வியாழன், 16 ஜூலை, 2026
நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
நாகர்கோவில்,
நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர், பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி இவரது கடையில் தென்தாமரைக்குளம் போலீஸார் சோதனை நடத்தியபோது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததாக பறிமுதல் செய்யப்பட்டன. அவரைக் கைது செய்த போலீஸார், நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி காலை சிறையில் இருந்த சபரிவர்மன் இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
சபரிவர்மனின் தாயார், மனைவி ஆகியோர் அவரது உடலை பார்வையிட்டபோது, உடலில் பலத்த காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால், சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சபரிவர்மன் மரணம் குறித்து, அவரது உறவினர்களிடமும், நாகர்கோவில் கிளைச்சிறை காவலர்கள் மற்றும் கைதிகளிடமும், நாகர்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி,மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் விசாரணை நடத்தினார். சிறையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் ஆதாரங்கள் திரட்டப்பட்டன.
19 இடங்களில் பலத்த காயம்
இந்நிலையில், சபரிவர்மனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் மாலை வெளியானது. அதில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் பலமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நேசமணிநகர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில் கிளைச்சிறை தலைமை வார்டனான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த திருமலைநம்பி, வார்டன்களான கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடத்தைச் சேர்ந்த சிவகுமார், தேங்காப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெகன் ஆகிய 3 பேரை. நேற்று முன்தினம் இரவில் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நேசமணிநகர் காவல் நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியிருப்பதாவது: சபரிவர்மன் சிறைக்கு வந்த நாளில் இருந்து, அவருக்கும் சக கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை சிறை வார்டன்கள் சமரசம் செய்துள்ளனர். 12-ம் தேதி இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைதிகள் சிலர் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
மேலும், சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டி வைத்து, வார்டன்களுடன் சேர்ந்து கைதிகளும். அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சபரிவர்மன் சிறைக்குள்ளேயே இறந்துவிட்டார்.
உடலை வாங்க மறுப்பு
கைதான வார்டன்கள் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கைதிகளான விஷ்ணு, ஜெகன், சாரதி, பெருமாள், சரத், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 பேர் மீது போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து. அவர்களை நேற்று கைது செய்தனர்.
இதனிடையே, சபரிவர்மனின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் 94981 80936 வாட்ஸ்-அப்பில் புகார் கொடுக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை,
அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கும் விதமாக புதிய வாட்ஸ்-அப் எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம், ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, அரசு அலுவலர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக 94981 80936 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் கொடுக்கலாம் என்று அரசு தற்போது அறிவித்துள்ளது. ஊழலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகை
இதுகுறித்து அனைத்து துறைகளின் செயலர்கள், இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் எம்.சாய்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகளை கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்.
அதில், ‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்’ என்ற வாசகம் தெளிவாகவும், மக்கள் பார்க்கும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதுதவிர, தமிழிலும், ஆங்கிலத்திலும் புகார் அளிக்கும் நடைமுறைகள் இடம்பெற்ற மாதிரி அறிவிப்பு பலகையும் அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும்.
அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் வாட்ஸ்-அப் புகார் எண் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் (ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநரகம் - DVAC) இணையதள முகவரியை வெளியிட வேண்டும்.
வாட்ஸ்-அப் மட்டுமின்றி, dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
எழுத்துப்பூர்வமான புகார்களை ‘இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறை, 293, எம்கேஎன் சாலை, ஆலந்தூர், சென்னை-16’ என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதன், 15 ஜூலை, 2026
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி - பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை,
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பி.டி.அரசகுமார், சென்னை சாலிகிராமத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்தார்.
திமுகவின் செய்தித் தொடர்பு குழுத் துணைத் தலைவராக இருந்த அரசகுமார், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை அணுகியுள்ளார்.
பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல பள்ளி நிர்வாகிகளிடம் பெருமளவு பணம் வசூலித்துள்ளார்.
அந்த வகையில், ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பி.டி.அரசகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி ஆதாரங்களையும் திரட்டினர். இந்த மோசடி தொடர்பாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 59 தனியார் பள்ளிகள் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளன.
பி.டி.அரசகுமாரின் தொடர் மோசடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான நகல் சிறையில் உள்ள பி.டி.அரசகுமாரிடம் வழங்கப்பட்டது.
