ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

“ஸ்டாலினை பணியவைக்க மோடி, அமித் ஷாவால் முடியாது” - திருச்சியில் ராகுல் காந்தி பேச்சு - “தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன்” என உருக்கம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஏப்ரல் 19, 2026, சித்திரை, 06, பாரபவ வருடம் 02:00 AM

திருச்சி,

“தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன்” என்றும் உருக்கமாக கூறினார்.

திருச்சி துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “தமிழகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அடிப்படையில் மிக வித்தியாசமான தேர்தல். பாஜக அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அகற்றிவிட்டு, ஒரு பொம்மை முதல்வரை அமர வைக்க முயற்சிக்கிறது.

அதிமுக ஒரு சிறந்த கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிபோய் பாஜகவின் முகமூடியாக மாறி விட்டது.

தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கிறது. தமிழ் என்பது ஒரு தொன்மையான மொழி மட்டுமல்ல. அது தமிழர்களின் ஆன்மா. தமிழ் மக்களின் வீரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. அதனால்தான் பாஜக, அதிமுகவின் ஆன்மாவை கையில் பிடித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என்று பாஜகவுக்கு நன்றாக தெரியும்.

மகளிர் மசோதாவை பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை கொண்டு வரப் பார்த்தனர். இதன்மூலம் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்று நினைத்தனர்.

காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அதை தோல்வி அடையச் செய்துள்ளோம் என்பது மிக பெருமையாக உள்ளது.

பாஜகவினர் மதங்களால், சாதிகளால், மொழியால் மக்களைப் பிரித்து இந்தியாயை துண்டாட பார்க்கிறார்கள். நாட்டின் ஸ்திரத்தன்மையை சிதைக்கப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பாதை சமூக நீதி, சமத்துவ பாதை. அதை பாஜக விரும்பவில்லை. எனவே அதை சிதைக்கப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சமூக நீதி காக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் உள்ளது. சமூக நீதி காப்பது குறித்து மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களவையில் பிரதமர் மோடியால் எங்களை நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை. அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்பாட்டில் உள்ளார். ட்ரம்ப் கூறுவதை உடனடியாக மோடி செய்கிறார். ட்ரம்ப்புக்கு அவர் பணிந்து இருப்பது போல எடப்பாடி பழனிசாமியை தனக்கு பணிந்து இருக்க வைக்கிறார்.

நம்முடைய விவசாயம் உள்ளிட்ட தொழில்கள், தரவுகள் உள்ளிட்ட அனைத்தையும் மோடி அமெரிக்காவுக்கு விற்று வருகிறார். எஃப்ஸ்டீன் கோப்புகள் மூலம் மோடியை ட்ரம்ப் மிரட்டி வருகிறார்.

மோடியும், அமித் ஷாவும் தமிழக முதல்வரை மிரட்டலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.

தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்க நாம் ஒரு போதும் அவர்களை இங்கு அனுமதிக்க முடியாது. பாஜக - ஆர்எஸ்எஸ் ஒருபோதும் தமிழகத்தில் நுழைய முடியாது.

தமிழ்நாட்டுக்கும் எனக்கும் உள்ள உறவை அவர்களால் ஒருபோதும் குலைக்க முடியாது. இது வெறும் அரசியல் உறவு அல்ல. இது அன்பின் உறவு. எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியுடன் என்னையும் தொடரும் பாசப் பிணைப்பு.

நான் உங்களது (தமிழகத்தின்) சிப்பாயாக டெல்லியில் செயல்படுவேன். தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன். நீங்கள் சொல்வதை நான் செய்து முடிப்பேன்” என்று பேசினார்.

முன்னதாக, அவரை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு வரவேற்றார். காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முக்கிய நிர்வாகிகள் உத்தம்குமார் ரெட்டி, கிறிஸ்டோபர் திலக், விஜய் சிங் உட்பட பலர் பங்கேற்றனர். 

திமுக பெரம்பலூர் எம்பி அருண்நேரு நன்றி கூறினார்.

