திங்கள், 27 ஏப்ரல், 2026
மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - அர்ச்சனா பட்நாயக்
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.
வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்
வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் துவங்கும்.
முதலில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தபால் வாக்குகள்
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 லட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80 சதவீதம்) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sector-ல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.
85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர்.
இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8 வரை பெறப்படும்.
வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம்
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெப்பம் அதிகளவில் இருப் பதை உணர முடிகிறது.
வெப்பத்தை அதிகளவில் உணரச் செய்யக் கூடிய 'சூப்பர் எல்நினோ' அக்டோபர் மாதத்தில் உருவாக இருப்பதால், நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் (2027) வெப்பத்தின் கொடுமை சற்று அதிகமாகவே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
அதற்கேற்ப தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கோடை மழைக்கு சாதகமான சூழல் எதுவும் இல்லாத காரணத்தாலும் வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், வடக்கு உள்மாவட்டங்களிலும் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதில் அதிகபட்சமாக வேலூரில் வெயில் அதிகமாக சுட்டெரிக்கிறது.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு அதாவது இன்று (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (வியாழக்கிழமை) வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சி யஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
இதேபோல், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும், 30-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் எனவும், அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் கடுமையாக இருக்கும் என்றும், சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந் திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலான காலகட்டங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு அவசியம் இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதாவது குடை எடுத்து செல்வது, தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத் தப்பட்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் 28-ந்தேதிக்கு பிறகு கோடை மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள் என ஆங்காங்கே கோடை மழை தீவிரம் அடையக் கூடும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறினார்.
மே 1 அல்லது 2-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என மற்றொரு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவானால் அது வெப்ப அலை என்று கூறப்படுகிறது.
மே 1-ந்தேதிக்கு பிறகு கோடை மழை ஆங்காங்கே பெய்ய வாய்ப்பு இருப்பதால் வெப்ப அலை வீசுமா? என்பதை அப்போதுள்ள சூழலை பொறுத்தே கணிக்க முடியும் என சொல்லப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் செல்வப்பெருந்தகை மாற்றம் - தமிழக காங்கிரஸுக்கு அடுத்த தலைவர் யார்?
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஓரிரு தினங்களில் தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கிற தகவல் வெளியாகியிருப்பதால் சத்தியமூர்த்தி பவன் அனல் தகிக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அவரது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியிலேயே நிறைவடைந்துவிட்டது. அழகிரி மீது ஏராளமான புகார்கள் தலைமைக்கு சென்றபோதும், அகில இந்திய தலைமையில் நிலவிய குழப்பத்தால் தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவர் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே சிபாரிசில் கடந்த 2024-ல் தலைவர் பதவியை தனதாக்கிக் கொண்டார், செல்வப்பெருந்தகை.
தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக செல்வப்பெருந்தகை செயல்படுவதாக மிகக்குறுகிய காலத்திலேயே சத்தியமூர்த்தி பவனில் இருந்து டெல்லிக்கு புகார்கள் பறக்க தொடங்கின. ஆனாலும் கார்கேவின் ஆதரவு இருந்ததால் அவரது பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் செல்வப்பெருந்தகையை மாற்ற அகில இந்திய தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து சத்திய மூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 35 தொகுதிகளிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார்.
ராகுல் காந்தி வருத்தம்
ஆனால் ப.சிதம்பரத்தை கூட்டணி பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவந்து, வெறும் 28 இடங்களுக்கு அகில இந்திய தலைமையை ஒப்புக்கொள்ள வைத்தார் செல்வப்பெருந்தகை. இதில் ராகுல் காந்திக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய வருத்தம் உண்டு. தொடர்ந்து வேட்பாளர் தேர்விலும் தனது ஆதரவாளர்களுக்கே செல்வப்பெருந்தகை முக்கியத்துவம் கொடுத்தது பெரும் சர்ச்சையானது. இதன் உச்சமாக, வேட்பாளர்கள் தேர்வில் ‘பணம் விளையாடியதாக’ முன்னாள் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் கொடுத்த அதிரடி பேட்டி டெல்லி மேலிடத்தை முகம் சுளிக்க வைத்தது.