செவ்வாய், 14 ஜூலை, 2026
பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண்ணை கொடூரமாக கொன்று பெண் கொலை - 15 சவரன் நகை கொள்ளை
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மளிகை கடைக்காரர் மனைவி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.
இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜா (வயது 55) வீட்டில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், ராதாகிருஷ்ணன் மற்றும் வனஜா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கழுத்தில் கத்திக்குத்து நேற்று காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல் தனது மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வனஜா, கடைக்கு சென்று கணவருக்கு டீ கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.
மதிய உணவு இடைவேளையின்போது ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..15 சவரன் நகை கொள்ளைஅவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்து, திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இட்லி மாவு வாங்குவது போல் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வனஜாவை கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர், வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் அச்சம்மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டில் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவேற்காடு பகுதியில் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திங்கள், 13 ஜூலை, 2026
2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்_ அண்ணாமலை பேச்சு
பதிவு: திங்கட்கிழமை, ஜூலை 13, 2026, ஆனி 29, பாரபவ வருடம் 05.20 AM
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் வி த லீடர்ஸ் மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:-
ஒரு அரசியல் இயக்கம்38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர்.
இது என் குடும்ப கட்சி இல்லை. ஜூன் 5-ல் ஆரம்பிக்கப்பட்ட வி த லீடர்ஸ் அமைப்பு ஒரு அரசியல் இயக்கம்.
இன்றுடன் 38-வது நாள். பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50 சதவீதம் தாண்டிவிட்டோம் என தெரிகிறது.
அமைப்பில் சேர்ந்துள்ள 19 லட்சம் பேரில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இது நம் வெற்றி.
இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான். தமிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இங்கு எல்லாருமே தன்னார்வலர்கள்தான். இங்கு அனைவரும் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம்.
பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் நின்றுகொண்டிருக்கிறோம். நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். ஆட்சி மாற்றம்6 மாதங்களும் 6 முக்கிய பிரச்சினைகளை எடுத்து வி த லீடர்ஸ் அமைப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளது. 2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம். மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படபோகிறது. தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள். ஆகஸ்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நாம் நடத்துகிறோம். மது எல்லா இடங்களிலும் கலந்துவிட்டது. தைரியமாக மது குடிக்கும் காலம் வந்திருத்துகிறது.இன்னொரு கட்சியை திட்டுவதற்கு, தலைவர்களை குறை கூறுவதற்கான மாநாடு இது அல்ல. எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை ஜூலையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும். 5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது.
5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது.
கஞ்சாவை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாங்கள் தடுக்க இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடிதமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது.
இந்த ஆண்டு தவெக அரசு 85 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்கும். இந்த தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும். அதனை நாம் சரி செய்ய வேண்டும். அதற்கு அந்த இடத்திற்கு நல்ல தலைவர்களை கொண்டு வரவேண்டும்.வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும் “யார் நம்மைப் பிரித்தாலும், சேவை, தமிழ்நாட்டின் மாற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் இணைந்திருக்கிறோம். நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை நாம் கீழே அடிமட்டத்தில் இருந்து எடுக்கப்போகிறோம். அவர்களை மக்களின் வேட்பாளராக நிற்கவைத்து, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, எம்.பி.யாக மாற்றப்போகிறோம். வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறப்போகிறது. .நான் முதலில் இந்தியன்நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம். மதுவை ஒழிப்பது மட்டும் நோக்கம் அல்ல, மது குடிப்பவர்களை திருத்துவோம். நான் தேசியவாதி, நான் முதலில் இந்தியன், இரண்டாவது தமிழன்.பண்பாட்டு மீட்சி, ஆட்சியிலே புரட்சி என்பதும் எங்களின் தாரக மந்திரம்.
தவெகவில் அனைவரும் புதியவர்கள்கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்தனர். கரூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களுக்கு தவெக அரசு அதை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.