மகளிர் மசோதாவை தோற்கடித்து நல்ல முயற்சியை கருவிலேயே அழித்தனர் - பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஏப்ரல் 19, 2026, சித்திரை, 06, பாரபவ வருடம் 01:40 AM

புதுடெல்லி,

மக்​களவை​யில் மகளிர் இடஒதுக்​கீட்​டுக்​கான மசோ​தாவை தோற்​கடித்​து காங்​கிரஸ், திமுக, திரிண​மூல், சமாஜ்வாதி ஆகிய கட்​சிகள்​ ஒரு நல்ல முயற்சியை கருவிலேயே அழித்துவிட்டன என்று பிரதமர் மோடி குற்​றம் சாட்டி உள்​ளார்.

மகளிருக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​துதற்​காக அரசி​யல் சாசனத் திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோ​தாக்​கள் கடந்த 16-ம் தேதி மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இதில் அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026 மீது மக்​களவை​யில் நேற்று முன்​தினம் வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்​காத​தால் இந்த மசோதா தோல்வி அடைந்​தது. இதைத் தொடர்ந்து, மற்ற 2 மசோ​தாக்​கள் மீது வாக்​கெடுப்பு நடத்​தப்​பட​வில்​லை.

மன்​னிப்பு கோரு​கிறேன்

இந்நிலையில், மகளிர் இடஒதுக்​கீடு தொடர்​பாக பிரதமர் மோடி நேற்​று இரவு 8.30 மணிக்கு தொலைக்​காட்சி வாயி​லாக நாட்டு மக்​களிடம் உரை​யாற்​றி​னார். 

அவர் கூறிய​தாவது: நமது நாட்​டின் மகள்​கள், சகோ​தரி​களிடம் பேச வந்​துள்​ளேன். மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்படுத்துவதற்​கான மசோ​தாவை நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்ற முடி​யாமல் போய்​விட்​டது.

அதற்​காக அனைத்து பெண்​களிட​மும் மன்​னிப்பு கோரு​கிறேன். காங்​கிரஸ், திமுக, திரிண​மூல் காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்டகட்​சிகளின் சுயநல அரசி​யல் காரண​மாக நமது பெண்​கள் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். மசோதா தோல்வி அடைந்​த​போது நான் சோகத்​தில் ஆழ்ந்​தேன். ஆனால், அந்த கட்சிகளின் எம்.​பி.க்​கள் மகிழ்ச்​சி​யில் திளைத்​தனர்.

மேஜைகளை தட்டி ஆர்ப்​பரித்​தனர். அவர்​களது நடவடிக்​கைகள், பெண்​களின் சுயமரி​யாதை மீதான நேரடிதாக்​குதல். இதை இந்​திய பெண்​கள் மறக்க மாட்​டார்​கள். இது அவர்களிடம் நீங்காத வடுவைஏற்படுத்தியுள்ளது. இந்த கட்சியினர் தங்களது தொகுதிக்கு செல்லும்போது, அவர்களது நாடாளுமன்ற செயல்பாடுதான் பெண்களின் மனதில் நிழலாடும்.

மசோ​தாவை தோற்​கடித்​தவர்​கள் பெண்​களின் சக்​தியை சாதா​ரண​மாக எடை போட்​டு​விட்​டனர். இதன்மூலம் எதிர்க்​கட்​சிகள் மிகப்​பெரிய பாவத்தை இழைத்​துள்​ளனர். அதற்​கான தண்​டனையை பெண்​கள் வழங்​கு​வார்​கள். மக்​களின் தண்​டனை​யில் இருந்து எதிர்க்​கட்​சிகள் தப்​பிக்க முடி​யாது. வரும் 2029-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலில் பெண்​களுக்​கான இடஒதுக்​கீட்டை வழங்க மத்​திய அரசு விரும்​பியது. வடக்​கு,தெற்​கு, கிழக்​கு, மேற்கு என்ற பாகு​பாடு இல்​லாமல் அனைத்து பிராந்​தி​யங்​களி​லும் ஆட்​சி, அதி​காரத்​தில் பெண்​களின் பங்​களிப்பை அதி​கரிக்​கச் செய்ய மசோதா கொண்டு வரப்​பட்​டது.

மத்​திய அரசின் உன்​னத​மான நோக்​கத்தை காங்​கிரஸும், அதன் கூட்​டணி கட்​சிகளும் சீர்​குலைத்​து​விட்​டன. பெண்​களின் உரிமை​களை பறித்​து​விட்​டன.