மேலும், பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது என செல்வப்பெருந்தகை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் புதிய தலைவரை நியமிக்க டெல்லி முடிவுக்கு வந்திருக்கிறது. இதைப் புரிந்துகொண்டே, சமீபத்தில் ‘தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார்’ என செல்வப்பெருந்தகை பேட்டியளித்திருந்தார்.
தற்போது தலைவர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், செல்லகுமார், ராஜேஷ்குமார் ஆகியோர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ் அழகிரி, தங்கபாலு போன்றவர்களும் வாய்ப்பை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைமை உறுதி
ஆனால். ஏற்கெனவே மாநிலத் தலைவர் பதவியில் இல்லாத புதியவர்களை நியமிக்கவே டெல்லி தலைமை விரும்புகிறது. போட்டியில் யாருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மிகவும் உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஞாயிறு, 26 ஏப்ரல், 2026
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதி அன்று, தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, கடந்த ஒரு மாதகாலமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிந்துள்ள நிலையில், தற்போது அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய்யும் வரும் மே 4-ம் தேதி ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம்தான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இதுகுறித்து, தவெக வட்டாரங்கள் கூறியதாவது..
பொதுவாக விஜய் தனது படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
தற்போது, தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள 4-ம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்லக் கூடும் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எனவே, அன்றைய தினம் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக இருந்தால், தலைவர் வெளிநாடு செல்லும் முடிவைக் கைவிட்டுவிடுவார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப 5,276 பேருந்துகள் இன்று இயக்கம்
சென்னை,
வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று வழக்கமான 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 3,184 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 5,276 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் சென்னை போன்றபெருநகரங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
கல்லூரிகளிலும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஏப்ரல் 21-ம் தேதி முதல் இயக்கம்
சென்னையில் இருந்து கடந்த 21-ம் தேதி வழக்கமான 2,092 பேருந்துகள், கூடுதலாக 1,339 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.89 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். 22-ம் தேதி முதல் 23-ம் தேதி நண்பகல் 12 மணி வரை, வழக்கமான 3 ஆயிரம் பேருந்துகள், கூடுதலாக 4,206 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 7,206 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4.38 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.
அந்த வகையில், தேர்தலை கருத்தில் கொண்டு 21-ம் தேதி முதல் 23-ம் தேதி மதியம் 12 மணி வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் 6.26 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையே, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 22-ம் தேதி இரவு லட்சக்கணக்கான மக்கள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். அன்று மதியம் முதல் மாலை வரை பேருந்துகள் இயக்கம் சீராக இருந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.
பேருந்து நிலையத்துக்குள் நுழையும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறினர். நீண்ட நேரம் காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தவர்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
வாகன நெரிசலால் தாமதம்
சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் திட்டமிட்டபடி பேருந்துகளை இயக்க முடியவில்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருந்தபயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்து, சில மணி நேரத்தில் பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.
23-ம் தேதி காலை வரை சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல, பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கும் போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பகல் 12 மணி அளவில் நிலைமை சீரடைந்தது.
இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு திரும்ப வசதியாக 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும், மற்ற பகுதிகளில் 2,500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அதேபோல, இன்று சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளுக்கு இடையே 3,345 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வாக்களிப்பதற்காக சென்றவர்கள் மட்டுமின்றி, வாரக் கடைசி நாட்களில் மற்றவர்களும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பு
வாக்குப்பதிவுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் இல்லாதபேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.2,700 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3,200 வரையும், மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2,400 முதல் ரூ.3ஆயிரம் வரையும், கோவையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2,800 முதல் ரூ.3,200 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குடும்பத்துடன் பயணம் செய்யும் நடுத்தர மக்கள் இதனால் அதிக சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து துறையும், ஆம்னி பேருந்து சங்கமும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிவரும் நிலையில், சூழ்நிலையைப் பயன்படுத்தி சில தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ப கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சனி, 25 ஏப்ரல், 2026
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - வரலாற்று வாக்குப் பதிவு சதவீதத்தின் பின்னணி....
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்புகள் வாக்குப் பதிவோடு ஓய்ந்துவிட்டவில்லை. தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் அந்த பரபரப்பை சற்றும் குறைந்துவிடாமல் மே 4 வரை நீட்டிக்கும் போல் தெரிகிறது.