மதத்தின் அடிப்படையில் நான் இந்து. உங்களுக்கு உங்கள் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. ஆனால் அது வீட்டில் மட்டுமே. சாதி, மதம், சாதியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவருக்கும் பொதுவானவராக வருகிறேன். வி த லீடர்ஸ் -ல் தலைவர் கிடையாது. பேனர், புகைப்பட கலாசாரம் இல்லை. தவெகவில் அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள், தடுமாறுவார்கள். அவர்களை நாம் தூக்கிவிடத்தான் வேண்டும். மூர்க்கத்தனமாக, அதிகாரத்தை பிடிக்க நாம் வரவில்லை. நல்ல நோக்கத்துடன் நம் அரசியல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்..முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது உட்பட 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் பாடல் அண்ணாமலை மாநாட்டில் ஒளிபரப்பட்டது. அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் செயலி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அண்ணாமலை வி த லீடர்ஸ் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.
போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
“நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை” - சென்னை திரும்பிய எ.வ.வேலு பேச்சு
சென்னை,
“சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள்” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுகவுக்கு பழக்கம் இல்லை. அரசியலை, அரசியலாக சந்திப்பதில் திமுக சளைத்தது இல்லை. இதயப் பிரச்சினைக்காக 2016ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், மருத்துவர் ஜெயராமனிடம் சிகிச்சைப் பெற்று வருகிறேன்.
2023ல் அதே மருத்துவமனையில் இரண்டாம் முறையாக உடல் பரிசோதனை மேற்கொண்டேன். இப்போது மீண்டும் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என கடந்த ஜூன் 15ம் தேதி விசாவுக்கு விண்ணபித்து, ஜூன் 17ம் தேதி விசா வழங்கினர். 17ம் தேதியே ஜூன் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக் செய்தேன்.
ஆனால், ஜூன் 25ம் தேதி காலையில் என் வீட்டுக்கு காவல்துறை நண்பர்கள் வந்து, சோதனை மேற்கொள்வதாக சொன்னார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். பின்னர் ஜூன் 26ம் தேதி மீண்டும் டிக்கெட் புக்செய்து சிங்கப்பூர் சென்றேன். அங்கு எனக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
எனக்கு ஒவ்வாமை, நரம்பு பிரச்சினை, இதயப் பிரச்சினை என மூன்று பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பாக தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகள் எனக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த முறை என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது என ரிப்போர்ட் என்னிடம் உள்ளது.
அப்போது என்னை ஜூன் 3ம் தேதி வரச்சொல்லி என் வீட்டில் சம்மன் ஒட்டியதாக எனக்கு தகவல் சொன்னார்கள். அதனை பேக்ஸில் அனுப்ப சொல்லி, நான் மருத்துவ பரிசோதனைகள் முடித்து 10 நாட்களில் வந்துவிடுவேன் என அந்த சம்மனுக்கு பதில் அளித்தேன்.
ஆனால், மீண்டும் 9ம் தேதி வரச்சொல்லி சம்மன் அனுப்பினார்கள். மருத்துவ பரிசோதனைகள் முடித்து நான் ஜூலை 12ம் தேதி சென்னை வந்துவிடுவேன், அதன் பின்னர் எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கடிதம் அனுப்பினேன்.
சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன், முழு ஒத்துழைப்பு தருவதாகவும் சொன்னேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள். நான் மருத்துவத்துக்காக சென்றேனே தவிர, சுற்றுலா செல்லவில்லை. ஆனால், அவரவர் கற்பனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
திமுகவின் சட்டப்பேரவை கொறடாவாக நான் உள்ளேன். சமீபத்தில் 3 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகமான வினாக்களை நான் தான் எழுப்பினேன். அது என்னுடைய கடமை. நான் பேசவே கூடாது என அவர்கள் நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. இனி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை, குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது” என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி
தெஹ்ரான்,
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று தொடர்ந்து ஈரான் பிடிவாதம் காட்டியது.
இந்நிலையில், மார்ஷல் தீவு எண்ணெய் கப்பல் அல் ரெஹாயத், சவுதி கப்பல் வெட்யான், லைபீரியா கப்பல் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை சமீபத்தில் கடந்தன. அவற்றின் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில், அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதாக ஒரு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. இதுகுறித்து ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ ஹார்முஸ் ஜலசந்தி அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும், இப்பகுதியில் அமெரிக்கத் தலையீடுகள் முடிவுக்கு வரும் வரையிலும் மூடப்பட்டிருக்கும்; எந்தக் கப்பலும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஹார்முஸ் வழியாகச் சென்ற சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடங்கியது.