மகளிர் இடஒதுக்​கீட்டை காங்​கிரஸ் வெறுக்​கிறது. இதன்​காரண​மாக இதுதொடர்​பான மசோ​தாக்​களை அந்த கட்சி தொடர்ச்​சி​யாக தடுத்து வரு​கிறது. இப்​போதும் காங்​கிரஸும் அதன் கூட்​டணி கட்சிகளானதிமுக, திரிண​மூல், சமாஜ்​வாதிஉள்​ளிட்​டவையும் மசோதாவை தோற்​கடித்து விட்​டன. இதன்மூலம் ஒரு நல்ல முயற்சியை கருவிலேயே அழித்துவிட்டனர்.

மக்​களிடம் தவறான தகவல்​களை காங்​கிரஸ் தலை​வர்​கள் பரப்பி வரு​கின்​றனர். ஆனால் அவர்​களது முகமூடி தற்​போது கிழிந்​து​விட்​டது. அவர்​களின் உண்​மை​யான முகம் மக்களுக்கு அம்​பல​மாகி உள்​ளது. பல ஆண்டு தவறை திருத்​திக் கொள்​ளும்​படி காங்​கிரஸிடம் மன்​றாடினேன். ஆனால் அவர்​கள் தவறை திருத்​திக் கொள்ள​வில்​லை.

தவறுக்கு மேல் தவறு செய்து வரு​கின்​றனர். பல்வேறு மாநிலங்​களில் காங்​கிரஸ் மறைந்​து​விட்​டது. எனினும் சில பிராந்​திய கட்​சிகளின் ஆதர​வுடன் ஒட்​டுண்ணி போல காங்​கிரஸ் பிழைப்பு நடத்து​கிறது. காங்​கிரஸும் அதன் கூட்​டணி கட்​சிகளும் வாரிசு அரசி​யலை பின்​பற்றி வரு​கின்​றன. பெண்களுக்கு இடஒதுக்​கீடு வழங்​கி​னால் வாரிசு அரசி​யல் பாதிக்​கப்​படும்.

தங்​களின் கட்​சிகள் பாதிக்​கப்​படும் என்ற அச்​சம் காரண​மாக மகளிர் இடஒதுக்​கீடு அமலாக்​கத்​துக்​கான மசோ​தாவை தோற்​கடித்து உள்​ளன. அவர்​களின் தீய எண்​ணத்தை நாட்டு மக்​கள் புரிந்து கொண்​டுள்​ளனர். நாட்​டுக்கு சேவை​யாற்ற இந்​தியப் பெண்​கள் தயா​ராக உள்​ளனர். ஆனால் வாரிசு அரசி​யல் தலைவர்​கள், பெண்களின் வளர்ச்​சியை விரும்​ப​வில்​லை. மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டால் பெண்​களுக்​கான ஒதுக்​கீடு அதி​கரிக்​கும் என்று அஞ்​சுகின்​றனர். காங்​கிரஸ் கூட்டணி கட்​சிகள் செய்த மாபாதகத்தை பெண்​கள் மன்​னிக்க மாட்​டார்கள்.

தொகுதி மறு​வரையறை தொடர்​பாக நாட்​டில் பிரி​வினையைத் தூண்ட காங்​கிரஸ் முயற்சி செய்​கிறது. சில மாநிலங்​களில் மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்கை குறை​யும் என்று காங்​கிரஸ், திமுக, திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிகள் மக்​களிடம் தவறான தகவல்​களை பரப்பி வரு​கின்​றன. மக்​களவை​யில் மசோதா நிறைவேற்​றப்​பட்டு இருந்​தால் மேற்​கு​வங்​கம், உத்தர பிரதேசம், கேரளா, தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களில் தொகு​தி​களின் எண்​ணிக்கை அதி​கரித்திருக்​கும். தமிழகத்​தில் மக்​களவை, சட்​டப்​பேர​வைத் தொகு​தி​ எண்​ணிக்கை அதி​கரித்திருக்​கும். நல்ல வாய்ப்பை திமுக தட்​டிக் கழித்​து​விட்​டது.