இந்த வரலாற்று வாக்குப் பதிவு சதவீதத்தின் பின்னணியில் எஸ்ஆர்ஐ பணிகள், ஜனநாயகக் கடமையாற்றுவதில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஆர்வம், மகளிர் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளால் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தது என்று 3 காரணங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.
எஸ்ஐஆர் தாக்கம்
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85.15% பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.36 சதவீதம் பதிவானது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீதமும் சென்னை மாவட்டத்தில் 83.74 சதவீதமும் பதிவானது.
இந்த வாக்கு சதவீதங்களே மிகத் தெளிவாக இது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) எதிரொலி என்பதை உறுதி செய்கிறது. இந்தப் பணிகள் நடந்தபோதே வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எஸ்ஐஆர் என்பது வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றே மத்திய அரசு ஆரம்பத்தில் கூறிவருகிறது. போலி வாக்காளர்கள் நீக்கம், டூப்ளிகேஷன் களையப்பட்டதன் காரணமாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வாக்குப் பதிவு சதவீதம் விகிதாச்சாரப்படி அதிகரித்ததாகக் கருதப்படுகிறது.
தமிழகம் மட்டுமல்லாது இதற்கு முன்னர் தேர்தலை எதிர்கொண்ட பிஹார் மற்றும் இப்போது தமிழகத்தோடு தேர்தலை சந்தித்த மேற்கு வங்கத்திலும் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதை சான்றாகக் கூறலாம்.
இளைஞர்களின் எழுச்சி
இரண்டாவதாக ஜனநாயகக் கடமையாற்றுவதில் இளைஞர்களின் எழுச்சி காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் 5.73 கோடி. இதில், சுமார் 1 கோடியே 18 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவீதம். இளம் வாக்காளர்களில் 14.6 லட்சம் முதன்முறை வாக்காளர்கள்.
இந்த முறை களத்தில் தவெக என்ற புதிய கட்சி களம் கண்டது, இளம் தலைமுறை வாக்காளர்களை அதுவும் குறிப்பாக அரசியல் அறிவே அற்ற வாக்காளர்களைக் கூட வாக்களிக்க வைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
விஜய்க்கு வாக்களித்த பலரும் அவரது படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ செல்வது போன்ற கொண்டாட்ட மனநிலையிலும், ’எனக்கு வாக்குரிமை இருக்கிறது, அதைச் செலுத்த முழுக்க அரசியல்வாதியாக இல்லாத சினிமா கம் அரசியல் அந்தஸ்தை தரித்துக் கொண்ட விஜய் இருக்கிறார், எனக்குப் பிடித்த உச்ச நடிகர் அரசியலில் களம் இறங்கியிருக்கிறார், அவரை ஆதரிப்பேன், எனக்குப் பிடித்த நடிகர் அவரது கரியர் உச்சத்தை உதறிவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார், அவரை அரசியலில் வெற்றி பெற வைப்பது எனது கடமை’ போன்ற உணர்வுகளாலேயே அந்தக் கட்சிக்காக வாக்களித்துள்ளனர் என்று தேர்ந்த அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
மேலும், விஜய் தன்னை எம்ஜிஆருக்கு நிகராக நிலைநிறுத்தி, நான் அதேபோன்ற கவர்ச்சியை கொண்டிருக்கிறேன், 1977 புரட்சியை ரீரைட் செய்வேன் என்று வசனம் பேசியதால், அதிமுக அதிருப்தி இளம் வாக்காளர்களின் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்திருக்கலாம் என்றும், திமுகவை அவர் தொடர்ச்சியாக வலுவாக தீவிரமாகத் தாக்கிவந்ததால் திமுக மீதான அபிமானத்தை இழந்த இளைஞர்களையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிலாம் எனக் கூறப்படுகிறது.
நாதக வாக்குகள் கணிசமாக விஜய்க்கு போகும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நிலவிய 4 முனைப் போட்டியில் விஜய் ஒருவராக மூன்று கட்சிகளின் மீதும் வாளைச் சுழற்றி வாக்குகளை சின்னாபின்னமாக சிதறிடித்திருப்பார் என்பதே இப்போதைய கணிப்பாக இருக்கிறது.
குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் இருந்தாலும்கூட உதயநிதியை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே திமுக வளர்த்தெடுத்துவிட்டது. அவரும் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். துணை முதல்வராக அவர் இந்தமுறை பிரச்சாரம் செய்தது திமுக பக்கம் கணிசமாக இளைஞர்களை ஈர்த்திருக்கலாம். இன்னொரு புறம் வாரிசு அடையாளமே அதிருப்தி இளைஞர்களை தவெக பக்கம் தள்ளியிருக்கலாம் என்று கணிக்கின்றனர்.
ஆனால், அதிமுக இதுவரை இரண்டாம் கட்ட இளம் முகங்களை வளர்த்தெடுக்கவில்லை. ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் பலரே இந்த முறையும் வேட்பாளர்களாக இருந்துள்ளனர். விஜய்க்கு வேண்டாம் இங்கேயும் ஒரு துடிப்பான இளைஞர் இருக்கிறார் என்று கொள்ளும் அளவுக்கு தமிழகம் முழுவதும் அறிந்த ‘ப்ராமிஸிங் யூத் கேண்டிடேட்’ அதிமுகவில் இல்லை. அதனால் அதிமுக அதிருப்தி இளைஞர்கள், தவெக பக்கம் சென்றிருக்கலாம் என்றும் கணிக்கின்றனர்.
சினிமா மோகமாக இருந்தாலும், அரசியல் அறிவற்றவர்களாக இருந்தாலும் ஒரு குடிமகனின் அடிப்படைக் கடமையான வாக்குரிமையை செயல்படுத்தும் உந்துதலை விஜய்யின் வருகை தந்துள்ளது. அதுவே, இளைஞர்களின் வாக்களிப்பு அதிகமாக இருந்ததற்கும் காரணம் என்பதை முற்றிலுமாக புறந்தள்ளிவிடமுடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார். இதை இத்தோடு விட்டுவிடாமல் திராவிடக் கட்சிகள் இளைஞர்களை, இளம் முகங்கள் மூலம் அரசியல்மயமாக்குவதை ஒரு பயிற்சி போல் செயல்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இல்லையேல், கல்வியில் முன்னேறிய மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் மாநிலத்தில்தான் இளைஞர்கள் கண்மூடித்தனமாக ஹீரோ ஒர்ஷிப் செய்கிறார்கள் என்பது இழுக்கு. அப்படியொரு ‘கல்ட்’ உருவாவது ஆபத்து. அவர்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று வாக்குகளை சிதறடிப்பர் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தேர்தல் முடிவை எழுதும் பெண் சக்தி
தேர்தல் முடிவை எழுதும் அதிகாரம் பெண் சக்தி வசம் வந்துவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலுமே ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் என்ற போக்கு மாறியதில் இருந்தே இந்த அதிகாரம் அவர்களிடம் சென்ற வரலாறு தொடங்கியதாகக் கொள்ளலாம்.
அதனாலேயே மாநிலங்கள் தோறும், தேசிய அளவிலும் பெண்களை முன்வைத்து பல்வேறு திட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வாக்களித்த பெண் வாக்காளர்கள் சதவீதம் 85.76. ஆண் வாக்காளர்கள் 83.57%.
இந்தத் தேர்தலுக்கு ஆளும் திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் பெண்களுக்கான வாக்குறுதிகளை வாரி வழங்கின. மகளிர் உரிமைத் தொகையை செல்லுமிடமெல்லாம் விமர்சித்த அதிமுக, இந்தத் தேர்தலில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என்று அறிவித்தது. குல விளக்கு திட்டத்தின்கீழ் அனைத்து குடும்பப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்று அறிவித்தது.
தவெக ஒருபடி மேலே சென்று 60 வயது வரையிலான அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 என்று அறிவித்தது.
எங்கள் தேர்தல் அறிக்கையே ‘சூப்பர் ஸ்டார்’ என்று திமுக முன்னிலைப்படுத்தி, மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 வழங்கப்படும், பெண்கள் தங்களுக்கு விரும்பிய வீட்டு உபயோகப் பொருளை வாங்கிக் கொள்ள ரூ.8000-க்கான டோக்கன் வழங்கப்படும் என்று கூறியது. இந்த டோக்கன் அறிவிப்பு பெண் வாக்காளர்களை ஈர்க்கும் என்பதே திமுகவின் கணிப்பு.
