செவ்வாய், 5 மே, 2026

தமிழக சட்டசபை தேர்தல் - அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம்

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  மே 05, 2026, சித்திரை, 22, பாரபவ வருடம் 04:05 AM

சென்னை, 

2026 தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. 

திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி களம் கண்டது. 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 233 (எடப்பாடி நீங்கலாக) தொகுதிகளிலும், சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

இதில், கூட்டணி வாரியாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்ட தொகுதிகளும், அதில் வெற்றி பெற்ற இடங்களின் விவரமும் வருமாறு:-. 

தனித்து போட்டி

 தமிழக வெற்றிக் கழகம் (விசில்) - 233 - 108-ல் வெற்றி.

திமுக கூட்டணி - 73-ல் வெற்றி 

திமுக (உதயசூரியன்) - 164 - 54

காங்கிரஸ் (கை) - 28 - 5

தே.மு.தி.க. (முரசு) - 10 - 1

விடுதலை சிறுத்தைகள் கட்சி (பானை) - 8 - 2

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (கதிர் அரிவாள்) - 5 - 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (அரிவாள் சுத்தியல்) - 5 - 2

ம.தி.மு.க. (உதயசூரியன்) - 4 - 2

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஏணி) - 2 - 2

மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்) - 2 - 1

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்) - 2 - 1

மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்) - 1 - 1

எஸ்.டி.பி.ஐ. (உதயசூரியன்) - 1 - 0

முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்) - 1 - 0 

தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்) - 1 - 0

அதிமுக கூட்டணி - 53-ல் வெற்றி

அதிமுக (இரட்டை இலை) - 165 - 47

பாஜக (தாமரை) - 27 - 1

பாமக (மாம்பழம்) - 18 - 4

அமமுக (குக்கர்) - 11 - 1

தமாகா (தாமரை) - 5 - 0

புதிய நீதிக்கட்சி (இரட்டை இலை) - 1 - 0

இந்திய ஜனநாயக கட்சி (இரட்டை இலை) - 2 - 0

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தாமரை) - 1 - 0

புரட்சி பாரதம் (இரட்டை இலை) - 1 - 0

சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் (இரட்டை இலை) - 1 - 0 

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் (இரட்டை இலை) - 1 - 0 

தனித்து போட்டி 

நாம் தமிழர் கட்சி (விவசாயி) - 234 - 0

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  மே 05, 2026, சித்திரை, 22, பாரபவ வருடம் 03:45 AM

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் த.வெ.க. வெற்றி பெற்று, 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.

என்றாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு த.வெ.க.வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 

அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான், ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். ஆனால், த.வெ.க. 108 தொகுதிகளில்தான் முன்னிலை வகிக்கிறது.

த.வெ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்து என்ன நடக்கும்?.

த.வெ.க. தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். 

இதில், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்.

அதேநேரத்தில், அக்கட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும். 

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால், மேலும் ஒரு இடம் குறையும். அப்படி, பார்க்கும்போது, த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தற்போதைய நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வீதம் 4 இடங்களும், தே.மு.தி.க.விற்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன. 

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.விற்கு 4 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 1 இடமும், அம.மு.க.வுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன. 

தி.மு.க., அ.தி.மு.க. இரு கூட்டணிகளிலும் உள்ள பிற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.விற்கு கூடுதலாக 21 இடங்கள் கிடைக்கும். 

அதன்படி கணக்கிடும்போது 108+21 என்றளவில் 129 இடங்களை பெற முடியும். ஆனால், அவ்வளவு கட்சிகளின் ஆதரவும் த.வெ.க.வுக்கு தேவையில்லை.

12 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது. இந்த கணக்கு ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் நாளை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வருகை தருகிறார். 

தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு 2 வாய்ப்புகளை அவர் வழங்குவார். 

ஒன்று, த.வெ.க. தலைவர் விஜய்யை அழைத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறுவார். அல்லது, தனக்கு ஆதரவு தரும் கட்சிகளிடம் இருந்து கடிதங்களை பெற்று, அதை தன்னிடம் வழங்கும்படி சொல்வார்.

118 இடங்களுக்கு மேல் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை கவர்னர் வழங்குவார்.

அவ்வாறு ஆதரவு கிடைக்காமல் போனால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காமல் போகும்.

அதுபோன்ற நிலைமை ஏற்பட்டால், இரண்டாவதாக அதிக இடங்களை பெற்றுள்ள தி.மு.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் கோருவார்.

அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால், அடுத்த 6 மாதங்கள் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெறும். அதன் பின்னர் சட்டசபை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் மீண்டும் நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் - பாமக, - விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு பெற முயற்சி

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  மே 05, 2026, சித்திரை, 22, பாரபவ வருடம் 03:25 AM

சென்னை, 

சட்டசபை தேர்தல் முடிவில், த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., 106 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். அதன்படி, த.வெ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

இதுகுறித்து, த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக, த.வெ.க., உருவெடுத்திருப்பது மிகப்பெரிய வெற்றி. ஆனால், ஆட்சி அமைக்க போதுமான பலம் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கவே காங்கிரஸ் முயற்சி செய்தது.

அதற்கு தடையாக இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தோல்வி அடைந்து விட்டார். இந்நிலையில், விஜய்க்கு காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல் போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போதே, ஆட்சி அமைக்க உதவுமாறு, விஜய் கோரிக்கை வைத்தார். ஆனால், 'தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும்' என, ராகுல் சொல்லி இருக்கிறார்.

ஒருவேளை காங்கிரஸ் ஆதரவு கிடைத்தாலும், த.வெ.க.,வுக்கு ஆட்சி அமைப்பதற்கான முழு பலம் கிடைக்காது. எனவே, ஐந்து தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பா.ம.க.,விடம் பேச்சு நடத்தப்படுகிறது. விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணியுடன் நெருக்கமாக உள்ளார்.

அதன்படி, அவரிடம் த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்க, ஜான் கேட்டுள்ளார்; ஆனால், அன்புமணி இன்னும் தன் முடிவை அறிவிக்கவில்லை.

ஒருவேளை இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒருகட்சி வரவில்லை என்றால், கூடுதலாக கட்சிகளுடன் பேச்சு நடத்த வேண்டி உள்ளது. அதன்படிதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., வெங்கடேசன் வாயிலாக, அக்கட்சியுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் பேச்சு நடத்தப்படுகிறது.

அதேபோல், தி.மு.க., கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்டுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சு நடக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியிடமும் த.வெ.க., சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆதரவு கோரும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில், ஜான் ஆரோக்கியசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில், இத்தனை சிறு கட்சிகளுடன் பேச்சு நடத்தினாலும், பெரும்பான்மைக்கு கூடுதலாக ஒரு இடமே கிடைக்கும் என்பதால், அ.தி.மு.க.,விடம் ஆதரவு கேட்டு பெறலாம் என்ற யோசனையையும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், அக்கட்சியின் தலைவர் விஜயிடம் முன் வைத்துள்ளனர்.

இதையடுத்து, அ.தி.மு.க., தரப்பிடம், த.வெ.க., தரப்பில் பேசத் துவங்கி உள்ளனர். ஒருவேளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அதற்கு ஒத்துவராத பட்சத்தில், அக்கட்சியை இரண்டாகப் பிளந்து, 24 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெறும் மாஸ்டர் பிளான் திட்டமும் உள்ளது.

அக்கட்சியில் இருந்து வெளியேறி, த.வெ.க.,வில் முக்கிய தலைவராக இருக்கும் ஒருவர் வாயிலாக, இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு - மாமல்லபுரத்தில் தங்க ஏற்பாடு

ஆட்சி அமைக்க தேவையான முழு பலத்தை, த.வெ.க., பெறவில்லை. இதனால், வேறு சில கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. 

இந்நிலையில், வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் சான்றிதழை பெற்று, சென்னையை அடுத்த, மாமல்லப்புரத்தில் உள்ள, 'போர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன்' ஹோட்டலுக்கு, இன்று மதியத்துக்குள் வர உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் விஜய் சந்திக்க உள்ளார். அதேநேரத்தில், ஆட்சி அமைக்கும் வரை, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை, அதே ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனி ஒருவனாக வென்ற 'ஜனநாயகன்' - 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  மே 05, 2026, சித்திரை, 22, பாரபவ வருடம் 03:00 AM

சென்னை, 

சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்தது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவியது. 

26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்த ஆளுங்கட்சியான தி.மு.க. 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தே.மு.தி.க. 10, விடுதலை சிறுத்தைகள் கட்சி 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5, ம.தி.மு.க. 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டாலும், அ.தி.மு.க. 165, பாஜக 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5, புதிய நீதிக்கட்சி 1, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 தொகுதிகளிலும், இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

நடிகர் விஜய் த.வெ.க.வை தொடங்கிய போதே, 'எங்கள் கட்சியுடன் யாரும் கூட்டணிக்கு வரலாம். கூட்டணிக்கு வந்தால், ஆட்சியிலும் பங்கு தரப்படும்' என்று அறிவிப்பு வெளியிட்டார்.