பெண்​கள் பாடம் கற்​பிப்​பார்​கள்

புதிய சீர்​திருத்​தங்​களை அமல்செய்​யும்​போது எதிர்ப்பு தெரி​விப்​பது காங்​கிரஸின் வழக்​க​மாக இருந்து வரு​கிறது. அந்த கட்​சி​யின் எதிர்​மறை செயல்​பாடு​களால் நாட்​டின் வளர்ச்சி பாதிக்​கப்​படு​கிறது. மசோதா நிறைவேறினால்,அதற்கான நற்பெயரை எதிர்க்கட்​சிகளுக்கு வழங்​கு​கிறேன்என நாடாளு​மன்​றத்​தில் பகிரங்​கமாக அறி​வித்​தேன். ஆனால் மகளிர் முன்​னேற்​றத்​தில் எதிர்க்கட்​சிகளுக்கு அக்கறை இல்லை. மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாவை தோற்கடித்த காங்கிரஸுக்கு பெண்​கள் பாடம் கற்​பிப்​பார்கள். இவ்​வாறு பிரதமர்​ பேசி​னார்​.

தடைகளைத் தகர்ப்போம் என உறுதி

மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் 66 சதவீத வாக்குகள் தேவைப்பட்டன. அந்த வாக்குகளைப் பெற முடியவில்லை.

ஆனால், நாட்டின் 100 சதவீத பெண்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளோம். மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்த தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவோம்.

நாடாளுமன்றத்துக்கு பெண்கள் வருவதை எதிர்க்கட்சிகளால் தடுக்கமுடியாது. மசோதாவுக்கு எங்களால் போதிய வாக்குகளைப் பெற முடியவில்லை. ஆனால், சரியான நேரத்துக்கு காத்திருக்கிறோம். காலம் கனியும்போது இந்தியப் பெண்களின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.

சனி, 18 ஏப்ரல், 2026

வஞ்சித்து விட்டார் கிளியே... - மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி - நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 298 பேர் ஆதரவு, 230 பேர் எதிர்ப்பு

பதிவு: சனிக்கிழமை,  ஏப்ரல் 18, 2026, சித்திரை, 05, பாரபவ வருடம் 03:50 AM

புதுடெல்லி,

மக்​களவை மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா, நாடாளு​மன்​றத்​தில் நேற்று நடந்த வாக்​கெடுப்​பில் போதிய ஆதரவு கிடைக்​காத​தால் தோல்வி அடைந்​தது.

கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும். மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்​களை 850 ஆக அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டது.

இதற்​காக, நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக் கூட்​டம் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்​களவையில் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

இந்த 3 மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் தொடக்​கத்​தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. மசோதா மீதான விவாதம் நள்​ளிரவு 1 மணி வரை நீடித்​தது. இந்​நிலை​யில், மக்​களவை​யில் நேற்று காலை விவாதம் தொடர்ந்​தது.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் பேசினர். கனி​மொழி, ஆ.ராசா (தி​முக), சசி தரூர், ஜோதி​மணி (காங்​கிரஸ்), மிதுன் ரெட்டி (ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ்), ராஜீவ் ரஞ்​சன் சிங் (ஐஜத), கல்​யாண் பானர்ஜி (திரிண​மூல் காங்​கிரஸ்), ஸ்ரீ கிருஷ்ண தேவ​ராயலு (தெலுங்கு தேசம்), டிம்​பிள் யாதவ் (சமாஜ்​வா​தி), ஹர்​சிம்​ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), ஹேம​மாலினி (பாஜக) உள்​ளிட்ட எம்​.பி.க்​கள் மசோ​தாவுக்கு ஆதர​வாக​வும், எதிர்ப்​பாக​வும் பல்​வேறு கருத்​துகளை முன்​வைத்​தனர். உறுப்​பினர்​களின் கேள்வி​களுக்கு மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் பதில் அளித்​தனர்.

பிரதமர் மோடி வேண்டுகோள்

இதற்​கிடையே, மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மீதான வாக்​கெடுப்பை முன்​னிட்டு எம்​.பி.க்​களுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில் வேண்​டு​கோள் விடுத்​தார். ‘மகளிர் இடஒதுக்​கீடு விஷ​யத்​தில் கடந்த 40 ஆண்​டு​களாக அரசி​யல் செய்​யப்​பட்டு வந்​தது. சுதந்​திரம் பெற்று பல ஆண்​டு​கள் ஆனபிறகும், முடிவு எடுக்​கும் விஷ​யத்​தில் மகளிருக்கு குறைந்​த​பட்ச பிர​தி​நி​தித்​து​வம்​கூட தரப்​பட​வில்​லை.