நேற்று அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின என்றும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. ‘சுமார் நான்கு மணி நேரம் கழித்து, தாக்குதல்கள் நிறைவடைந்தன. இந்த முறை சுமார் 140 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என அமெரிக்க ராணுவ கட்டளை மையமான சென்ட்காம் கூறியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
ஞாயிறு, 12 ஜூலை, 2026
“உங்கள் குற்ற உணர்ச்சிக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்காதீர்” - முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் சாடல்
சென்னை,
‘உங்களின் குற்ற உணர்ச்சிக்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த முதல்வர் விஜய், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? உங்கள் குற்ற உணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்வரான பிறகு அவர்களுக்கு “அரசுப் பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து, இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.
3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
4. அரசுப் பள்ளிகளில் 30.000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன.
5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.
8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள். மருத்துவர்கள். அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.
உங்களின் குற்றவுணர்ச்சியை திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?.
டெட், டிஆர்பி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?
எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய். கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும். அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
சனி, 11 ஜூலை, 2026
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்
பதிவு: சனிக்கிழமை, ஜூலை 11, 2026, ஆனி 27, பாரபவ வருடம் 01.30 AM
சென்னை,
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல, கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் (அதிமுக) தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி.பி.மதியழகன், விராலிமலையில் சி.விஜயபாஸ்கரின் (அதிமுக) வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், பெருந்துறையில் எஸ்.ஜெயக்குமாரின் (அதிமுக) வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர். அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா (அதிமுக) வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொகுதி வாக்காளர் காந்திமதிநாதன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள மேற்கண்ட 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்குமாறும், தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.வெங்கடாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
‘தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இடைத் தேர்தல் நடத்தப்பட்டால், வழக்கின் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடும். வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு இடைத் தேர்தலை நடத்தினால், தேவையற்ற சட்ட சிக்கலை ஏற்படுத்திவிடும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடைபெற்ற வாதம்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன்
நிலுவை வழக்கு விசாரணைக்குப் பிறகு, தேர்தலில் தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்றவராக உயர் நீதிமன்றம் ஒருவேளை அறிவிக்கக்கூடும். அதே நேரம், இடைத் தேர்தலில் ஒரு எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்கள் என்ற நிலை உருவாகும். எனவே, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்வரை அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல். சுந்தரேசன் மற்றும் நிரஞ்சன் ராஜகோபாலன்: பல தேர்தல் வழக்குகள் குறைபாடுகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை. அதனால், அவற்றின்மீது தேர்தல் ஆணையம் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்துவது அவசியமான ஒன்று.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்
தேர்தல் வழக்குகள் தொடரப்படுவதற்கு முன்பே முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை. முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி: மனுதாரர் இத்தொகுதிகளின் வாக்காளர் அல்ல.அவர் வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை. மேலும், காலி தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்துவதா, வேண்டாமா என முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு
தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசின் பணம் வீணாக செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்கள் என்ற நிலை உருவாகி அரசியல் சாசன பிரச்சினை எழும். அதேநேரம், தேர்தல் வழக்குகள் தொடருவதற்கு முன்பாகவே அத்தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன என்ற வாதத்தையும் ஆராய வேண்டியுள்ளது.
எனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவைச் செயலர் மற்றும் முதல்வர் விஜய், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும். அதுவரை இந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
வியாழன், 2 ஜூலை, 2026
தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் - கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை - செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்குத் தொடர்பா?
சென்னை,
தமிழக சபாநாயகருக்கு எதிராக செயல்பட, ஆளும் தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரைப் போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, விஜய் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்எல்ஏக்களின் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். அப்போது, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது ஒவ்வொரு கட்சியினரும் வெவ்வேறு கட்சிக்குத் தாவி வருகின்றனர். அதோடு தமிழக அரசு 6 மாதங்களில் கவிழும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் நாங்கள் சொல்வது போல் கேட்டு சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசிய தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் என்.இளையராஜாவை, சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற நபர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தான் கருத்துக் கணிப்பு நிறுவனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரின் சார்பில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், வேறு பணியில் இருப்பதாக கூறி எம்எல்ஏ இளையராஜா அந்த அழைப்பை துண்டித்துள்ளார். அதன் பின்னரும் மீண்டும் தொடர்பு கொண்டதாக கூறப்படும் திருநாவுக்கரசு, தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.
