சனி, 17 ஜனவரி, 2026
இன்று காணும் பொங்கல் - தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு - மெரினாவில் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு
சென்னை,
காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை முதல் பட்டினப்பாக்கம் வரை கடலில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் 16 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பொதுமக்கள் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களுக்கு குடும்பம், குடும்பமாக சென்று உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை முழுவதும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் 1,500 ஊர்க்காவல் படையினர் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப்பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்க கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் கைகளில் பிரத்யேக அடையாளப் பட்டை (பேண்ட்) கட்டிவிடப்படுகிறது.
மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் 4 ட்ரோன் கேமராக்கள் என மொத்தம் 8 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் அதிக திறன் கொண்ட ‘ஏஐ’ ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அவை மூலம் கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கைத் தகவல்களை ஒலிபரப்பி வருகின்றனர்.
கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சி,செம்மொழி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா, பொழுதுபோக்கு தலங்கள், பூங்காக்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளி, 16 ஜனவரி, 2026
சென்னையில் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகவும், பாதுகாக்கவும் கொண்டாட கமிஷனர் அருண் சிறப்பு நடவடிக்கை - கடற்கரையில் குளிக்கத் தடை
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 06:10 AM
சென்னை,
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டுவதற்காக சென்னை காவல்துறை கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
17–ந் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக கமிஷனர் ஆ.அருண் உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16 ஆயிரம் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை மூலம் விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில்
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும், அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு வான்தந்தி கருவி (Walky Talky), மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, வாட்சப் குழு அமைக்கப்பட்டும், பைனாகுலர், ட்ரோன் கேமிரா மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும் மற்றும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும். காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு அடையாள அட்டை
குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை: கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணும் பொங்கலன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஒட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள். சென்னை பெருநகர காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடித்து மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விருப்பத்துக்கு ஏற்ப பேருந்துகளில் பயணம் செய்யும் ‘சென்னை உலா’ - அமைச்சர் சிவசங்கர் துவக்கினார் - ரூ.50 கட்டணத்தில் நாள் முழுக்கச் சுற்றலாம்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் – “சென்னை உலா” – விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் சிறப்பு சுற்றுவட்ட பாரம்பரியப் பேருந்து இயக்கத்தை, இன்று சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். அதோடு பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
“சென்னை உலா” பேருந்து – “ஹாப் -ஆன் ஹாப் -ஆஃப்” சேவைகளுடன், முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட வட்டச் சுற்றுப் பாதையில் இயக்கப்படும், இதனால் பண்டிகைக் காலத்தில் நகரின் பாரம்பரிய அடையாளத்தை சென்னைவாழ் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளிக்க முடியும்.
* பழங்கால, பாரம்பரியம் -1980களின் காலகட்ட பேருந்துகள் — சென்னையின் பொதுப் போக்குவரத்து பரிணாமத்தை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* பயணிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்தத்திலும் ஏறவும் இறங்கவும் கூடிய ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் (HO-HO)மாதிரி – அணுகல் மற்றும் வசதி உள்ளது.
* குறிப்பாக மகளிர், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பள்ளி குழுக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நன்மை பயக்கும்.
* இந்தப் பாரம்பரியப் பேருந்தில், மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒன் செயலி சிறப்பு சேவைகள்:
சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பயணச்சீட்டு மூலம் நாள் முழுவதும் பயணம் செய்வதற்குரிய கட்டணம் – ரூ. 50 மட்டுமே.
சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மெரினா கடற்கரை மற்றும் நடத்துனரிடம் இருந்து இதற்குரிய பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், சென்னை ஒன் செயலி வழியாக மின்னணு பயண சீட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சொகுசுப் பேருந்துகட்டணத்தில் மற்ற பேருந்துகளைப் போல இப்பேருந்தில் பயணிக்கலாம்.
16ந் தேதி முதல் 18ந் தேதி வரை
பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த சேவை ஜனவரி 16–18 காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும். வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும்.