இது சரி​யான நடவடிக்கை அல்ல. நாட்​டின் மக்​கள்​தொகை​யில் பாதி​யளவு இருக்​கும் மகளிர் தங்​களது உரிமை​களைப் பெறவேண்​டிய நேரம் வந்​துள்​ளது. இந்த மசோதா குறித்து பரப்​பப்​படும் தவறான தகவல்​களுக்​கு, சரி​யான பதில்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

உங்​களது தாய், சகோ​தரி, மனை​வி, மகள் ஆகியோரை நினைத்​துப் பார்த்​து, மகளிர் இடஒதுக்​கீடு மசோதா விஷ​யத்​தில் மனசாட்​சிப்​படி முடிவு எடுக்க வேண்​டும். மகளிருக்கு அதி​காரம் அளிக்க நமக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்​துள்​ளது. எனவே, அவர்​களுக்​கான புதிய வாய்ப்​பு​களை பறிக்​காதீர்​கள். தயவுசெய்து உரிய பரிசீலனை செய்​து, முழுஉணர்​வுடன் முடிவு எடுத்​து, மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தாவை ஆதரிக்க வேண்​டும்’ என்று அதில் பிரதமர் தெரி​வித்​திருந்​தார்.

அமித் ஷா விளக்​கம்

மக்​களவை​யில் மசோதா குறித்து உள்​துறை அமைச்​சர் அமித் ஷா விளக்​கிப் பேசி​னார். தொகுதி மறுசீரமைப்​பின் முடி​வில் தமிழகம் உள்​ளிட்ட தென் மாநிலங்​களுக்கு எத்​தனை தொகு​தி​கள் அதி​கரிக்​கும் என்ற பட்​டியலை​யும் அவர் வெளி​யிட்​டார்.

தொகுதி மறுசீரமைப்பு காரண​மாக தென் மாநிலங்​களுக்கு அதிக இழப்பு ஏற்​படும் என்று குற்​றச்​சாட்டு எழுந்த நிலை​யில், இந்த பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இத்​துடன், மறு​வரையறை மூலம் தொகு​தி​கள் எண்​ணிக்கை 850 ஆக அதி​கரிக்​கப்​படும்​போது எந்​தெந்த மாநிலங்​களுக்கு எவ்​வளவு தொகு​தி​கள் அதி​கரிக்​கும் என்​பது குறித்​தும் விளக்​கம் அளித்​தார்.

‘‘தமிழகத்​துக்கு தற்​போது 39 எம்​.பி. தொகு​தி​கள் உள்ள நிலை​யில் தொகுதி மறு​வரையறைக்கு பின்​னர் இந்த எண்​ணிக்கை 59 ஆக உயரும். இதே​போல, எம்​.பி. தொகு​தி​கள் எண்​ணிக்கை கேரளா​வில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்​தி​ரா​வில் 25-ல் இருந்து 38 ஆகவும், கர்​நாட​கா​வில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும். தொகுதி மறு​வரையறை​யால் தமிழகத்​துக்கு எந்​த​வித இழப்​பும் ஏற்​ப​டாது. மக்​களவை​யில் தமிழகத்​தின் பிர​தி​நி​தித்​து​வம் 7.18-ல் இருந்து 7.23 சதவீதம் ஆக அதி​கரிக்​கும்.

தொகுதி மறு​வரையறை ஆணை​யத்​தின் அறிக்கை நாடாளு​மன்​றத்​தால் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதல் பெற்ற பிறகே அமல்​படுத்​தப்​படும். 2029-க்கு முன்பு வரை தற்​போது இருக்​கும் இடங்​களின் எண்​ணிக்​கை​யிலேயே அனைத்து தேர்​தல்​களும் நடை​பெறும்’’ என்று அமித் ஷா பேசி​னார்.

போதிய ஆதரவு இல்லை

அவர் பேசி முடித்​ததும், மசோதா மீது வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 528 எம்​.பி.க்​கள் வாக்​களித்​தனர். மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 பேரும், எதி​ராக 230 பேரும் வாக்​களித்​தனர். மசோதா நிறைவேற மூன்​றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்​களவை​யில் 352 எம்​.பி.க்​களின் ஆதரவு இருந்​தால் மட்​டுமே மசோ​தாவை நிறைவேற்ற முடி​யும்.