அதற்கு பிரதிபலனாக ரூ.35 கோடி வரை வழங்க தயாராக இருப்பதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்த போது, ‘‘இந்த விவகாரம் குறித்து வெளியில் கூறினால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும்’’ என்று மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார்.
அதில், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரான என்னை சட்ட விரோதமாகச் செல்வாக்கு செலுத்த முயற்சித்ததுடன், லஞ்சம் வழங்க முன்வந்தும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். செல்போன் அழைப்பு விவரங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்தது தெரிய வந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரின் அறிவுரையின்படியே, எம்எல்ஏ இளையராஜாவை திருநாவுக்கரசு தொடர்பு கொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, கருத்துக் கணிப்பு நிறுவனம் என்ற பெயரில் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதா, பின்னணியில் வேறு முக்கிய நபர்கள் உள்ளனரா அல்லது ஆட்சியைக் கவிக்கும் நோக்கின் முதல் கட்ட முயற்சியா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் 2 பேரிடம் விசாரணை
இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45), அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் திமுக பிரமுகர்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன், 1 ஜூலை, 2026
அரசிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி - 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை - தலைமறைவான முன்னாள் எம்எல்ஏவைக் கைது செய்ய தீவிரம்
சென்னை,
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கட்டிடம் கட்ட திட்ட அனுமதி உள்ளிட்டவற்றை அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பி.டி.அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில்,
‘‘தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிட திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை விரைவாக பெற்றுத் தருவதாக உறுதியளித்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்’’ என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுத் துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் கடந்த 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏவைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘‘தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என்று உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைக் கண்டறிவது, பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வது மற்றும் கூடுதல் சாட்சியங்களைச் சேகரிப்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அல்லது சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி அல்லது தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம். புகார்தாரர்களின் அடையாளம் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். போலீஸார் நடத்திய விரிவான விசாரணையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், இந்த மோசடியில் சிக்கியிருக்கும் மொத்த தொகை ரூ.200 கோடியைத் தாண்ட கூடும் என்ற சந்தேகம் விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட வாரியாகப் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் முழுமையான பட்டியலை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கங்களுக்கும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக மேலும் பலர் புகார் அளிக்க முன்வரக் கூடும் என்பதால், வழக்கின் பரிமாணம் இன்னும் விரிவடையும். எனவே, பணப் பரிவர்த்தனைகள், வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
செவ்வாய், 30 ஜூன், 2026
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - காலி தொகுதிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 30, 2026, ஆனி 16, பாரபவ வருடம் 00.50 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.
கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் காலி தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.
சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 பேரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், அவர்களின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பழனிசாமியுடன் சமாதானமாகினர்.
இருப்பினும் அவர்கள் ஏற்கெனவே வகித்த கட்சிப் பதவிகள் திரும்ப வழங்கப்படவில்லை. இதற்கிடையே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து 6-வது எம்எல்ஏ: இந்நிலையில், கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரிடம் வழங்கினார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக பேரவைத் தலைவர் பிரபாகரும் உடனே அறிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘‘சட்டப்பேரவை விதி 21-ன் படி கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது பதவி விலகல் கடிதத்தை, தனது கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.
அந்த கடிதம் பேரவை விதி 22-ன்படிமுறையாக உள்ளதால் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக பழனிசாமி நியமித்தார்.
ஆனாலும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்த அவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் தவெகவில் அவர் சேரஉள்ளதாகவும் கூறப்படுகிறது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா மூலம், சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 41 ஆக குறைந்துள்ளது. காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
சென்னை,
“வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது. அதில் அவர் பேசியது: “வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.
மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.
மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.
மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த் துறை, காவல் துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.
முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்ப்படுகளை செய்தே ஆக வேண்டும்.
மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வி என்பது ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.
மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும். ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.
மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
வெளிப்படைத் தன்மை என்பது அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும். அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்.
கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறை (PWD), அறநிலையத் துறை, தீயணைப்பு - மீட்பு மற்றும் வருவாய்த் துறைகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் காவல்துறையுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கவரேஜ் இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் சிசிடிவி நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, சிசிடிவி கவரேஜ் ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் எப்ஐஆர் பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித் துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.