தேசிய கட்சியான காங்கிரஸ், த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி 70 தொகுதிகளை உறுதி செய்ததாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை அக்கட்சி உறுதி செய்தது.

இப்படி, 'கடை விரித்தும் கொள்வார் இல்லை' என்ற நிலையில், சட்டசபை தேர்தலை தனித்தே சந்திக்க வேண்டிய நிலை த.வெ.க.வுக்கு வந்தது.

அதுவும் ஒரு வகையில் அக்கட்சிக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது. தற்போது, த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்துள்ளது.

பெரும்பாலான த.வெ.க. வேட்பாளர்கள் யார்? என்று மக்களுக்கே தெரியாத போதும், விஜய் முகத்தை வைத்து விசில் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர்.

மொத்தத்தில், தனி ஒருவனாக 'ஜனநாயகன்' விஜய் வென்றிருக்கிறார்.
 

திங்கள், 4 மே, 2026

இன்று வாக்கு எண்ணிக்கை - தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்?

 
 
 
 பதிவு:  திங்கட்கிழமை,  மே 04, 2026, சித்திரை, 21, பாரபவ வருடம் 02:25 AM

சென்னை, 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல் 23) நிறைவடைந்த நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. 

இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்? மக்கள் தீர்ப்பு யாருக்கு? என்ற பெரும் எதிர்பார்ப்பில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

தி.மு.க. மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா? அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுமா? தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற கேள்விகளுக்கு இன்று தெளிவான பதில்கள் கிடைக்கவுள்ளன.

காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவு வரை கட்டத்துக்கட்டமாக வெளியாகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும். 

வாக்கு எண்ணும் பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் பணிகள் நடைபெறுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடாக 70 கம்பெனி துணை ராணுவப்படையினர் உட்பட 18 ஆயிரம் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்க தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிட்டுள்ளனர். 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்கும் முக்கிய நாள் இன்று என்பதால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 

ஞாயிறு, 3 மே, 2026

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் - புதிய இணையதள முகவரி வெளியீடு


 பதிவு:  ஞாயிற்றுக்கிழமை,  மே 03, 2026, சித்திரை, 20, பாரபவ வருடம் 03:45 AM

சென்னை, 

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை ) திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் 85 சதவீத வாக்குப்பதிவும், புதுச்சேரியில் 90 சதவீத வாக்குப்பதிவும், கேரள மாநிலத்தில் 78 சதவீத வாக்குப்பதிவும், அசாம் மாநிலத்தில் 85 சதவீத வாக்குப்பதிவும், மேற்கு வங்காளத்தில் முதல் கட்டத்தில் 93 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 92 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகி இருந்தன. 

இந்நிலையில் இந்த 5 மாநில தேர்தல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக https://results.cci.gov.in/ என்ற இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. 

இந்த இணையதள முகவரியில் வருகிற 4-ந் தேதி காலை 8 மணி முதல் 5 மாநில தேர்தல் முடிவுகளை தனித் தனி யாக உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

இது தவிர 'ECINET' மற்றும் 'Voter Helpline' என்ற செல்போன் செயலிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

46,313 டன் சமையல் எரிவாயுவுடன் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இந்திய கப்பல்

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை,  மே 03, 2026, சித்திரை, 20, பாரபவ வருடம் 03:10 AM

புதுடெல்லி, 

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. 

இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள்.  இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 

இதனால், பதற்றம் சற்று தணிந்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை.

இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது. இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. 

இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.  எனினும் போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.

இந்த மோதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  எனினும், இந்திய கப்பல்களுக்கு ஈரான் எந்த நெருக்கடியையும் அளிக்கவில்லை.

அவை பாதுகாப்பாக கடந்து இந்தியாவை வந்தடைந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், எம்.டி. சர்வ சக்தி என்ற பெயரிடப்பட்ட மார்ஷல் தீவுகள் கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று 46,313 டன் சமையல் எரிவாயுவை சுமந்து கொண்டு, ஹார்மூஸ் ஜலசந்தியை இன்று பாதுகாப்பாக கடந்து வந்துள்ளது.

அந்த கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 20 ஊழியர்கள் உள்ளனர்.

இந்த கப்பல் விசாகப்பட்டினத்திற்கு வருகிற 13-ந்தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...