அது களத்தில் வேலை செய்ததால் பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தனரா அல்லது விரும்பிய பொருள் என்ற ஆப்ஷன் மீது ஈடுபாடின்றி ’அதிமுக அறிவிப்புகள்’ ஓகே என்று அதற்கு வாக்களித்தார்களா அல்லது இரண்டுமே வேண்டாம் மாற்றம் தான் வேண்டும், அதை நாம் பல காலமாக திரையில் பார்த்து ரசித்த பிரபல சினிமா முகம் தரலாம் அல்லவா? வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா என்று வாக்களித்தார்களா என்பது மே 4 தேர்தல் முடிவு சொல்லும்.
எதுவாக இருந்தாலும் பெண் வாக்காளர்களை கவர்வது, அவர்கள் வாக்குகளை பெறுவது என்பது பிரதானக் கட்சிகள், புதிய கட்சிகளின் வியூகமாக இருந்த நிலையில், அதற்கான பலனாக பெண் வாக்கு சதவீதத்தை கொள்ளலாம்.
பிஹார் தேர்தலுக்கு முன்னர், 'முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்' அம்மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 செலுத்தப்பட்டது. மொத்தமாக ரூ.7,500 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்படும் என பிஹார் அரசு தெரிவித்தது. இது தேர்தலில் சிறப்பாக எதிரொலித்தது. பிஹாரில் ஜேடியு - பாஜக வெற்றிக்கு அதுவே வித்திட்டது என ஒட்டுமொத்த ஊடக உலகமும் குறிப்பிட்டது.
இந்நிலையில், பெண் சக்தி தமிழகத்தின் எதிர்காலத்துக்காக எதை தேர்ந்தெடுத்துள்ளது என்பது மே 4 தெரியவரும். அதற்கான முன்னோட்டத்தை மேற்கு வங்க தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடியும் ஏப்.29-ம் தேதி மாலை வெளியாகும் எக்ஸிட் போல்ஸ் ஓரளவுக்கு கட்டியங்கூறும் என எதிர்பார்க்காலம்.
வெள்ளி, 24 ஏப்ரல், 2026
தமிழகத்தில் 84.41% சதவீத வாக்குப்பதிவு - வாக்காளர்கள்... ஆர்வத்துடன் திரண்டனர் - அசம்பாவிதம் எதுவும் இல்லை - மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
சென்னை,
தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்களித்ததால், வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14.59 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் உட்பட மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர், 83,875 காவல் துறையினர், 40,427 காவல் துறை அல்லாத முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாக்குச்சாவடி பணியில் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இயந்திரங்கள் பழுது, வாக்குப்பதிவு தாமதம் போன்ற சிக்கல்கள் குறைவாகவே இருந்தன.
வாக்குச்சாவடிகளின் உள்ளே மற்றும் வெளியே தலா ஒரு கண்காணிப்பு கேமரா என மொத்தம் 1.50 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னையில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களை உற்சாகமாக வரவேற்று, மகிழ்ச்சியுடன் வாக்களிக்க வைத்தனர்.
5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, நுண்பார்வையாளர்கள் மேற்பார்வையில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பின்னர் மாதிரி வாக்குகளை அழித்து விட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வெயிலை தவிர்க்கும் விதமாக, காலை 7 மணிக்கே முதியோர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குகளை செலுத்தினர். சக்கர நாற்காலி மூலம் முதியோர், மாற்றுத் திறனாளிகளை அழைத்துவர தன்னார்வலர்கள் உதவினர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு பகுதிகளிலும் புதுமணத் தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர்.
காலை முதலே வாக்குப்பதிவு
விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்குள்ளாக 17.69 சதவீத வாக்குகளும், பிற்பகல் ஒரு மணிக்குள் 56.81 சதவீத வாக்குகளும் பதிவாகின. குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து அதிக அளவில் வாக்களித்தனர். இதனால், தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டி பதிவாகியுள்ளது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அவரது குடும்பத்தினர், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வாக்களித்தனர்.
சில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நீடித்தது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. பின்னர், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம் முழுவதும் 63 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு அறையில் (‘ஸ்டிராங் ரூம்’) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
எஸ்ஐஆர் பணியால் கிடைத்த பலன்
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.86 சதவீதம் பதிவானது. சென்னை மாவட்டத்தில் 83.09 சதவீதம் பதிவானது.
முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.63 சதவீதம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.94 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.15 சதவீதம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகின.
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...