கள்ளச் சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது - போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் (Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறை அனைத்து மாவட்டங்களிலும் போதைமுறிவு முகாம்களை நடத்த வேண்டும். பழக்கத்திற்கு உள்ளாக்கும் போதை மருந்துகளாக சில மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அனைவரும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். NCORD கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும்.
திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்.
காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் திருட்டை கண்டறிந்து சுரங்க, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய, சமூகங்களை ஏமாற்றும் PONZI மற்றும் பலமட்ட சந்தைப்படுத்தல் திட்டங்கள் தொடர்கின்றன.
சட்டங்களைக் கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்த, தொடர்புடைய அனைத்து துறைகளும் திறம்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் உரிய கால இடைவெளியில் தணிக்கை செய்ய பொறுப்பேற்கப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் எந்த அலகும் இயங்கவே கூடாது.
புயலால் பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, பேரிடர் தயார்நிலை பற்றி கட்டமைக்கப்பட்ட தணிக்கை நடத்தப்பட வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பருவமழை காலத்திற்கு முன் மீட்பு உள்கட்டமைப்பில் உள்ள தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தமாக உள்ளது. விபத்து அதிகமாக நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உரிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்தோர், தாக்குதல் அல்லது சுரண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும்.
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களை குறிவைத்து டிஜிட்டல் கைது மோசடி, ஓடிபி மோசடி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி அதிகரித்துள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து சைபர் குற்ற காவல் நிலையங்களும், குற்றங்களைத் தடுக்க மற்றும் கண்டறிய தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.
காவல் துறை ஆணையர் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை, போக்சோ மற்றும் பிற முக்கியமான வழக்குகள் தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுடனும் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். முந்தைய மாதத்திற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்; இது மூத்த காவல் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தெளிவும், வெளிப்படைத் தன்மையும் இருக்க வேண்டும்” என்று முதல்வர் விஜய் கூறினார்.
திங்கள், 29 ஜூன், 2026
50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் முகாம்
சென்னை,
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 50 லட்சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்னை பாலவாக்கத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதன்பிறகு, போலியோ பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உட்பட மொத்தம் 43,051 மையங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியும், அவர்களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்மைகளை பரிசாக கொடுத்தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் சோமசுந்தரம், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். அழுது அடம்பிடித்த குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியும், சாக்லேட், பொம்மைகள் வழங்கியும் மருந்து வழங்கப்பட்டது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தொலைதூரம் மற்றும் எளிதில் வந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு நடமாடும் குழுவினர் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். இந்த பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
பிற மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் மருந்து வழங்கப்பட்டது. விடுபடும் குழந்தைகளை அடையாளம் காண, சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் 5 வயதுக்கு உட்பட்ட 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பணியில் 6,564 பேர் ஈடுபட்டனர்.
சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்குள் செவிலியர்கள் வீடு வீடாக வந்து சொட்டு மருந்து வழங்குவார்கள். இன்றும், நாளையும் தற்காலிக மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.டி அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி - பின்னணி குறித்து விசாரணை தீவிரம்
பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 29, 2026, ஆனி 15, பாரபவ வருடம் 03.00 AM
சென்னை,
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி விவகாரத்தில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை, தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ‘கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னை, சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வந்த சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியைச் சேர்ந்த பி.டி அரசகுமார் (59) என்பவர் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்வு, திட்ட அனுமதி உள்பட பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு,உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றி உள்ளார்.
எனவே, பி.டி அரசகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, புகாருக்குள்ளான திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமாரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இவரது பின்னணியில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரும், மேலும் சிலரும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த மோசடியின் பின்னணியில் வேறு யார்? யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பெயர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு, 28 ஜூன், 2026
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் - 2 மதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலக மறுப்பு: வைகோ அதிர்ச்சி
சென்னை,
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக, மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இந்நிலையில், மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய மறுத்துள்ளதால் வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மதிமுகவின் 32-வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., பொருளாளர் செந்திலதிபன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, பூமிநாதன், ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில், 2 எம்எல்ஏக்கள் செந்தில் செல்வன், தி.மு.ராஜேந்திரன் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை.
