலித் தங்கம் (40), திருத்தங்கல்லைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), கோவிந்தநல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (23), ஆதிப்பட்டியைச் சேர்ந்த வாழவந்தான் மகன் கதிஷ் (14) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், உடல் கருகிய நிலையிலும் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்து, போலீஸார், தீயணைப்பு வீரர்கள், ஜேசிபிவாகனங்களின் உதவியோடு இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இரவு சுமார் 7.45 மணி அளவில் பட்டாசு ஆலையின் இன்னொரு அறை திடீரென வெடித்துச் சிதறியது. இதில், விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன், 3 போலீஸார், 2 பெண்போலீஸார், ஜேசிபி இயந்திரத்துடன் வந்தவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உரிமையாளர் தலைமறைவு: சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோர் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கும் சென்று பார்வையிட்டனர். தமிழக பாஜக தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியபோது, ‘‘விதிமீறலால் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வருகிறது. தேர்தல் நேரம் என்பதால், நிவாரணம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்’’ என்றனர்.
வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இங்கு மத்தாப்பு மற்றும் சோல்சா வெடிகள் தயாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேன்சி ரகபட்டாசுகள் தயாரிக்க அனுமதி இல்லை. இந்த நிலையில், தடையை மீறி மணி மருந்துகளைப் பயன்படுத்தி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விதிமுறைகளை மீறி, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆலை இயங்கியது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக