ஞாயிறு, 3 மே, 2026

46,313 டன் சமையல் எரிவாயுவுடன் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இந்திய கப்பல்

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை,  மே 03, 2026, சித்திரை, 20, பாரபவ வருடம் 03:10 AM

புதுடெல்லி, 

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. 

இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள்.  இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 

இதனால், பதற்றம் சற்று தணிந்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை.

இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது. இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. 

இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.  எனினும் போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.

இந்த மோதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  எனினும், இந்திய கப்பல்களுக்கு ஈரான் எந்த நெருக்கடியையும் அளிக்கவில்லை.

அவை பாதுகாப்பாக கடந்து இந்தியாவை வந்தடைந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், எம்.டி. சர்வ சக்தி என்ற பெயரிடப்பட்ட மார்ஷல் தீவுகள் கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று 46,313 டன் சமையல் எரிவாயுவை சுமந்து கொண்டு, ஹார்மூஸ் ஜலசந்தியை இன்று பாதுகாப்பாக கடந்து வந்துள்ளது.

அந்த கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 20 ஊழியர்கள் உள்ளனர்.

இந்த கப்பல் விசாகப்பட்டினத்திற்கு வருகிற 13-ந்தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சனி, 2 மே, 2026

வணிக சிலிண்டர் விலை ரூ.993 அதிகரிப்பு - அமெரிக்கா - ஈரான் போரின் தாக்கம் - ஓட்டலில் உணவு, தேநீர் விலை, டெலிவரி கட்டணம் மேலும் உயரும்

பதிவு:  சனிக்கிழமை,  மே 02, 2026, சித்திரை, 19, பாரபவ வருடம் 02:00 AM

புதுடெல்லி, சென்னை,

ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.993 உயர்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டர் விலை 81 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவு மற்றும் தேநீர் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று ரூ.993 வரை உயர்த்தியுள்ளது.

இதனால், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ. 990.50 அதிரிகரித்து ரூ.3,237-க்கு விற்பனையாகும். தலைநகர் டெல்லியில் ரூ.2,078.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர், இனி ரூ.3,071.50-க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் ரூ.2,031-ல் இருந்து ரூ.3,024 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் போர் தொடங்கியதில் இருந்து வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது 3-வது முறை. மார்ச் மாதத்தில் ரூ.144, ஏப்ரல் 1-ல் ரூ.200 என உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சுமையை மக்கள் மீது சுமத்தும் வகையில் உணவுப் பண்டங்கள், தேநீர் விலை மற்றும் உணவுப் பொருள் டெலிவரி கட்டணத்தை ஓட்டல்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பொருளாதாரப் பேராசிரியர் விகாஸ் பிரகாஷ் சிங் கூறும்போது, “ஈரான் போரின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

உணவகங்களில் உணவுப் பண்டங்கள் விலை மேலும் உயர்ந்து, பில்கள் அதிர்ச்சி தரக்கூடும். சிறிய சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலை, ஏழை எளிய மக்களை கவலையடையச் செய்துள்ளது” என்றார்.

வீட்டு சிலிண்டர் விலை உயரவில்லை: வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ள போதிலும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான எரிபொருள் விலையும் உயர்த்தப்படவில்லை. இது சாமானிய மக்களுக்குப் பெரும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. அதே நேரம், சர்வதேச விமான எரிபொருள்விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் சர்வதேச விமான பயணத்துக்கான கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், சுமார் 4 ஆண்டுகளாக பெட்ரோல் விலை மாற்றமின்றி இருப்பதால், அரசுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.20 மற்றும் டீசலுக்கு ரூ.100 நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக சந்தைஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தேர்தலுக்கு முன்பே கணித்தது

போல, தேர்தல் முடிந்ததும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது மத்திய பாஜக அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த

போது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசியப் போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல. விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சங்க நிர்வாகிகள் கருத்து

சென்னை ஓட்டல் அசோசியேஷன் தலைவர் எம்.ரவி

 மிகவும் அதிகமான விலையேற்றம் இது. இதனால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே பெரும்பாலான இடங்களில் 50 சதவீத சிலிண்டர்கள் தான் கிடைக்கின்றன. இந்நிலையில் இல்லாத சிலிண்டருக்கு இவ்வளவு விலை கொடுப்பது நியாயமற்றது. ஏற்கெனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தமிழகம் முழுவதும் 25 சதவீத சிறிய கடைகள் மூடப்பட்ட நிலையில், அதில் இருந்து தற்போது தான் மீண்டு வந்து கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் மீண்டும் விலையேற்றம் அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்க செயலாளர் சுந்தரம்

 அமெரிக்கா - ஈரான் போர் சூழல் நிலவி வருவதால் டீக்கடைகளுக்கு வணிக சிலிண்டர்கள் விநியோகம் செய்வதை ஏஜென்சிகள் நிறுத்திவிட்டன. ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் கொடுத்துகள்ள சந்தையில்தான் வணிக சிலிண்டர் வாங்கி வியாபாரம் செய்து வருகிறோம். இவ்வாறு ஏஜென்சிகளேகூட கூடுதல் விலைக்கு சிலிண்டர்களை விற்று அதிக லாபம் பார்க்கின்றனர். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கெனவே சென்னையில் 10 சதவீத டீக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இந்த சூழலில், மீண்டும் ஆயிரம் ரூபாய் விலையேற்றம் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. 

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

வெள்ளி, 1 மே, 2026

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 01, 2026, சித்திரை, 18, பாரபவ வருடம் 05:00 AM

மதுரை,

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில்  கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்  - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு  வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார்.

பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில்  எழுந்தருளினார். 

நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து நள்ளிரவு  தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. 

இதனையடுத்து அதிகாலை 3 மணியளவில் மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவில் முன்பாகவுள்ள  ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதை தொடர்ந்து வைகையாற்றை நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர். 

வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது  வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். 

வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். 

அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களில் மத்தியில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வரை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள்  மண்டகப்படிகளில்  கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.  ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார். 

முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல். ஆணையர் அபிஷேக் தீக்‌ஷித் தலைமையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 

வைகையாறு முழுவதும் பக்தர்களின் வெள்ளம்போல பக்தர்களின் தலையாக காட்சியளித்தது. கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் நடனமாடினர். 

வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவசரகால மருத்துவ உதவிக்காக மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

 கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.

பத்திரிக்கையாளர், யு டியூபர் வாராகி மீதான குண்டாஸ் ரத்து - ரூபாய் 50 ஆயிரம் வழங்க உத்தரவு

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 01, 2026, சித்திரை, 18, பாரபவ வருடம் 03:10 AM

சென்னை,

'யு டியூபர்' வாராகி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்றம், 'தேவையின்றி கைது செய்து, சிறையில் அடைத்ததால், வாராகிக்கு, காவல் துறை 50,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததுடன், ஆபாசமாக திட்டியதாக, அமீனால் பீவி என்பவர் அளித்த புகார் அடிப்படையில், 'யு டியூபர்' வாராகிக்கு எதிராக, பெண்ணை அவமானப்படுத்துதல், ஆபாசமாக செயல்படுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாராகியை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், கடந்த ஆண்டு டிச.,3 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வாராகி மனைவி நீலிமா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் அருண் அன்புமணி, பி.ராஜ்குமார் ஆகியோர் ஆஜராகி, 'சட்டவிரோத நடவடிக்கைக்கு, மனுதாரரின் கணவர் உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

குற்றச்சாட்டுகள் முற்றிலும் நியாயமற்றவை. கைதுக்கான காரணம் குறித்த தகவலும் வழங்கப்படவில்லை. எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.காவல்துறை தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் முனியப்பராஜ், மனுதாரர் தரப்பு வாதத்தை முற்றிலும் மறுத்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

மனுதாரரின் கணவர், இந்த வழக்கில் குற்றம் இழைக்கப்பட்டதாக கூறப்படும் நேரத்தில், புகார்தாரர் அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மனுதாரரின் கணவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

தேவையின்றி கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர் என்பதில், நீதிமன்றத்துக்கு எவ்வித ஐயமும் இல்லை. எனவே, அவருக்கு காவல் துறை, 50,000 ரூபாய் வழங்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை - புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 01, 2026, சித்திரை, 18, பாரபவ வருடம் 02:45 AM

சென்னை,

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணிக்கை அலுவலர்கள், உதவியாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்களுக்கு உரிய அனுமதிச் சீட்டுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சம்பந்தமில்லாத நபர்கள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பை வலுப்படுத்த ‘க்யூஆர்’ குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதைத் தவிர்க்க, இந்திய தேர்தல் ஆணையம் இசிஐ நெட்-ல் ‘க்யூஆர் கோடு’ குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது. இதிலிருந்து இம்முறையானது அமல்படுத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான அனைத்து பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் நீட்டிக்கப்படும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாளத்தை சரிபார்க்க மூன்று அடுக்கு பாதுகாப்பு வழிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில், தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படும். வாக்கு எண்ணிக்கை அறைக்கு அருகிலுள்ள உள் பாதுகாப்பு வளையத்தில், ‘க்யூஆர்’ குறியீடு சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.

‘க்யூஆர்’ குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் வசதிக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு அருகில் ஒரு ஊடக மையம் அமைக்கப்படும். அவர்களுக்கு நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதற்கு, இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உழைப்பின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் ‘மே தினம்’ - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 01, 2026, சித்திரை, 18, பாரபவ வருடம் 01:55 AM

சென்னை,

உல​கம் முழு​வதும் தொழிலா​ளர் தினம் இன்று (மே 1) கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி தொழிலா​ளர்​களுக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்

உழைப்​பை​யும், உழைப்​போரை​யும் கொண்​டாடும் இந்த மே நாளில், திமுக தொழிலா​ளர்​களின் உண்​மைத் தோழ​னாக என்​றென்​றும் திகழ்ந்​திடும் என்ற உறு​தி​யை​யும், உழைக்​கும் தோழர்​களுக்​கும் அவர்​தம் குடும்​பத்​தினர் அனை​வருக்​கும் உளமார்ந்த வாழ்த்​துகளை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி

உழைப்​பு​தான் நம்மை உயர்த்​தும். உழைப்​பின் பயனால் கிடைக்​கும் உயர்வே மனநிறைவு அளிக்​கும். அந்த வகை​யில், உழைக்​கும் கரங்​களின் ஒற்​றுமையை உணர்த்​தி, உழைப்​பின் பெரு​மையை உலகுக்​குப் பறை​சாற்​றும் மே தினத்​தில், தொழிலா​ளர்​கள் அனை​வருக்​கும் உளங்​க​னிந்த மே தின நல்​வாழ்த்​துகள்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை

நாட்​டின் ஒவ்​வொரு முன்​னேற்​றத்​துக்​கும் அடிப்​படை காரணம் தொழிலா​ளர்​களின் அர்ப்​பணிப்​பு. அவர்​களின் உரிமை​கள் காக்​கப்பட வேண்​டும். உழைப்​போரை உயர்த்தி சமத்​து​வத்தை நிலை நிறுத்​து​வோம்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ

இது​வரை இல்​லாத அளவுக்கு தொழிலா​ளர் வர்க்​கத்​தின் மீது மோச​மான தாக்​குதலை பிரதமர் மோடி​யின் அரசு தொடுத்து வரு​கிறது. உழைக்​கும் தோழர்​களின் உரிமை​களுக்​காக தொடர்ந்து போராடு​வோம் என உறு​தி​யேற்​போம்.

தி.க தலை​வர் கி.வீரமணி

பன்​னாட்டு முதலா​ளி​களாலும், பிறவி முதலா​ளி​களாலும் சுரண்​டப்​படு​வதை எதிர்த்து போராடி, தொழிலா​ளர்​களின் வாழ்​வில் விடியலைக் கொண்​டு​வந்த நாள் இன்​று.

மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்

உழைப்​பவருக்கே உலகம் உரியது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்​வு, 8 மணி நேர உறக்​கம் என்​பதை உயிர் நீத்து போராடி பெற்​றுக்​கொடுத்த தியாகி​களுக்கு வீர வணக்​கத்தை தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்

தொழிலா​ளர்​களின் ஒற்​றுமை​யாலும் ஒன்​று​பட்ட போராட்​டங்​களி​னாலும் மட்​டுமே, அவர்​களுக்​கான உரிமை​களை உறு​திப்​படுத்த இயலும். அத்​தகைய ஒற்​றுமை​யை​யும், ஒரு​மைப்​பாட்​டை​யும் உறு​தி​யாகக் கட்​டியமைக்க, இந்த மே தினத்​தில் உறுதி ஏற்​போம்.

பாமக தலை​வர் அன்​புமணி

நியாய​மான ஊதி​யம், விடு​முறை, 8 மணி நேர பணி, ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட சமூகப் பாது​காப்​பு​கள் என அனைத்​தை​யும் வென்​றெடுத்​துக் கொடுப்​ப​தன் மூலம், பாட்​டாளி​களுக்கு ஒளிமய​மான எதிர்​காலம் அமைத்து கொடுக்க இந்​நாளில் உறு​தி​யேற்​போம்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்

மக்​களின் தேவை​களுக்​கும், முதலா​ளி​களின் லாபத்​துக்​கும், தொழில்​களின் மேம்​பாட்​டுக்​கும், நாட்​டின் முன்​னேற்​றத்​துக்​கும் உழைத்து களைக்​கும் தொழிலா​ளர்​கள் வாழ்​வில் முன்​னேறி, மகிழ்​வுடன் வாழ துணை நிற்​போம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்

உழைக்​கும் மக்​கள், தங்​களின் உரிமை​களுக்​காக போராடி அவற்றை மீட்​டெடுத்த மே தினத்​தில், நாம் கண்​டிருக்​கும் வளர்ச்​சிக்​கும், முன்​னேற்​றத்​துக்​கும், முது​கெலும்​பான உழைப்​பாளர்​களின் உழைப்​பை​யும், தியாகத்​தை​யும் போற்றி நினை​வு​கூர்​வோம். இவ்​வாறு அவர்​கள் கூறி​யுள்​ளனர்.

மேலும், தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன், ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து, முன்​னாள் எம்​.பி சு.​திரு​நாவுக்​கரசர், கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், உள்​ளிட்​ட அரசியல் கட்சித் தலைவர்கள் மே தின வாழ்த்​து தெரிவித்​துள்​ளனர்​.

வியாழன், 30 ஏப்ரல், 2026

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர் - பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் எதிர்சேவை

பதிவு: வியாழக்கிழமை,  ஏப்ரல் 30, 2026, சித்திரை, 17, பாரபவ வருடம் 08:00 AM

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா என்பது சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத விழா ஆகும். 

மீனாட்சி அம்மன் கோவிலில் இத்திருவிழா முதலில் தொடங்கும். பின்னர் மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள வைணவ தலமான கள்ளழகர் கோவிலில் இந்த விழா தொடங்கும்.

அதன்படி, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், தேரோட்டம் நேற்றும் நடைபெற்றது. 

இதற்கிடையே, அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. 

நேற்று மாலையில் அழகர் மதுரை புறப்பாடு நடந்தது. இதைக்காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். 

கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். கோவிலில் 18-ம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. 

அப்போது கள்ளழகரின் பல்லக்கு உத்தரவு பெற்று நகர்ந்தது. உடனே அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா...' என பக்தி கோஷங்கள் எழுப்பினர். சகல பரிவாரங்கள் முன்செல்ல பக்தர்க ளுக்கு காட்சி அளித்தபடி வந்தார்.

பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இன்று காலையில் மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. 

அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர். அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். 

அழகர், கருப்பணசாமி, அனுமார் வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், தீப்பந்தம் ஏந்தியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றனர். 

அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு வழிபாடுகளுக்கு பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைகிறார்.சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். 

இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகிறார்கள்.அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை 494 மண்டகப்படி களில் இந்தாண்டு கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நாளை மறுநாள் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார திருக்கோலங்களில் காட்சி தருகிறார். 

3-ந்தேதி இரவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெறும். 

4-ந் தேதி மதுரையில் இருந்து அழகர்மலை நோக்கி புறப்படுகிறார். 

5-ந் தேதி காலையில் இருப்பிடம் செல்கிறார். 

6-ந்தேதி உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...