பொதுக்குழுவில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்து, மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கருத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வலியுறுத்தினர். அவர்களது விருப்பத்துக்கு இணங்க, கூட்டணியில் இருந்து விலகும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் ஊடுருவக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே, கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் உறுதியாக நீடித்தோம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முயன்றதாக பரவலாக செய்திகள் வெளிவந்தன. பரஸ்பரம் எதிர் துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் இப்படி ஒரு ரகசிய உடன்படிக்கையை மேற்கொண்டது உண்மையாக இருக்குமானால், அதைவிட பெரிய அரசியல் மோசடி வேறு இருக்க முடியாது. இந்த தகவலை அறிந்த உடனேயே திமுக உடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தோம்.
மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் ஏற்கெனவே திமுகவில் இணைந்துவிட்டார். கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பொதுக்குழுவில் பங்கேற்காவிட்டாலும், மதிமுகவிலேயே தொடர்வதாக உறுதி அளித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் துணைப் பொதுச் செயலாளர், என் மீதும், என் மகன் துரை வைகோ மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். முதல்வர் விஜய்யிடம் நான் ரூ.50 கோடி வாங்கியதாகவும், சென்னை ஓஎம்ஆர், அண்ணா சாலையில் பிரம்மாண்ட கட்டிடங்களை வாங்கியுள்ளதாகவும் கூறப்படும் புகார்கள் முற்றிலும் பொய்யானவை.
இந்த பழிச்சொற்களுக்குப் பின்னால் இருந்து யாரோ ஒரு சிலர் அவரை இயக்குகின்றனர். எனவே, இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மற்றும் புகார் கூறிய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நாங்கள், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம்.
உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. தவெக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் இருமொழிக் கொள்கையில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தவெக அரசின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கின்றன.
எங்கள் கட்சி எம்எல்ஏவை திமுக தன் பக்கம் இழுத்திருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இதை ‘குதிரை பேரம்’ என்று சொல்வதா, ‘ஒட்டக பேரம்’ என்று சொல்வதா எனத் தெரியவில்லை. மேலும், எங்களது 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால், அவர்களுக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என விஜய் கூறியிருந்தார். ஆனால், எதிர்வரும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வைகோ மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்தும், தலைவர் வைகோ மீதோ, எம்எல்ஏவான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை தலைமை இப்போது மேற்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் 6 மாதம் பொறுத்திருப்போம். கூட்டணி குறித்து தாங்களும், கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். எனவே, பதவி விலகல் தொடர்பாக வைகோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, என்னால் செயல்படுத்த இயலாது. அதனால், பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் - செல்வப்பெருந்தகை மாற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 2026, ஆனி 14, பாரபவ வருடம் 05.00 AM
சென்னை,
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவரது செயல்பாடுகளால் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர், எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 35 தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். ஆனால், ப.சிதம்பரத்தை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வந்து, தேசியத் தலைமையை 28 இடங்களுக்கு ஒப்புக்கொள்ள வைத்தார் செல்வப்பெருந்தகை. இதுதவிர, வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்ததாக தமிழக மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஹசீனா சையத் கிளப்பிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையிலேயே, செல்வப்பெருந்தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்தது.
மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, செல்லக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோரும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியின் முழு ஆதரவுடன் மாநிலத் தலைவர் பதவியை மாணிக்கம் தாகூர் கைப்பற்றியுள்ளார். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சிவகங்கையில் பிறந்த மாணிக்கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் (என்எஸ்யூஐ) இணைந்தார். கடந்த 2009, 2019, 2024 மக்களவை பொதுத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார். 2014 பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தோல்வியடைந்தார். கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும், பிற மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இருந்தே திமுகவை இவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘திரைக்கதை மன்னன்’ - கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி
சென்னை,
‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி
பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
இயக்குநர் கே.பாக்யராஜ் 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை திரும்பிய
அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பாக்யராஜ் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் விஜய், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா வுக்கு ஆறுதல் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விசிக தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மநீம தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், பிரபு, விக்ரம்பிரபு, ஜெயராம், சார்லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்குநர்கள் மணிரத்னம், பார்த்திபன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, பாண்டியராஜன், சமுத்திரக்கனி, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன். சந்தானபாரதி, இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜின் திரைப்படக் காட்சிகள், பிரபல வசனங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். பாக்யராஜ் மறைவையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசை அமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனித நேயம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேசும்; காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரைஉலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.