ஆனால் 298 பேர் மட்டுமே ஆதர​வாக வாக்​களித்​த​தால் மகளிர் இடஒதுக்​கீடு மசோதா தோல்வி அடைந்​தது. நேற்​றைய வாக்​கெடுப்​பின்​போது மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மட்​டுமே வாக்​கெடுப்​புக்கு விடப்​பட்​டது. மற்​ற 2 மசோ​தாக்​கள்​ மீதும்​ வாக்​கெடுப்பு நடத்​தப்​பட​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தோல்வி அடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய விவகாரங்களில் கொள்கை முடிவுகள், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதன், 15 ஏப்ரல், 2026

அமெரிக்க அதிபர் டிரம்ப்ம்பை மிரட்டிய பிரதமர் மோடி

பதிவு: புதன்கிழமை,  ஏப்ரல் 15, 2026, சித்திரை, பாரபவ வருடம் 03:00 AM

புதுடெல்லி,

ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார். இருவரும் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர். 

டிரம்ப்பிடம் பேசியது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“என் நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பற்றி ஆலோசித்தோம். மேலும் பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தீர்மானித்தோம். மேற்கு ஆசிய போர்ச்சூழல் பற்றியும், ஹோர்முஸ் நீரிணை திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

ராகுல்காந்தி தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஏப்ரல் 14, 2026, சித்திரை, பாரபவ வருடம் 01:40 AM

சென்னை,

தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

அடுத்து 15-ந் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 18-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

அதேபோல், ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் (15-ந் தேதி) சேலத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதில், பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தி.மு.க. தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்.

சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோதே, தி.மு.க. - காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய காங்கிரஸ் தலைமை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இதற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவரது தாயாரான சோனியாகாந்தி இதற்கு மறுப்பு தெரிவித்தாராம். அதன்பின்னரே, தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

‘ஜன​நாயகன்’ பட விவகாரம் - மத்திய தணிக்கை வாரியம் (சிபிஎப்சி) பரபரப்பு விளக்கம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஏப்ரல் 12, 2026, பங்குனி 29, விசுவாவசு வருடம் 00:10 AM

சென்னை,

ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தவெக தலைவர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. 

பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது. 

விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது; 

“ஜன நாயகன்” படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றதும் தவறானவையும் ஆகும்.திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை  சிபிஎப்சி பின்பற்றுகிறது. 

படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும்; மேலும் கேடிஎம் முழுமையாக தயாரிப்பாளர்/இயக்குநரிடமே இருக்கும். சரியான கேடிஎம் இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது. 

ஜன நாயகன்  திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ்  மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல்  பெற்று ஒப்படைக்கப்பட்டது; அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 11 ஏப்ரல், 2026

‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்தது - விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி - டிஜிபியிடம் புகார்

பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026, பங்குனி 28, விசுவாவசு வருடம் 05:20 AM

சென்னை,

​திரைப்​படத் தணிக்கை வாரி​யத்​தின் சான்​றிதழுக்​காக காத்​திருக்​கும் நிலை​யில், விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ முழு திரைப்​பட​மும் நேற்று இணை​யத்​தில் வெளி​யாகி வைரலான​தால் விஜய் உள்​ளிட்ட படக் குழு​வினர் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்​கக் கோரி டிஜிபி​யிடம் புகார் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

தவெக தலை​வர் விஜய் நடித்​துள்ள திரைப்​படம் ‘ஜன​நாயகன்’. ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். 

ரூ.500 கோடி பட்​ஜெட்​டில் பிரம்​மாண்​ட​மாக தயாரிக்​கப்​பட்ட படம் என்​ப​தா​லும், தமிழகம், புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முதல்​முறை​யாக களமிறங்​கி​யுள்ள விஜய்​யின் கடைசி திரைப்​படம் என்று அறிவிக்​கப்​பட்​ட​தா​லும், ரசிகர்​கள் மத்​தி​யில் இத்​திரைப்​படம் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யது.