அடுத்தடுத்த பேருந்து சேவை 30 நிமிட இடைவெளியுடன் இருக்கும். இனி வரும் விழாக்களிலும் இப்பேருந்துகள் இயக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர், போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வியாழன், 15 ஜனவரி, 2026
பொங்கல் பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்: தலைவர்கள் வாழ்த்து!
பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 06:30 AM
சென்னை,
பொங்கல் பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் செழிப்பு, மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைவர்கள் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி
தமிழ் கலாச்சாரத்தையும், இயற்கையுடனான நமது பிணைப்பையும் பொங்கல் கொண்டாடுகிறது. இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். இயற்கைக்கு மரியாதை செலுத்துவதை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற பொங்கல் நம்மை ஊக்குவிக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி
உலகம் முழுவதும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல் வாழ்த்துகள். ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நிரப்பி, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை வலுப்படுத்தி, 2047-ம் ஆண்டுக்குள் நம்மை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி இப்பண்டிகை வழிநடத்தட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள், தைத்திருநாள், உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாக திகழ்வது பொங்கலாகும். உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக் கோலம், விளையாட்டுப் போட்டிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழகமெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைய எனது நல் வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
உழவுத் தொழிலை மையமாகக்கொண்ட தமிழரின் வாழ்வியலோடு இணைந்த பண்பாட்டுக் கொண்டாட்டமான பொங்கல் திருநாளில், உலகத் தமிழர் அனைவருக்கும் எனது உளமர்ந்த பொங்கல் வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
உழைப்பை போற்றும் உன்னத திருவிழாவான இந்த நன்னாளில் இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கி, நம் அனைவரின் உள்ளத்திலும் ஊக்கமும், உத்வேகமும் சிறந்து விளங்கட்டும்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தி.க. தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, மநீம தலைவர் கமல்ஹாசன், தவாக தலைவர் வேல்முருகன், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, பெருந் தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பாஜக நிர்வாகி சரத்குமார், இந்திய கிறிஸ்தவ மதச் சார்பற்ற கட்சி நிறுவனர் எம்.எஸ்.மார்டின், இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் நாகூர் ராஜா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊர்களில் உற்சாகம்
சென்னை, கோவை, மதுரை,திருப்பூர், திருச்சி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அங்கு தங்கள் உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
டெல்லியில் அமைச்சர் முருகன் இல்லத்தில் பொங்கல் விழா - பிரதமர் மோடி பங்கேற்பு - உலகம் முழுவதும் கொண்டாடும் விழா என பெருமிதம்
பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 05:30 AM
புதுடெல்லி,
டெல்லியல் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார்.
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ‘ஒரே பாரதம் உன்னதபாரதம்’ என்ற கருப்பொருளில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கரும்பு, வாழை தோரணம்
இதையொட்டி எல்.முருகன் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
“ஒரே பாரதம் – உன்னத பாரதம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கன்றுகளுக்கு உணவு வழங்கினார். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.
தமிழ் பொங்கல் வாழ்த்து
விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறி தன் உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழா. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான் பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்துதமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஆயிரம் ஆண்டுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதார பண்டிகை இது. தமிழ் கலாசாரம் என்பது முழு தேசத்தின் ஒரு பொதுவான பாரம்பரியம்.
இயற்கையின் மீதான நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளுக்குள் நின்றுவிடாமல், அது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்பதை பொங்கல் பண்டிகை மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது.
கடந்த ஆண்டு, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாரம்பரியமான தமிழ் கலாசாரம் தொடர்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. திருக்குறள், விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசுகிறது. மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது.
வாழ்க தமிழ், வளர்க பாரதம்! வாழ்க தமிழ், வளர்க பாரதம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை நிறைவு செய்தார்.
விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல், சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. திருக்குறளை போற்றி பாடல் பாடப்பட்டு நாட்டிய நிகழ்ச்சி, மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை பிரதமர் மிகவும் ரசித்து பார்த்தார்.
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...