இறுதிச் சடங்கில் அரசு மரியாதை: திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார். யதார்த்தமான நடிகர், இயக்குநர் என்று அறியப்பட்டவர் கே.பாக்யராஜ். அது மட்டுமின்றி, தனது தனிச் சிறப்பான பாணியால் எதிர்பாராத, அதேநேரம் ரசிக்கக்கூடிய திருப்பங்களைக் கொண்ட திரைக்கதை அமைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர்.
அவர் இயக்கிய படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றன. அதனால், இந்திய அளவில் ‘திரைக்கதை மன்னன்’ என்று கொண்டாடப்பட்டார். முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு, பாக்யராஜ் உடல் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
இயக்குநர் பாரதிராஜா கடந்த 10-ம் தேதி காலமானார். தனது குருவான பாரதிராஜா மறைந்த 17-வது நாளில் பாக்யராஜ் மறைந்தது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனி, 27 ஜூன், 2026
போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி 3 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் - அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட 15,000 பேர் பங்கேற்பு
சென்னை,
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார். ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளும் மாரத்தானில் கலந்துகொண்டனர்.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற கருத்துடன் நேற்று மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த முதல்வர் விஜய், விழிப்புணர்வுப் பலகையில் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ், ஸ்போர்ட்ஸை எடு, ட்ரக்ஸை விடு’ என்று எழுதி கையெழுத்திட்டார். அவரது தலைமையில் அனைவரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன்பிறகு, மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இருந்து தீவுத்திடல் வரை மாரத்தான் ஓட்டம் தொடங்கியது.
முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 கி.மீ. தூரம் நடைபெற்ற ஓட்டத்தில், ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இவர்களுடன் முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், மரியவில்சன், ரா.குமார், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், விளையாட்டுத் துறை செயலர் சந்தீப்நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாநகராட்சி ஆணையர் சமீரன், மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உள்ளிட்டோரும் மாரத்தானில் பங்கேற்று ஓடினர். பின்னர், வீரர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியின் முடிவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழக வரலாற்றில் வேறு எந்த முதல்வரும் மாரத்தான் ஓடியது இல்லை. முதல்வர் விஜய்தான் முதல்முறையாக 3 கி.மீ. தூரம் வரை மாரத்தான் ஓடியுள்ளார். அவரைப் போலவே தமிழகமும் ஆரோக்கியமாக மாறும்” என்றார்.முதல்வர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடும் சட்ட நடவடிக்கை கள் மூலமாகவும் போதைப் பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணைநின்று, போதைப் பொருள் இல்லாத, பாதுகாப்பான, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 26 ஜூன், 2026
“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” - முதல்வர் விஜய்யின் ‘அப்பாவைக் காணோம்’ குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026, ஆனி 12, பாரபவ வருடம் 03.00 AM
திருவாரூர்,
தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “என்னை எங்கேயும் தேட வேண்டாம்; நான் மக்கள் மனதில் இருக்கிறேன்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
பின்னர் விழாவில் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் திறக்க முடியவில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சியில் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் எடுத்துச் சொல்லிப் பேசினார்.
ஆனால் முதல்வராக உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், “எங்கே உங்கள் அப்பாவை காணோம்!” என்கிறார். அப்பாவை அங்கே தேடாதீர்கள். அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சட்டப்பேரவையில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன்.
கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத் தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது, சென்றிருக்கிறேன். நான் ஆய்வுக் கூட்டம் நடத்தியதைப் போல யாரும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி இருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள்.
மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்துள்ளேன் அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும், இந்த தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதல்வர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் முதல்வர், கருணாநிதி கூட்டணி அமைத்தால் கூட்டணி கட்சியை பாதுகாப்பாக வைத்திருப்பார், அவர்களாகத்தான் கூட்டணியை விட்டு போவார்களே தவிர, வெளியேற்ற மாட்டார்.
அந்த வழியில்தான் நான் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனையும் பரிசீலிப்போம்,” என்றார்.
இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 16, 2026, ஆனி 32, பாரபவ வருடம் 07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...






