கடந்த ஜனவரி மாதம் பொங்​கல் பண்​டிகைக்கு இப்​படம் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், தணிக்​கைப் பிரச்​சினை காரண​மாக இது​வரை வெளி​யாக​வில்​லை. நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, படத்தை மறு​தணிக்​கைக் குழு கடந்த மாதம் பார்த்​தது. படத்​துக்கு விரை​வில் தணிக்​கைச் சான்​றிதழ் கிடைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த சூழலில், ‘ஜன​நாயகன்’ படத்​தில் இடம்​பெற்​றுள்ள சுமார் 5 நிமிட வீடியோ காட்சி இணை​யத்​தில் கடந்த 9-ம் தேதி வெளி​யானது. பல்​வேறு வலை​தளங்​களி​லும் இது வேக​மாக பகிரப்​பட்​டது. இதனால், படத் தயாரிப்பு நிறு​வன​மும், படக் குழு​வினரும் அதிர்ச்​சி​யடைந்​தனர். 

இந்த நிலை​யில், ‘ஜன​நாயகன்’ முழு திரைப்​பட​மும் நேற்று அதி​காலை இணை​யத்​தில் சட்​ட​விரோத​மாக மர்ம நபர்​களால் வெளி​யிடப்​பட்​டது. இணை​யம் மற்​றும் வலை​தளங்​களில் இது​வும் வேக​மாக பகிரப்​பட்​டது. திரைப்படத் தணிக்கை வாரி​யத்​தின் சான்​றிதழுக்​காக காத்​திருக்​கும் சூழலில், முழு படமும் இணை​யத்​தில் வெளி​யானது விஜய் உள்ளிட்ட படக் குழு​வினருக்கு பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இணையத்தில் முழு திரைப்படத்தையும் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்க பொதுச் செய​லா​ளர் விஷால், நடிகர்​கள் ரஜினிகாந்த், சூர்​யா, சிரஞ்​சீ​வி, சிவ​கார்த்​தி​கேயன், விஜய் ஆண்​டனி, ஜீவா, ஜி.​வி.பிர​காஷ் குமார், தயாரிப்​பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட திரை​யுல​கினர் பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

ரஜினிகாந்த் தனது வலைதளப் பதிவில், ‘ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சி, வேதனையை அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இதுபோன்ற செயல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து, ஜனநாயகன் படத்தையும், திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

திரைப்​படத்தை இணை​யத்​தில் கசி​ய​விட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி, தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர் சங்க முன்​னாள் தலைவர் கேயார், டிஜிபியிடம் புகார் கொடுத்துள்​ளார்.

சட்டப்படி நடவடிக்கை

இதற்​கிடையே, ‘ஜன​நாயகன்’ திரைப்​படக் காட்​சிகளை பகிர்ந்​தால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தயாரிப்​பாளர் தரப்​பில் வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது

‘ஜன​நாயகன்’ படத்​தின் கசிந்த காட்​சிகள் அல்​லது காணொளியை வாட்​ஸ்​அப், டெலிகி​ராம், இன்​ஸ்​டாகி​ராம், முகநூல், எக்​ஸ், யூ-டியூப், இணை​யதளங்​கள் உள்ளிட்ட எந்த டிஜிட்டல் ஊடகம் வழி​யாக​வும் பதி​விறக்கம் செய்​வது, அனுப்​புவது, பகிர்​வது, பதிவேற்​றம் செய்​வது, மீண்​டும் பதி​விடு​வது, சேமிப்​பது, பரப்புவதுகடுமை​யான குற்​றச்​செயல் மற்​றும் பதிப்​புரிமை மீறல் ஆகும். இதில் சம்​பந்​தப்​பட்டவர்கள் மீது குற்​ற​வியல் நடவடிக்​கை எடுக்கப்படும்.

‘ஜன​நாயகன்’ படத்​தின் காட்​சிகளை சட்​ட​விரோத​மாகப் பதி​விறக்​கம்செய்து அனுப்​பிய நபருக்கு எதி​ராக எனது கட்​சிக்​காரர் ஏற்​கெனவே உரியசட்ட நடவடிக்​கை​ தொடங்கி​உள்​ளார். 

மேலும், இத்​தகைய சட்ட ​விரோத செயல்களில் ஈடு​பட்ட அனைத்து நபர்​களுக்​கும் எதி​ராக மேல​திக நடவடிக்​கைகள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்பட்டு வரு​கின்​றன. இது​போன்ற செயல்​களில் ஈடு​படும் எவரும், அதன் விளைவு​களுக்கு, உடனடி உரிமையியல் மற்​றும் குற்​ற​வியல்​ நடவடிக்​கைகளை எதிர்​கொள்ள நேரிடும்​. 

இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.
 

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...